உடல்நலம், சமூக மற்றும் பொருளாதாரத்தில் காசநோய் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகள் குறித்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கவும், உலக அளவில் இந்நோயை ஒழிப்பதற்கு முயற்சிகளை ஊக்குவிக்கவுமென, ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24ம் தேதி உலக காசநோய் விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
மருத்துவர் இராபர்ட் கோக் அவர்கள், காசநோய்க்குக் காரணமான மைக்ரோபாக்டீரியம் என்ற கிருமிகளை, 1882ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி கண்டுபிடித்தார். அக்கண்டுபிடிப்பு, இந்நோயைக் குணமாக்குவதற்கு முயற்சிகளும், இந்நோய் பற்றிய ஆய்வுகளும் இடம்பெறுவதற்கு வழியமைத்தது. அந்த மார்ச் 24ம் நாளை, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் நலவாழ்வு அமைப்பு, உலக காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்து, கடைப்பிடித்து வருகின்றது.
உலகில் இடம்பெறும் மரணங்களுக்கு முக்கிய காரணிகளில் ஒன்றான, ஷயரோகம் எனவும் சொல்லப்படும் காசநோயால், உலகில் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 4,500 பேர் இறக்கின்றனர். தடுத்துநிறுத்தக்கூடிய மற்றும் குணப்படுத்தக்கூடிய காசநோயை ஒழிப்பதற்கு உலக அளவில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளால், இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து 5 கோடியே 40 இலட்சம் பேரின் வாழ்வு காப்பாற்றப்பட்டுள்ளது. இந்நோயால் இடம்பெறும் இறப்பு விகிதமும், 42 விழுக்காடாகக் குறைந்துள்ளது என, உலக நலவாழ்வு அமைப்பின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
காசநோயை ஒழிப்பதற்கு ‘இதுவே நேரம்’ என்ற தலைப்பில், மார்ச் 24, இஞ்ஞாயிறன்று இவ்வாண்டு உலக காச நோய் விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது
Source: New feed