இலத்தீன் அமெரிக்கா என்று சொல்லும்போது, அது, ஒரு தனிப்பட்ட நாட்டைக் குறிப்பிடுவதில்லை, மாறாக, பல்வேறு வரலாற்று நாயகர்களின் கனவாக விளங்கிய ஒரு பூமியைக் குறிக்கிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த இலத்தீன் அமெரிக்க பாப்பிறை கல்லூரி மாணவர்களிடம் கூறினார்.
பியோ இலத்தீன் அமெரிக்க பாப்பிறைக் கல்லூரி, உரோம் நகரில் உருவாக்கப்பட்டதன் 160ம் ஆண்டு நிறைவையொட்டி, அக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள், அங்கு பணியாற்றும் அருள்பணியாளர்கள் என 100க்கும் அதிகமானோர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, நவம்பர் 15, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தனர்.
அவ்வேளையில், அவர்களுக்கு உரை வழங்கியத் திருத்தந்தை, இலத்தீன் அமெரிக்க நாடுகள், தற்போது, தங்கள் கலாச்சார வேர்களை இழந்து, சிறு, சிறு துண்டுகளாக மாறிவரும் ஆபத்தை, அருள்பணியாளர்களாக பயிற்சி பெறுவோர் உணர்ந்திருப்பது நல்லது என்று குறிப்பிட்டார்.
உலகெங்கும் பரவிவரும் உலகமயமாக்கல் என்ற அலை, இலத்தீன் அமெரிக்க நாடுகளை பெரிதும் பாதித்துள்ளது என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் பயில வந்திருக்கும் மாணவர்கள், இலத்தீன் அமெரிக்காவின் வேர்களையும் கனவுகளையும் அறிந்துகொள்ள சிறந்த வாய்ப்பு பெற்றுள்ளனர் என்று கூறினார்.
பல வழிகளில் காயப்பட்டிருக்கும் இலத்தீன் அமெரிக்க கண்டத்தில், உறவுகளையும், ஒருமைப்பாட்டையும் உருவாக்கும் சிற்பிகளாக, அருள்பணியாளர்கள் பணியாற்ற வேண்டும் என்று, திருத்தந்தை தன் உரையில் விண்ணப்பித்தார்.
இலத்தீன் அமெரிக்க பாப்பிறை கல்லூரியை, ஆரம்பம் முதல் வழிநடத்திவரும் இயேசு சபைக்கும், இங்குள்ள இயேசு சபை உலகத் தலைவருக்கும், மற்ற இயேசு சபை அருள்பணியாளர்களுக்கும் என் சிறப்பான நன்றி என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.
1858ம் ஆண்டு, நவம்பர் 21ம் தேதி, இயேசு சபை அருள்பணியாளர், Ignacio Victor Eyzaguirre அவர்களால் துவக்கப்பட்ட இலத்தீன் அமெரிக்க பாப்பிறைக் கல்லூரி, தற்போது, இயேசு சபை துறவியரால் நடத்தப்பட்டு வருகிறது
Source: New feed