சொர்க்கத்தில் நுழைவதற்காக கடவுளின் முன்னால் எல்லோரும் வந்து நிற்கின்றனர். அப்போது ஒரு அறிவிப்பு வருகிறது. “சொர்க்கத்தில் உள்ள சட்டதிட்டங்களில் ஒரு சின்ன மாறுதல். அதன் படி பாலியல் குற்றம் என்பது குற்றப்பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது. பூமியில் பாலியல் குற்றம் செய்தவர்களும் சுவர்க்கத்தில் நுழையலாம்”
அறிவிப்பைக் கேட்டவுடன் கூட்டத்தில் நின்றிருந்தவர்களில் பாதி பேர் , “அட… சே.. நல்ல வாய்ப்பை வீணடிச்சுட்டோமே” என மனதில் நினைத்தார்கள். உடனே அடுத்த அறிவிப்பு வந்தது.
“வாய்ப்பை மிஸ் பண்ணிட்டோமே என நினைத்தவர்களெல்லாம் நரகத்துக்கும், மற்றவர்களெல்லாம் சொர்க்கத்துக்கும் வரலாம் “
வேடிக்கையாகச் சொல்லப்பட்ட கதையாக இருந்தாலும் இது சொல்ல வருகின்ற அடிப்படைக் கருத்து என்னவென்றால், “நமது மனதை நாமே வகைப்படுத்தாவிடில் அதனால் பயனில்லை” என்பது தான். வேர்களைக் கவனிக்காவிடில் கனிகள் சுவையாக இருக்காது என்பது தான்.
வெளிப்புறமான சட்டங்களோ, திட்டங்களோ, கட்டாயங்களோ, கண்டிப்புகளோ கொண்டு வருகின்ற மாற்றமானது உள்ளார்ந்த மாற்றத்தை உருவாக்குவதில்லை. மாற்றம் என்பது உள்ளில் உருவாகி வெளிப்படும் போது தான் அது மிகுந்த கனிகொடுக்கின்ற வாழ்க்கையை நமக்குத் தருகிறது.
நமக்கு நியாயமாகத் தீர்ப்பு வழங்கக்கூடியவர்கள் இரண்டே இரண்டு பேர் தான். ஒன்று கடவுள், இன்னொன்று நாம். காரணம், பிறர் நம்மை கணிப்பது நமது வெளிப்படையான செயல்களை வைத்துத் தான். ஆனால் நமக்கு மட்டுமே தெரியும் நமது உள்ளார்ந்த சிந்தனைகள்.
ஒருவரை நோக்கிப் புரிகின்ற புன்னகையை மொழிபெயர்த்தால் என்ன கிடைக்கும் என்பது நமக்கு மட்டுமே தெரியும். அதன் பின்னால் விகாரத்தின் கோரப் பற்கள் மறைந்திருக்கலாம். எரிச்சலின் எரிதழல் ஒளிந்திருக்கலாம். வெறுப்பின் குத்தீட்டிகள் குனிந்திருக்கலாம். பொறாமையின் புலி நகங்கள் புதைந்திருக்கலாம். அது நமக்கு மட்டுமே தெரியும். ஒரு புன்னகை புனிதமானது, அதன் பின்னணி புனிதமா என்பதை யாரும் அறிவதில்லை.
அல்லது நாம் ஒருவருக்கு உதவி செய்ய முன்வரலாம். அதன் பின்னால் மனிதத்தின் இழைகள் இருப்பதாகவே சமூகம் கருதிக் கொள்ளும். ஒருவேளை அதன் பின் நமது பெருமையின் வேர்கள் பற்றியிருக்கலாம். சுயநலத்தின் சன்னல்கள் திறந்திருக்கலாம். அல்லது கட்டாயத்தின் சட்டங்கள் கூட மறைந்திருக்கலாம். அதை அறிவது நாம் மட்டுமே.
இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் நம்மைப் பற்றிய தெளிவான குற்றப்பத்திரிகையை எழுத நம்மால் மட்டுமே முடியும். தெளிவான குற்றப்பத்திரிகைகளே நமது வாழ்வில் இருக்கின்ற குற்றங்களைக் குறித்த புரிதல்களை நமக்குத் தரும். குற்றங்கள் குறித்த தெளிவே அதை விலக்க வேண்டும் எனும் உந்துதலைத் தரும். அந்த உந்துதலே புனிதத்தை நோக்கிய நமது பயணத்தின் அடிப்படை விஷயம்.
தவறு செய்யவே வாய்ப்பில்லாத ஒரு இடத்தில் நேர்மையாளனாய் இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் தவறு செய்ய அத்தனை வாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கின்ற ஒரு இடத்தில் நேர்மையாளராய் இருக்கிறீர்களா என்பதில் தான் நமது வாழ்க்கை அளவிடப்படுகிறது.
அது அலுவலக பேனாவை சொந்த வேலைக்காகப் பயன்படுத்துவதாய் இருந்தாலும் சரி, நேசித்த ஒருவரை உள்ளூர வெறுப்பதானாலும் சரி. சின்ன விஷயமோ, பெரிய விஷயமோ நமது மனமே நம்மை இயக்குகிறது.
மனம் எனும் குதிரைக்கு இடுகின்ற கடிவாளங்கள் வாழ்க்கை எனும் பயணத்தில் வெளிப்படுகின்றன. அந்த கடிவாளங்கள் நமது இயல்பிலிருந்து வெளிப்படும் போது வாழ்க்கை இனிமையாகிறது. அந்த கடிவாளங்கள் கட்டாயத்தின் கட்டுகளாகும் போது வாழ்க்கை வலிமிகுந்ததாகிறது.
நமது வாழ்க்கைக்கு நாமே நீதிபதியாக இருக்க வேண்டும். நம்மை வனையும் குயவனாக நாமே இருக்க வேண்டும். நம்மைச் செதுக்கும் சிற்பியாக நாமே இருக்க வேண்டும். அப்போது தான் நமது வாழ்க்கை அர்த்தமுடையதாகும்.
நமக்கு நாமே நீதிபதியாக இருக்கும்போது, சட்டங்கள் இல்லாவிட்டாலும் நேர்மையாக வாழவேண்டுமெனும் உந்துதல் இருக்கும். யாரும் பார்க்காவிட்டாலும் நம்மை நாமே பார்த்துக் கொள்கிறோம் எனும் எச்சரிக்கை உணர்வு இருக்கும். நமது தவறுகளுக்கான தண்டனையை நாமே பெற்றுக் கொள்ளவேண்டும் எனும் தார்மீக சிந்தனை இருக்கும்.
நமக்கு நாமே நீதிபதியாகும் போது, பிறருக்கு எதிராக நாம் தீர்ப்புகளை எழுத மாட்டோம். அவர்களுக்கு எதிராக அவர்களே வாதிடுவார்கள், தீர்ப்பிடுவார்கள். பிறருடைய வாழ்க்கையில் தேவையற்ற தலையீடுகளைச் செய்யாமல் இருக்கும் போது சமூக பிணைப்பு வலுவடையும்.
ஒவ்வொரு மரமும் செழிப்பாக இருக்கும்போது கானகம் செழிப்பாக இருக்கும். ஒவ்வொரு துளியும் புனிதமாக இருக்கும் போது நதியின் மொத்தமும் தூய்மையாக இருக்கும். ஒவ்வொரு மனிதரும் தன்னைத் தானே செதுக்கும் போது சமூகம் வலிமையாய் இருக்கும்.
நமது பலவீனங்களை மன்னிக்கும் நீதிபதியாக நாம் மாறும் போது, பலவீனங்களை பலங்களாய் மாற்றும் வாய்ப்புகள் கிடைக்கும். நமது பலங்களை நாமே பாராட்டிக் கொள்ளும் போது நமது பலங்களை பயன்களாக மாற்றிக் கொள்ளும் உறுதி உருவாகும். நமது குறைகளை நாமே செதுக்கும் போது நமது வாழ்க்கை அர்த்தம் பெறும்.
ஆனால் ஒன்று, நமக்கு நாமே நீதிபதியாய் மாறுவது, நமது தவறுகளுக்கு அனுமதி வழங்க அல்ல, நமது பிழைகளுக்கு அங்கீகாரம் கொடுக்க அல்ல, நமது குற்றங்களை கண்டுகொள்ளாமல் இருக்க அல்ல. நம்மை நாமே சீர்தூக்கிப் பார்த்து சரிசெய்ய.
ஒவ்வொரு நாளும் நமது செயல்களை நமக்கு முன்னால் கொண்டு நிறுத்தி வாதியாகவும், பிரதிவாதியாகவும் நாமே வாதிடுவோம். அந்த வாதம் நேர்மையாய் இருக்கட்டும். அப்போது நமது பிழைகளும், நமது நல்ல செயல்களும் நமக்கே புரியவரும். அதற்கான தீர்ப்பை நாமே எழுதுவோம்.
நம்மை நாமே சரியாகத் தீர்ப்பிடும்போது சமூகம் நம்மை தவறாகத் தீர்ப்பிடுவதில்லை. நம்மை நாமே திருத்திக் கொள்ளும் போது சமூகம் நம்மை உடைப்பதில்லை. அந்த பணியை நாம் கைக்கொள்ள வேண்டும்.
நமக்கு நாமே நீதிபதியானால்
பிறருக்கு நாம் குற்றவாளியாவதில்லை
Source: New feed