கிறிஸ்தவ செய்தியாளர்கள் ஒரு வேலையையோ, கடமையையோ மட்டும் நிறைவேற்றுவதில்லை மாறாக, மனித மாண்பையும், தொழில் தர்மத்தையும் நிலைநாட்ட அவர்கள் உழைக்கின்றனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த இதழியல் பட்டப்படிப்பு மாணவர்களிடம் கூறினார்.
செய்தித்துறையில் கத்தோலிக்கர்களை உருவாக்கும் நோக்கத்துடன், ஜெர்மன் கத்தோலிக்கத் தலத்திருஅவை நடத்திவரும் இதழியல் பட்டப்படிப்பில் ஈடுபட்டுள்ள 340 மாணவர்களை நவம்பர் 9, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, செய்தித்துறையில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய கிறிஸ்தவ பண்புகளைக் குறித்துப் பேசினார்.
இரண்டாம் வத்திக்கான் சங்கம் முடிவுற்ற வேளையில், தொடர்புத் துறையில் பணியாற்ற விழைவோருக்கு தகுந்த வழிகளைக் காட்டுவதற்கென்று, ஜெர்மன் தலத்திருஅவை இதழியல் பட்டப்படிப்பைத் துவங்கியது என்பதையும், தற்போது, இந்த பள்ளி, 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது என்பதையும் திருத்தந்தை தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.
உலக ஊடகங்கள், இவ்வுலகைக் குறித்து எதிர்மறையான கருத்துக்களை பரப்பிவரும் வேளையில், கிறிஸ்தவ செய்தியாளர்கள் நம்பிக்கை தரும் நல்ல செய்திகளை மக்களுக்கு வழங்குவது முக்கியம் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையில் வலியுறுத்தினார்.
மக்களை மையப்படுத்தி எழுதப்படும் உண்மைச் செய்திகள், முதல் பக்கத்தில் இடம்பெறவில்லையென்றாலும், உண்மைகளை மறைக்காமல், மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், செய்தித்துறையில் பணியாற்ற விழையும் கிறிஸ்தவர்கள் செயலாற்றவேண்டும் என்ற வேண்டுகோளுடன், திருத்தந்தை தன் உரையை நிறைவு செய்தார்.
Source: New feed