ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
இறையாட்சியில் பங்கு கொள்ள தேவையான தூய வாழ்வை நாம் வாழ்வோம்.
செபமாலை மாதமான இம்மாதத்தின் 26-ஆம் நாளான இன்று, இயேசுவின் அன்பையும், அமைதியையும் பிரிவினைகள் நிறைந்த இவ்வுலகில் பரப்பிட தேவையான அறிவையும், ஞானத்தையும் இறைவன் தந்திட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு; மாறாகக் கடவுள் கொடுக்கும் அருள்கொடை நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு.” என திருத்தூதர் பவுலடியார் கூறுகிறார்.
பாவமற்ற வாழ்க்கை வாழ்ந்து கடவுள் அளிக்கும் அருள்கொடையை நாம் பெற்றுக் கொள்ள வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
குடும்ப அமைதி, சமாதானம், குடும்ப முன்னேற்றம் ஆகியவற்றிற்கு குடும்ப செபமாலை மிகவும் இன்றியமையாதது என்பதை உணர்ந்து அனுதினமும் குடும்ப செபமாலையை தொய்வில்லாமல் இல்லங்களில் செபிக்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
திருச்சபையின் ஐந்தாவது திருத்தந்தையும், மறைசாட்சியாக மரித்தவரும் இன்றைய புனிதருமான புனித எவரிஸ்டஸை ஆதிகால திருச்சபைக்குத் திருத்தந்தையாகக் தந்த நம் இறைவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று, நோயுற்ற குழந்தைள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டு குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.