சொல்பவர்-செயல்படுபவர், பாறை-மணல், உயர்த்துதல்-தாழ்த்துதல் என்ற முரண்பட்ட கருத்துக்களை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 6 இவ்வியாழன் காலை நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரை வழங்கினார்.
தன் உறைவிடமான சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில், இவ்வியாழன் காலை நிறைவேற்றியத் திருப்பலியில், மத்தேயு நற்செய்தியிலும், இறைவாக்கினர் எசாயா நூலிலும் கூறப்பட்டுள்ள கருத்துக்களை, தன் மறையுரையில் பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை.
சொல்பவர், செயல்படுபவர் என்ற இரு பிரிவினர், கிறிஸ்தவ வாழ்வின் இருவேறு பாதைகளைத் தெரிவு செய்துள்ளனர் என்பதை, தன் மறையுரையின் முதல் கருத்தாகப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, வெறும் சொற்களை மட்டுமே பயன்படுத்தி, செயலில் இறங்காதவர், வித்தைகள் செய்பவர்களைப்போல் வாழ்கின்றனர் என்று கூறினார்.
கிறிஸ்து என்ற பாறையின் மீது கட்டப்படாமல், இவ்வுலகப் பெருமை, தன்னலம் என்ற மணலில் கட்டப்படும் கிறிஸ்தவ வாழ்வு, வீழ்ச்சிக்கும், பேரழிவுக்கும் உள்ளாகும் என்று திருத்தந்தை, தன் மறையுரையில் எச்சரித்தார்.
உயரத்துதல், தாழ்த்துதல் என்ற முரண்பாட்டை, எசாயா வாசகத்திலிருந்து விளக்கிக்கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்களைத் தாங்களே உயர்த்திக்கொள்வோர் தாழ்வடைவர் என்பதையும், இறைவனால் உயர்த்தப்படுவதே உண்மையான உயர்வு என்பதையும் எடுத்துரைத்தார்.
இறைவாக்கினர் எசாயா கூறும் சொற்கள், அன்னை மரியா பாடிய புகழ்ப்பாடலின் எதிரொலியாக விளங்குகிறது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, தற்பெருமையில் கட்டப்படும் வாழ்வு, நிலைத்து நிற்காது என்று தெளிவுபடுத்தினார்.
கிறிஸ்தவர்களாகிய நாம், சொல்பவரா, செயல்படுபவரா, நம் வாழ்வு கிறிஸ்து என்ற பாறையில் கட்டப்பட்டுள்ளதா, அல்லது உலகப் பெருமைகள் என்ற மணலில் கட்டப்பட்டுள்ளதா, நம்மை நாமே உயர்த்திக் கொள்கிறோமா அல்லது இறைவனால் உயர்த்தப்படுவதற்கு, நம்மையே தாழ்த்திக் கொள்கிறோமா என்ற கேள்விகளை எழுப்ப, திருவருகைக் காலம் தகுந்ததொரு தருணம் என்று, திருத்தந்தை தன் மறையுரையை நிறைவு செய்தார்.
Source: New feed