உலக வரலாற்றில் பிறந்த மரியன்னையை பெண்களுள் பேறுபெற்றவராக வணக்கம் செலுத்துவது சரியா?
லூக்காஸ் 1:26 பிதாவாகிய சர்வேசுரன், அதிதூதர் கபிரியேலைத் தனது தூதராக மரியாள் என்ற கன்னிகையிடம் அனுப்பினார்.
வுல்காத்தா என்னும் இலத்தின் மொழி பெயர்ப்பில் “அருள் நிறைந்தவரே வாழ்க!” என்றும் காணப்படுகிறது.
பொது மொழிபெயர்ப்பில், லூக்காஸ் 1:28 வானதூதர் மரியாவுக்குத் தோன்றி “அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார்.
சில முக்கிய கையெழுத்துப் பிரதிகளில் “பெண்களுக்குள் நீர் ஆசீர் பெற்றவர்” என்ற சொற்றொடரும் இவ்வசனத்தில் சேர்ந்து காணப்படுகிறது.
பிரிவினை சபையினரின் வேதாகமத்தில் “கிருபை பெற்றவளே வாழ்க! கர்த்தர் உம்முடனே இருக்கிறார். ஸ்திரிகளுக்குள் நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்று காணப்படுகிறது.
இத்தனை வாழ்த்துக்குப் பிறகு வானதூதர் தாம் கொண்டு வந்த செய்தியை கொடுக்கிறார்.
26 ஆறாம் மாதத்திலே, கபிரியேல் தூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னிகையிடம் அனுப்பினார்.
27 அவள் தாவீது குலத்தவராகிய சூசை என்பருக்கு மண ஒப்பந்தமானவள். அவள் பெயர் மரியாள்.
28 தூதர் அவளது இல்லம் சென்று, ” அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே ” என்றார்.
29 இவ்வார்த்தைகளை அவள் கேட்டுக் கலங்கி, இவ்வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக்கொண்டிருந்தாள்.
30 அப்போது வானதூதர் அவளைப் பார்த்து, ” மரியே, அஞ்சாதீர்: கடவுளின் அருளை அடைந்துள்ளீர்.
31 இதோ! உம் வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.
32 அவர் மேன்மை மிக்கவராயிருப்பார். உன்னதரின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தையான தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.
33 அவர் யாக்கோபின் குலத்தின்மீது என்றென்றும் அரசாள்வார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்றார்.
34 மரியாள் தூதரிடம், “இது எங்ஙனம் ஆகும்? நானோ கணவனை அறியேனே” என்றாள்.
35 அதற்கு வானதூதர், “பரிசுத்த ஆவி உம்மீது வருவார். உன்னதரின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலின் பிறக்கும் திருக்குழந்தை கடவுளுடைய மகன் எனப்படும்.
36 இதோ! உம் உறவினளான எலிசபெத்தும் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறாள். மலடி எனப்படும் அவளுக்கு இது ஆறாம் மாதம்.
37 ஏனெனில், கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை” என்றார்.
38 மரியாளோ, “இதோ! ஆண்டவருடைய அடிமை. உமது வாத்தையின்படியே எனக்கு ஆகட்டும்” என்றாள். என்றதும் வானதூதர் அவளிடமிருந்து அகன்றார்.
ஆண்டவரின் இந்த திட்டத்திற்கு தேவமாதா அடிபணிந்து அதை ஏற்றுக்கொண்டார்.
அவ்வாறு அன்னை மரியாள் கடவுளின் ஏக குமாரனை தன் உதரத்தில் தாங்கி இயேசுவின் தாயாகிறார். அதாவது கடவுளின் தாயாகிறார் தேவமாதா!
பாருங்கள்…
தமது அதிதூதர் கபிரியேலையே அனுப்பி எல்லாம் வல்ல கடவுள் அன்னை மரிக்கு வந்தனம் செலுத்துகிறார்.
அத்தகைய பாக்கியம் பெற்ற அன்னை மரியாள், பரிசுத்த ஆவியினால் நிழலிடப்பட்ட பின்பு, அன்னையின் ஆவி பரிசுத்த ஆவியால் அக்களிப்புற்று கடவுளால் களிகூறுக்கின்றது.
லூக்கா 1:48 ” இது முதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்”.
இந்த வாக்குகளை பரிசுத்த ஆவியாரே கூறுகிறார். ஏனெனில் அந்நேரம் அன்னை தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டிருந்தார்.
இப்படிப்பட்ட உன்னத தேவமாதாவை “பேறு பெற்றவள்” என்று தலைமுறை தலைமுறையாகப் போற்ற வேண்டிய கடமையில் இருக்கிறோம்.
இந்நிலையில் எந்த மனிதனாவது அன்னையை பழிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றால் நிச்சயமாக அவரில் அன்னையின் பகைவனான (ஆதியாகமம் 3:15) சாத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
Source: New feed