2030ம் ஆண்டுக்குள் உலகில் பசியை ஒழிக்கும் நிலையை உருவாக்கவேண்டும் என்ற வளர்ச்சி இலக்கிற்கு ஆதரவாக இன்றைய முன்னேற்ற செயல்பாடுகள் அமையவில்லை என்ற கவலையை, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. அவையில் வெளியிட்டார்.
ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில், திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், “வேளாண்மை வளர்ச்சி, உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து” என்ற தலைப்பில், இவ்வெள்ளியன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய வேளையில் இவ்வாறு கூறினார்.
2015ம் ஆண்டு, 77 கோடியே, 70 இலட்சம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், 2016ம் ஆண்டு இந்த எண்ணிக்கை, 81 கோடியே 50 இலட்சமாக உயர்ந்துள்ளதாகவும் கூறிய பேராயர் அவுசா அவர்கள், இதே போக்கில் சென்றால், 2030ம் ஆண்டு, இந்த எண்ணிக்கை மிக மோசமாக மாறும் என்று கவலையை வெளியிட்டார்.
உணவு உற்பத்தியில் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளபோதிலும், ஊட்டச்சத்து குறைபாடுடையோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது, மேலும் உறுதியான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கிறது என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் கூறினார்.
பசியால் வாடுவோரின் எண்ணிக்கையை 80 கோடிக்கும் கீழ் கொண்டுவருவதற்கென, கடந்த 20 ஆண்டுகளாக உலகெங்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய நடவடிக்கைகள் வெற்றி அடையாமல் போவதற்கு, இயற்கை பேரிடர்களும், காலநிலை மாற்றமும் முக்கிய காரணிகள் என்று பேராயர் அவுசா அவர்கள் எடுத்துரைத்தார்.
தேவையான உணவின்றி வாடுவோரின் எண்ணிக்கை 10 கோடியிலிருந்து 12 கோடியாக உயர்ந்துள்ள அதே காலக்கட்டத்தில், உலகில் உணவுப் பொருள்களை வீணாக்கும் போக்கும் வளர்ந்துள்ளது என்ற உண்மை வேதனை தருகிறது என்பதை, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.