
2010 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளை உள்ளடக்கிய 8 ஆண்டுகளில், கத்தோலிக்க திருஅவையின் விசுவாசிகள், திருஅவைப் பணியாளர்கள் ஆகியோரின் எண்ணிக்கைகளில் உருவாகியுள்ள மாற்றங்களை மையப்படுத்தி, வத்திக்கான் நாளிதழான L’Osservatore Romanoவில், புள்ளி விவரங்கள் அடங்கிய ஒரு கட்டுரை, ஏப்ரல் 25, இவ்வியாழனன்று வெளியிடப்பட்டது.
2010 மற்றும் 2017 உட்பட்ட எட்டு ஆண்டுகளில், கத்தோலிக்க மக்கள் தொகை 9.8 விழுக்காடு கூடியுள்ளது என்றும், 2010ம் ஆண்டு, 119 கோடியே 60 இலட்சமாக இருந்த கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை, 2017ம் ஆண்டு, 131 கோடியே, 30 இலட்சமாக உயர்ந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆப்ரிக்கக் கண்டத்தில் 26.1 விழுக்காடு, ஆசியாவில் 12.2 விழுக்காடு, ஓசியானியாவில் 12.4 விழுக்காடு, அமெரிக்கக் கண்டத்தில் 8.8 விழுக்காடு, மற்றும் ஐரோப்பாவில் 0.3 விழுக்காடு என்ற நிலையில் வளர்ச்சிகள் நிகழ்ந்துள்ளன.
உலகெங்கும் பணியாற்றும் ஆயர்களின் எண்ணிக்கை, 2010ம் ஆண்டில், 5,104ஆக இருந்தது, 2017ம் ஆண்டில் 5,389ஆக உயர்ந்துள்ளது. உலகெங்கும் பணியாற்றும் மறைமாவட்ட மற்றும் துறவுநிலை அருள்பணியாளர்களின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் சற்று குறைந்து, 2017ம் ஆண்டு 4,14,582ஆக இருந்தது.
அதேவண்ணம், அருள்பணியாளரல்லாத இருபால் துறவியரின் எண்ணிக்கை, 2010 மற்றும் 2017ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 5.7 விழுக்காடு குறைந்து, 2017ம் ஆண்டு 51,535ஆக இருந்தது. உலகத் துறவிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் துறவியரின் எண்ணிக்கையில் வளர்ச்சி காணப்படுகிறது.
உலகின் பல்வேறு நாடுகளில், மறைபரப்புப் பணியில் ஈடுபட்டிருப்போரின் எண்ணிக்கை, 2010ம் ஆண்டிலிருந்து 6.1 விழுக்காடு வளர்ந்து, 2017ம் ஆண்டில், இப்பணியில் ஈடுபட்டிருந்தோரின் எண்ணிக்கை, 3,55,800 ஆக இருந்தது.
அதே வண்ணம், உலகெங்கும், மறைக்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை நல்ல வளர்ச்சியடைந்து, 2017ம் ஆண்டின் இறுதியில், இந்த எண்ணிக்கை, 31 இலட்சத்து 20 ஆயிரம் என்ற நிலையில் இருந்தது.
Source: New feed