
இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1,2, 10, 25-30
அக்காலத்தில் இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழி தேடிக்கொண்டிருந்ததால் அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை.
யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது. தம் சகோதரர்கள் திருவிழாவிற்குப் போனபின் இயேசுவும் சென்றார். ஆனால் அவர் வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார்.
எருசலேம் நகரத்தவர் சிலர், “இவரைத்தானே கொல்லத் தேடுகிறார்கள்? இதோ! இங்கே இவர் வெளிப்படையாய்ப் பேசிக்கொண்டிருக்கிறாரே! யாரும் இவரிடம் எதுவும் சொல்லவில்லையே! ஒருவேளை இவரே மெசியா என்று தலைவர்கள் உண்மையாகவே உணர்ந்து கொண்டார்களோ? ஆனால் மெசியா எங்கிருந்து வருவார் என்பது யாருக்கும் தெரியாமல் அல்லவா இருக்கும்! இவர் எங்கிருந்து வருகிறார் என்பது நமக்குத் தெரியுமே” என்று பேசிக்கொண்டனர்.
ஆகவே கோவிலில் கற்பித்துக் கெண்டிருந்தபோது இயேசு உரத்த குரலில், “நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன் என்பவை உங்களுக்குத் தெரியும். ஆயினும் நானாக வரவில்லை. என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத் தெரியாது. எனக்கு அவரைத் தெரியும். நான் அவரிடமிருந்து வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே” என்றார்.
இதைக் கேட்ட அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மையசிந்தனை .
இன்னொரு முறை முயற்சி செய்.
மறையுரை.
குரு மரணப்படுக்கையில் இருந்தார். அவருக்கு அருகில் அவரின் சீடன் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டான். குரு மெல்ல அவனை அழைத்து, “சீடனே! ஏன் கவலைப்படுகிறாய்? உனக்காக நான் எப்பொழும் இருப்பேன். கலக்கம் அடையாதே.” உடனே கலங்கிய கண்களுடன் சீடன் கூறினான், “குருவே! நீங்கள் கூறியபடி இறைவேண்டலும் தியானமும் செய்து வருகிறேன். ஆனால், ஆன்மீக உயர்நிலை அடையும் காலம் எப்பொழுது என தெரியவில்லை… எதுவரை எனது ஆன்மீக பயிற்சியை தொடர்வது? உங்கள் காலத்திற்கு பிறகு யாரிடம் நான் கேட்பது?”
அணையும் விளக்கு பிரகாசகமாகச் சுடர்விடும் என்பதைப்போல மிகவும் பிரகாசமான முகத்துடன் சீடனைப் பார்த்தார் குரு. “கவலைகொள்ளாதே. இந்த கட்டிலுக்கு அடியில் ஒரு பெட்டி இருக்கிறது. அதனுள்ளே உனக்குப் பிற்காலத்தில் போதிக்கவேண்டியதை வைத்திருக்கிறேன்… அது அனைத்து விடயங்களையும் போதிக்கும். எனது போதனை தேவைப்படும்பொழுது மட்டும் பெட்டியை திறந்து பார்… எனது ஆசிகள்” எனக் கூறியபடி தன்னுடைய இறுதி மூச்சைவிட்டார். நாட்கள் சென்றன. தனது ஆன்மீகச் சாதனையில் தனக்கு பலன் கிடைப்பதாக சீடனுக்குத் தெரியவில்லை. ‘இறைவேண்டலையும் தியானத்தையும் விட்டுவிடலாமா’ என எண்ணினான். உடனே அவனுக்கு அவனுடைய குரு சொன்னது நினைவுக்கு வந்தது. மறுகணம் அவன் குருவின் போதனையைக் கேட்க பெட்டியைத் திறந்தான். பெட்டியைத் திறந்த அடுத்த நொடியில் அவன் ஞானம் அடைந்தான்.
நாட்கள் சென்றன. சீடன் கூறிய கருத்துகளை மக்கள் ஏற்காமல் கலகம் செய்தனர். மீண்டும் குருவின் போதனையைக் கேட்க பெட்டியை திறந்தான்… உற்சாகத்தோடு பணிசெய்யத் தொடங்கினான். மக்களும் அவனுடைய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர். நாட்கள் சென்றன. இப்பொழுது சீடன் தனது இறுதி காலத்தை அடைந்திருந்தான். அப்பொழுது அந்த சீடன் – இப்பொழுது அவன் குரு – தனது சீடனைக் கூப்பிட்டுப் பேசத் தொடங்கினான்: “எனது அன்பிற்கினிய சீடனே! எனது குரு எனக்கு அளித்த போதனையை உனக்கு அளிக்கிறேன்… எனது போதனை தேவையானபொழுது மட்டும் இந்தப் பெட்டியை திற. எனது போதனை கிட்டும்.” இவ்வாறு சொல்லிவிட்டு அந்த சீடன் இறந்துபோனான்.
இப்பொழுது சீடனுக்குச் சீடனாகப் பரமசீடன் குருவாக மாறியிருந்தான். அவன் தனது ஆன்மீகப் பயணத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதை உணர்ந்தான். உடனே குருவின் போதனையை அறிய பெட்டியை திறந்தான். அதில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது: “இன்னொரு முறை முயற்சி செய்”. இதைப் படித்ததும் அவன் புதிய உத்வேகத்துடன் இன்னும் சிறப்பாகப் பணிசெய்யத் தொடங்கினான்.
சீடனுக்கு மட்டுமல்ல, நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் தொய்வு ஏற்படும்பொழுது ‘இன்னொரு முறை முயற்சிசெய்’ என்ற தாரக மந்திரத்தைப் பயன்படுத்தினால், அது நம்முடைய வாழ்வை இன்னொரு கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்து கிடையாது.
1) பிரச்சினைகளைக் கண்டு பின்வாங்காத இயேசு.
நற்செய்தி வாசகத்தில் இயேசுவைக் கொல்வதற்கான சூழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அப்படியிருந்தும் அவர் யாருக்கும் அஞ்சாமல் மக்களுக்குப் போதித்துக்கொண்டிருக்கின்றார்.
இயேசு ஓய்வுநாளில் உடல்நலம் குன்றியிருந்தவரைக் குணப்படுத்திவிட்டார் என்பதற்காகவும் தன்னை இறைமகன் என்று அழைத்துவிட்டார் என்பதற்காகவும் (இறைமகனை இறைமகனை என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை!) யூதர்கள், அதிலும் குறிப்பாக பரிசேயக்கூட்டம் இயேசுவைக் கொல்வதற்கு வழிதேடுகின்றது (யோவா 5: 1-30). ஆனாலும் இயேசு அவர்கள் தன்னைக் கொல்வதற்கு சூழ்ச்சி செய்கிறார்கள் என்பதற்காக தன்னுடைய இலக்கிலிருந்து பின்வாங்கிவிடவில்லை. மாறாக வெளிப்படையாக மக்களுக்குப் போதிக்கின்றார். இதைப் பார்த்துவிட்டுத்தான் ஒருசிலர், “இவர் இங்கு வெளிப்படையாகப் பேசுகிறாரே… ஒருவேளை தலைவர்கள் இவரை மெசியா என்று ஏற்றுக்கொண்டுவிட்டார்களோ” என்று பேசிக்கொள்கிறார்கள். அதற்கு இயேசு என்ன பதிலளித்தார் என்று தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்
2) இயேசுவை மெசியா என ஏற்க மறுத்த யூதர்கள்.
யூதர்கள் மத்தியில், ‘மெசியா எங்கிருந்து வருவார் என்று யாருக்கும் தெரியாது’ என்ற எண்ணம் இருந்தது. இதன்மூலம் இயேசுவின் ஊர் எது? அவருடைய பெற்றோர் யார்? என்பதை நன்கறிந்திருந்த அவர்கள், ‘அவர் மெசியா அல்ல’ என்ற கருத்தினை முன்வைத்தார்கள். அப்பொழுதுதான் இயேசு, “நான் யார்? என் எங்கிருந்து வந்தேன் என்பவை உங்களுக்குத் தெரியும். ஆயினும் என்னை அனுப்பியவரை உங்களுக்குத் தெரியாது. எனக்குத் தெரியும்” என்கின்றார். இவ்வாறு இயேசு தான் இறைமகன் என்பதை யூதர்களுக்கு எடுத்துச் சொல்கின்றார். அவர்களோ அவர் தன்னைக் கடவுளுக்கு இணையாக்கிக் கொண்டார் என்று அவரைப் பிடிக்க முயல்கிறார்கள். ஆனாலும் அவருடைய நேரம் – அவருடைய பாடுகளின் நேரம் – வராததால், அவர்களால் அவரை ஒன்றும் செய்யமுடியவில்லை.
சிந்தனை.
உண்மையாய் இருக்கின்றது ஓராயிரம் பிரச்சினைகள் வரலாம். இயேசுவுக்கு அப்படித்தான் பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினைகள் வந்துகொண்டிருந்தன. இயேசு அவற்றைக் கண்டு பயப்படாமல், துணிந்து நின்றார். இறுதியில் வெற்றியும் கண்டார். நாமும் நம்முடைய வாழ்வில் வரும் பிரச்சினைகளைக் கண்டு மனம் தளர்ந்து போகாமல், இன்னொரு முறை முயற்சி செய்து கொண்டே இருந்து, இயேசு கண்ட இறையாட்சிக் கனவை நனவாக்குவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
Source: New feed