
இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 31-42
அக்காலத்தில் இயேசுவின் மேல் எறிய யூதர்கள் மீண்டும் கற்களை எடுத்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, “தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள்முன் செய்து காட்டியிருக்கிறேன். அவற்றுள் எச்செயலுக்காக என்மேல் கல்லெறியப் பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார்.
யூதர்கள் மறுமொழியாக, “நற்செயல்களுக்காக அல்ல, இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம். ஏனெனில் மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்” என்றார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்து, “ `நீங்கள் தெய்வங்கள் என நான் கூறினேன்’ என்று உங்கள் மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா? கடவுளுடைய வார்த்தையைப் பெற்றுக்கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைநூல் வாக்கு என்றும் அழியாது. அப்படியானால் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை `இறைமகன்’ என்று சொல்லிக் கொண்டதற்காக `இறைவனைப் பழித்துரைக்கிறாய்’ என நீங்கள் எப்படிச் சொல்லலாம்? நான் என் தந்தைக்குரிய செயல்களைச் செய்யவில்லை என்றால் நீங்கள் என்னை நம்பவேண்டாம். ஆனால் நான் அவற்றைச் செய்தால், என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்; அதன்மூலம் தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்” என்றார்.
இதைக் கேட்டு அவர்கள் அவரை மீண்டும் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார்.
யோர்தானுக்கு அப்பால் யோவான் முதலில் திருமுழுக்குக் கொடுத்துவந்த இடத்திற்கு இயேசு மீண்டும் சென்று அங்குத் தங்கினார். பலர் அவரிடம் வந்தனர்.
அவர்கள், “யோவான் அரும் அடையாளம் எதையும் செய்யவில்லை; ஆனால் அவர் இவரைப்பற்றிச் சொன்னதெல்லாம் உண்மையாயிற்று” எனப் பேசிக்கொண்டனர். அங்கே பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மையசிந்தனை .
இயேசுவை நம்ப மறுத்த யூதர்கள்.
மறையுரை.
ஜெர்மனியில் ஒருவர் இருந்தார். அவருக்குக் கடவுள் நம்பிக்கையே கிடையாது. அதிலும் குறிப்பாக இயேசுவைப் பற்றிய படத்தையோ, சிரூபத்தையோ அல்லது யாராவது ஒருவர் அவரைப் பற்றிப் பேசினாலோ அவருக்கு அவ்வளவு கோபம் வரும்.
அப்படிப்பட்ட மனிதர் தன்னுடைய மனைவிக்குப் பேறுகாலம் வந்ததும், அவரை ஒரு மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்று அனுமதித்தார். அங்கு சென்றபிறகுதான் அவருக்குத் தெரிந்தது, அது அருட்சகோதரரிகளால் நடத்தப்படும் மருத்துவமனை என்று. மேலும் அந்த மருத்துவமனையில் எல்லா அறையிலும் சிலுவை தொங்கிக்கொண்டிருந்தது. இது அவருக்கு கடுஞ்கோபத்தை ஏற்படுத்தியது. உடனே அவர் தன்னுடைய மனைவியிடம், “இந்த மருத்துவமனை வேண்டாம்… வேறொரு மருத்துவமனைக்கு போகலாம்” என்று அவரை அவசரப்படுத்தினார். அதற்கு அவருடைய மனைவி, “உள்ளே வந்துவிட்டோம்… இனிமேல் வேறொரு மருத்துவமணிக்குப் போவது அவ்வளவு நல்லதல்ல” என்று அவரைத் தடுத்து நிறுத்தினார். “அப்படியானால் எனக்குப் பிடிக்காத சிலுவையை, பிறக்கப்போகும் என் குழந்தை பார்க்கக்கூடாது. அதற்காக அந்தச் சிலுவையைத் துணியை வைத்து மறைத்தால்தான் இங்கு பேறுகாலம் நடக்கவிடுவேன், இல்லையென்றால் வேறொரு மருத்துவமனைக்குக் கூட்டிக்கொண்டு போய்விடுவேன்” என்றார்.
அவர் சொன்னதுபோன்று மகப்பேறு அறுவைச் சிகிச்சை நடந்த அறையில் இருந்த சிலுவையானது ஒரு துணியால் மறைக்கப்பட்டு, அதன்பிறகு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அறுவைச் சிகிச்சை முடிவில் ஓர் அழகிய குழந்தை வந்தது. கூடவே ஓர் அதிர்ச்சியான செய்தியும் வந்தது. அது என்னவெனில், குழந்தைக்கு இரண்டு கண்களும் தெரியவே இல்லை. இதை அறிந்ததும் அக்குழந்தையின் தாய் அதிர்ந்துபோனார். உடனே அவர் தன்னுடைய கணவரைக் கூப்பிட்டு, “பார்த்தீர்களா… நீங்கள் நம்முடைய குழந்தை இயேசுவின் முகத்தைப் பார்க்கக்கூடாது என்று நினைத்தீர்கள்… இப்பொழுது நம்முடைய குழந்தை யாரையும் பார்க்கமுடியாதபடி பிறந்துவிட்டதே” என்று கதறி அழுதார். இந்நிகழ்விற்குப் பிறகு இயேசுவை வெறுத்து ஒதுக்கியும் அவர்மீது நம்பிக்கை இல்லாமலும் இருந்த அந்த மனிதர் இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்.
இந்நிகழ்வில் வரும் அந்த ஜெர்மானியரைப் போன்றுதான் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் அவர்மீது நம்பிக்கை கொள்ளாமலும் அவரை இறைமகன் என்று ஏற்றுக்கொள்ளாமல் இருந்தார்கள். இதில் இன்னொரு முக்கியமான விடயம் என்னவெனில், இந்நிகழ்வில் வரும் ஜெர்மானியராவது இயேசுவைக் கடைசியில் ஏற்றுக்கொண்டார். ஆனால் யூதர்களோ கடைசி வரைக்கும் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை.
இயேசுவின் மீது கற்களை எறியத் துணிந்த யூதர்கள்.
நற்செய்தி வாசகத்தில், யூதர்கள் இயேசுவின்மீது கற்களை எறியப் பார்க்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், இயேசு தன்னை இறைமகன் எனச் சொல்லிக்கொண்டார் என்பதாகும். இறைமகனாகிய இயேசு தன்னை இறைமகன் என்று சொல்லாமல், வேறு எப்படிச் சொல்லவேண்டும் என்று யூதர்கள் எதிர்பார்த்தார்கள் எனத் தெரியவில்லை.
யூதர்கள் தன்மீது கல்லெறியப் பார்க்கிறார்கள் என்று தெரிந்ததும் இயேசு அவர்களிடம், ‘நீங்கள் தெய்வங்கள் என நான் கூறுகிறேன்” (திபா 82:6) என்ற இறைவார்த்தையை மேற்கோள் காட்டிப் பேசுகின்றார். திருப்பாடல்களில் வரும் இந்த இறைவார்த்தையின்படி பார்த்தால், இறைவார்த்தையைப் பெற்றுக்கொண்ட எல்லாரும் தெய்வங்கள் – தந்தையால் அனுப்பப்பட்ட இயேசுவும் கடவுள்தான். அப்படியிருந்தும்பொழுது எதையுமே ஏற்றுக்கொள்ளாத யூதர்கள் இயேசுவின்மீது கற்களை எறியத் துணிவதுதான் புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கின்றது.
இயேசுவை நம்பாமல் போனால் கிடைக்கும் தண்டனை.
இயேசு தன்னை இறைமகன் என்று பலமுறை யூதர்களுக்கு எடுத்துச் சொன்னார். அப்படியிருந்தும் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக அவர்கள் அவருக்கு தாங்கள் விரும்பியவாறு செய்தார்கள். இத்தகைய நிலையில்தான் இயேசு தன்னை ஏற்றுக்கொள்ளாமலும் தன்னை நம்பாமலும் இருப்பதால் எத்தகைய தண்டனை கிடைக்கும் என்பதை எடுத்துச் சொல்கிறார். “இருக்கிறவர் நானே என்பதை நீங்கள் நம்பாவிடில் நீங்கள் பாவிகளாய்ச் சாவீர்கள்” (யோவா 8: 24) இதுதான் இயேசு தன்னை நம்பாதவர்கள் அடையப்போகும் தண்டனையாகக் கூறுகின்றார். இயேசு வாழ்வின் ஊற்று (யோவா 5:26) அப்படிப்பட்டவரை நம்பாமல் இருப்பதும் அவருடைய வார்த்தைகளின் படி நடக்காமலும் இருந்தால் நன்மையல்ல, தீமைதான் பெருகும். இதைதான் இயேசு யூதர்களுக்குச் சொல்கின்றார்.
ஆகவே, ஒருவர் இயேசுவின் மீது கொள்ளும் நம்பிக்கையைப் பொறுத்தே அவருடைய வாழ்வும் தாழ்வும் அமைந்திருக்கின்றது என்ற உண்மையைப் புரிந்துகொண்டு வாழ்வது நல்லது.
சிந்தனை.
‘இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்?’ (1 யோவா 5:5) என்பார் தூய யோவான். ஆகவே, நமக்கு எல்லா ஆசியையும் தரும் இயேசுவை இறைமகன் என்று நம்பி ஏற்றுக்கொண்டு, அவருடைய விழுமியங்களின்படி வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
Source: New feed