கோவிட்-19 கொள்ளைநோய் கிறிஸ்தவர்களுக்கு விடுத்துவரும் சவால்கள், திருத்தந்தை அண்மையில் வெளியிட்டுள்ள, ‘அனைவரும் உடன்பிறந்தோர்’ (“Fratelli tutti”) என்ற திருமடல், மற்றும், தென் சூடானில் அமைதி திரும்புவது குறித்த நம்பிக்கை, ஆகியவற்றைக்குறித்து, ஆங்கிலிக்கன் சபையின் தலைவர், பேராயர் ஜஸ்டின் வெல்பி அவர்கள், வத்திக்கான் ஊடகத்துறையிடம் தன் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 13ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்தித்ததன் ஓராண்டையொட்டி, இந்த நேர்காணலை வழங்கியுள்ள பேராயர் வெல்பி அவர்கள், கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டுள்ள இவ்வுலகிற்கு, கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து ஆற்றக்கூடிய பணிகளைப்பற்றி கூறினார்.
மனித வாழ்வு எவ்வளவு வலுவற்றது என்பதை நமக்கு உணர்த்தியுள்ள இந்தக் கொள்ளைநோயிலிருந்து விடுதலைபெற, கிறிஸ்தவர்களின் நம்பிக்கை, பெரும் உதவியாக இருக்கவேண்டும் என்றும், இந்த நம்பிக்கையை நாம் வாழ்வாக்கும்போது, சமுதாயத்தின் ஓரங்களில் வாழ்வோர் மீது அக்கறை கொள்ளும்போது, நம் கிறிஸ்தவ அழைத்தல் அர்த்தம் பெறுகிறது என்றும் பேராயர் வெல்பி அவர்கள் எடுத்துரைத்தார்.
கிறிஸ்துவை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள “Fratelli tutti” திருமடல், மிகத் தேவையான ஒரு நேரத்தில் வெளியானது என்பதை, தன் நேர்காணலில் குறிப்பிட்ட பேராயர் வெல்பி அவர்கள், இத்திருமடல், வருங்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள விடுக்கும் ஒரு துணிவான அழைப்பு என்று கூறினார்.
கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை, இஸ்லாமிய தலைமை குரு, மகாத்மா காந்தி, மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர், மற்றும் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு ஆகியோரின் கருத்துக்களை, இத்திருமடலில், திருத்தந்தை உள்ளடக்கியிருப்பதும், இம்மடலின் இறுதியில் கிறிஸ்தவ ஒன்றிப்பு இறைவேண்டல் பதிவாகியிருப்பதும், வரவேற்கத்தக்க முயற்சிகள் என்று, பேராயர் வெல்பி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
சென்ற ஆண்டு, தான், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த வேளையில், அவர் இறுதியாக தன்னிடம், இறைவேண்டல், அமைதி மற்றும் எளிமை என்ற மூன்று சொற்களை நினைவில் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார் என்பதை குறிப்பிட்ட பேராயர் வெல்பி அவர்கள், இந்த மூன்று முயற்சிகளும், கிறிஸ்தவர்களாகிய நம்மை பிணைக்கும் முக்கிய கருவிகள் என்பதையும் எடுத்துரைத்தார்.
Source: New feed