27வது உலக நோயாளர் நாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.
“நோயுற்றோர் மீது காட்டப்படும் தாராள மனப்பான்மை, இவ்வுலகின் உப்பாகவும், ஒளியாகவும் திகழ்கின்றது. துன்புறுவோர் அனைவருக்கும் அமைதியும், ஆறுதலும் பெறும் வண்ணம் நாம் தாராள உள்ளத்துடன் பணியாற்ற, லூர்து நகர் அன்னை மரியா நமக்கு உதவி செய்வாராக” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டர் செய்தியாக, இத்திங்களன்று பதிவு செய்திருந்தார்.
மேலும், பிப்ரவரி 10, இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “நாம் இயேசுவின் கண்கள் கொண்டு பார்க்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், நம் உதவி தேவைப்படுவோரை நம்மால் அடையாளம் காணமுடியும்” என்ற சொற்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இதற்கிடையே, பிப்ரவரி 10, 11 ஆகிய இரு நாள்கள், திருஅவை வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் இடம்பெற்ற இரு நாள்களாக விளங்குகின்றன என்பது, குறிப்பிடத்தக்கது.
2013ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி, லூர்து நகர் அன்னை மரியா திருநாளன்று, அவ்வேளையில் திருத்தந்தையாக பணியாற்றிவந்த 16ம் பெனடிக்ட் அவர்கள், தன் தலைமைப்பணியைத் துறப்பதாக அறிவித்தார்.
1415ம் ஆண்டுக்குப்பின் திருஅவை வரலாற்றில் திருத்தந்தை ஒருவர் தன் தலைமைப் பணியைத் துறந்த வரலாற்று சிறப்பு மிக்க இந்நிகழ்வின் ஆறாம் ஆண்டு நிறைவை, இத்திங்களன்று சிறப்பித்தோம்.
1929ம் ஆண்டு, பிப்ரவரி 11ம் தேதி, திருப்பீடத்திற்கும், இத்தாலிய அரசுக்கும் இடையே, இலாத்தரன் ஒப்பந்தம் என்ற அறிக்கை இரு தரப்பினராலும் கையெழுத்திடப்பட்டதன் 90ம் ஆண்டு நிறைவு, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்டது.
இலாத்தரன் ஒப்பந்தம் உருவாக உழைத்த, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், 1939ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி, தன் 82வது வயதில் இறையடி சேர்ந்ததையடுத்து, இஞ்ஞாயிறன்று, அவரது மரணத்தின் 80ம் ஆண்டு நிறைவு கடைபிடிக்கப்பட்டது.
Source: New feed