
கத்தோலிக்கப் பாரம்பரியங்களின் வளமையைப் பாதுகாத்து எல்லாத் தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்லும் நோக்கத்தில் புனித அகுஸ்தீன் சபையைச் சார்ந்த துறவிகள் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
அகுஸ்தினியானம் என்ற இறையியல் கல்வி நிலையம் துவக்கபட்டதன் 50ம் ஆண்டு நிறைவையொட்டி, புனித அகுஸ்தீன் துறவு சபையின் அங்கத்தினர்களையும், அக்கல்வி நிலையத்தின் மாணவப் பிரதிநிதிகளையும் இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு கல்வி நிலையமும், கிறிஸ்துவை அதிகம் அதிகமாக அறிந்து கொள்ள கற்பிப்பதன் வழியாக மனிதனைக் குறித்தும் அறிந்துகொள்ள உதவுகின்றன என உரைத்தார்.
திருஅவையின் வாழ்விலும், நவீனகால சவால்கள் குறித்த கருத்துப் பரிமாற்றங்களிலும் விவேகமுடனும் பொறுப்புணர்வுடனும் பங்குகொள்ள, மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய கடமையை கல்வி நிலையங்கள் பெற்றுள்ளன என்பதை, தன் உரையில் வலியுறுத்தினார் திருத்தந்தை.
ஒருவர் ஒருவருக்காக செபிக்க வேண்டியதன் தேவையையும் எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதர்கள் அகுஸ்தீன், மற்றும், மோனிக்காவின் பரிந்துரையை வேண்டி, தன் உரையை நிறைவு செய்தார்.
Source: New feed