மத்திய அமெரிக்க நாடான பானமாவில், சனவரி 22ம் தேதி முதல் 27ம் தேதி வரை, உலக இளையோர் நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளவேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக இளையோருக்காக, குறிப்பாக, இலத்தீன் அமெரிக்க இளையோருக்காகச் செபிக்க அழைப்பு விடுத்துள்ளார்.
2019ம் ஆண்டு சனவரி மாதச் செபக் கருத்தில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, இளையோர், குறிப்பாக, இலத்தீன் அமெரிக்க இளையோர், அன்னை மரியாவின் முன்மாதிரியைப் பின்பற்றி, இறைவனின் அழைப்பை ஏற்று, உலகிற்கு நற்செய்தியின் மகிழ்வை அறிவிக்கும்படி நாம் எல்லாரும் செபிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
சனவரி மாதச் செபக் கருத்து பற்றி, காணொளியில் பேசியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்துவிதமான கலாச்சார, பொருளாதார மற்றும் சமூக வேறுபாடுகளைக் களைந்து, உலகின் பல பகுதிகளிலிருந்தும் பானமா நாட்டிற்கு வரவிருக்கும் இளையோர், தங்களின் மகிழ்வின் காரணத்தையும், தூண்டுதலின் ஊற்றையும் அன்னை மரியாவில் கண்டுகொள்ளுமாறு கூறியுள்ளார்.
அத்துடன், அன்னை மரியாவோடு சேர்ந்து, கிறிஸ்து பற்றி தியானிக்குமாறும் இளையோரை வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, இளையோர் அனைவரும், தங்கள் தங்களின் மொழிகளில், உலகின் அமைதிக்காகச் செபமாலை செபிக்குமாறும், கனவு காண்பதற்கு அன்னை மரியிடம் சக்தியைக் கேட்குமாறும் கூறியுள்ளார்
Source: New feed