பிப்ரவரி 6, இப்புதனன்று, திருத்தந்தை 6ம் பவுல் அரங்கில் நடைபெற்ற திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை, ஒரு விவிலிய வாசகத்துடன் ஆரம்பமானது. “கடவுள், நோவாவிற்கும் அவர் புதல்வருக்கும் ஆசி வழங்கிக் கூறியது: “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்… உங்கள் உயிராகிய இரத்தத்திற்கு நான் ஈடு கேட்பேன். உயிரினம் ஒவ்வொன்றிடமும் மனிதர் ஒவ்வொருவரிடமும் நான் ஈடு கேட்பேன். மனிதரின் உயிருக்காக அவரவர் சகோதரரிடம் உயிரை நான் ஈடாகக் கேட்பேன்” (தொடக்க நூல் 9, 1.5) என்ற வரிகள், தொடக்க நூல் 9ம் பிரிவிலிருந்து வாசிக்கப்பட்டபின், குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய புதன் பொது மறைக்கல்வி உரையில், தான் அண்மையில் அபு தாபியில் மேற்கொண்ட திருத்தூதுப்பயணம் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
அன்பு சகோதரர், சகோதரிகளே, மிகக்குறுகிய திருப்பயணம் ஒன்றை, நான், தற்போதுதான் நிறைவு செய்து, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து திரும்பியுள்ளேன். இப்பயணம், மிகக்குறுகிய கால அளவை கொண்டிருந்தது எனினும், முக்கியமானது. ஏனெனில், இது, உலக அமைதி குறித்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, மதங்களிடையே நிலவவேண்டிய உரையாடல்களில், ஒரு படியை முன்னோக்கி எடுத்து வைத்துள்ளது. இது, அரேபிய வளைகுடா பகுதியில், ஒரு திருத்தந்தையின் முதல் பயணம், மற்றும், சுல்தான் அல்-மாலிக் அல்-காமில் அவர்களை, அசிசி நகர் புனித பிரான்சிஸ் சந்தித்து, 800 ஆண்டுகள் கடந்தபின் இடம்பெற்றுள்ளது. இத்தகைய ஒரு பயணத்தை பிரான்சிஸ் என்ற பெயர் கொண்ட ஒரு திருத்தந்தை மேற்கொள்ளவேண்டும் என, இறைவனின் அருளும் ஆவல் கொண்டுள்ளது. நான் இந்தப் புனிதரைக் குறித்து அடிக்கடி நினைத்துக் கொள்வேன். அவ்வாறு நினைப்பது, நான் நற்செய்தியையும் இயேசுவின் மீது கொண்டுள்ள அன்பையும் என் இதயத்திற்கு அருகில் வைத்துக்கொள்வதற்கு உதவுகிறது. இந்த பயணத்தின்போது என்னை வரவேற்ற வாரிசு இளவரசர், அரசுத் தலைவர், துணை அரசுத்தலைவர், மற்றும், அனைத்து அரசு அதிகாரிகள், கத்தோலிக்க மக்களுடன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஆயர் பால் ஹின்டர் ஆகியோருக்கு என் நன்றியை வெளியிடுகிறேன். ஐக்கிய அரபு அமீரக மண்ணில் தங்கள் கிறிஸ்தவ இருப்புக்கு உயிரூட்டமளித்து வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பகுதியின் அருள்பணியாளர்கள், துறவிகள், பொதுநிலை விசுவாசிகள் என அனைவருக்கும் என் பாசம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எத்தனையோ கூறினாலும், அதையெல்லாம் தாண்டி, மேலும் ஒரு படி எடுத்துவைக்கப்பட்டுள்ளது. அதுதான், மனித உடன்பிறந்த நிலை குறித்து, எனக்கும், Al-Azhar தலைமைக்குருவுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம். இறைவனின் குழந்தைகள் என்ற வகையில் நாம் ஒவ்வொருவரும் சகோதரர் சகோதரிகள் என்ற அழைப்பை ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ளவும், வன்முறைகளை, குறிப்பாக, மதத்தின் பெயரால் நடத்தப்படும் அனைத்து வன்முறைகளையும் ஒதுக்கித் தள்ளவும், உண்மையான மதிப்பீடுகளையும் உலகில் அமைதியையும் பாதுகாக்க நம்மை அர்ப்பணிக்கவும், இந்த ஒப்பந்தத்தில் உறுதியளித்தோம். இந்த திருத்தூதுப் பயணத்தில் விதைக்கப்பட்ட விதைகள், இறைவிருப்பத்திற்கு இயைந்த வகையில், நற்கனிகளைக் கொணர வேண்டும் என, நாம் அனைவரும் செபிப்போம்.
இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த சனிக்கிழமையன்று, பஹாமாஸ் தீவுக்கூட்டப் பகுதியில், அமைதியான வருங்காலத்தை, நம்பிக்கையுடன் தேடிச்சென்ற மக்களை ஏற்றிச்சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில், ஹெயிட்டி நாட்டைச் சேர்ந்த, ஏறத்தாழ 28 மக்கள் உயிரிழந்தது குறித்து தன் கவலையை வெளியிட்டார். புகலிடம் தேடிச்சென்ற பாதையில் உயிரிழந்த இம்மக்களின் உறவினர்கள் குறித்து என் எண்ணங்கள் செல்கின்றன எனக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறந்தவர்களுக்கும், அவர்களின் பிரிவால் துயருறுவோருக்கும், காயமடைந்தோருக்கும் செபிக்குமாறு அங்கு குழுமியிருந்தோரிடம் விண்ணப்பித்தார். பின், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
Source: New feed