வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த விசுவாசிகளுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாளைய நற்செய்தி வாசகத்தில் கூறப்பட்டுள்ள, இயேசு கடல்மீது நடந்த புதுமையை மையப்படுத்தி, தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.
இயேசு கடல்மீது நடந்ததும், அதையொட்டிய நிகழ்வுகளும், நமக்கு நல்லதொரு பாடத்தைத் தருகின்றன என உரைத்தத் திருத்தந்தை, நம் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும், குறிப்பாக, துன்பங்களும் அச்சங்களும் சூழும்போது, நம்மை இறைவன் கரங்களில் முழுமையாக ஒப்படைக்கவேண்டும் என்பதை, இப்புதுமை நமக்குக் கற்பிக்கிறது என்று கூறினார்.
தந்தையாம் இறைவனின் வலிமை நிறைந்த, மற்றும், விசுவாசம் மிக்க கரமாகிய இயேசு, பெருங்காற்றின் நடுவிலும், கடல்மீது நடந்து, புனித பேதுருவையும் நடக்குமாறு அழைத்து, அவர் விசுவாச குறைவால் மூழ்கவிருந்த வேளையில் அவரைக் காப்பாற்றி, அவரின் விசுவாசக் குறைவைக் கடிந்துகொண்டது பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்பங்களிலும், அச்சங்களிலும், சந்தேகங்களிலும் நாம் மூழ்கவிருக்கும் வேளைகளில், ‘ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்’ என கூவியழைக்க நாம் தயங்கக்கூடாது, என்று கூறினார்.
நமக்கு எப்போதும் நல்லதையே நினைக்கும் இயேசு, நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை என்ற நம்பிக்கையுடன், ‘ஆண்டவரே காத்தருளும்’ என்ற இந்த செபத்தை மீண்டும் மீண்டும் செபிப்பது, இயேசுவின் இதயக் கதவைத் தட்டுவதற்கு ஒப்பாகும் என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.
பழைய ஏற்பாட்டு நூலில் காணப்படுவதுபோல், பெரும்புயலாகவோ, நெருப்பாகவோ, நிலநடுக்கமாகவோ இயேசு தன்னை வெளிப்படுத்தவில்லை, மாறாக, புயலை அடக்கிய இளம் தென்றலாக, தன்னை வெளிப்படுத்துகிறார் என்பதையும், நாம் அவருக்கு செவிமடுக்கும்படி கேட்கிறார் என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எவ்வளவு பலவீனமானது நம் விசுவாசம், எவ்வளவு துன்பகரமானது நம் பயணம் என்பதை அறிந்துள்ள இயேசு, நாம் அழைக்கும் முன்னரே நம் அருகில் வருகிறார் எனவும் கூறினார்.
படகாக திருஅவை
இன்றைய நற்செய்தியில் காணப்படும், புயலின் நடுவே பயணம் செய்த படகு, திருஅவையின் அடையாளமாக உள்ளது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு காலத்திலும், துன்பங்களையும் துயர்களையும் எதிர்கொண்டுவரும் திருஅவை, இன்றும் சில இடங்களில் பல்வேறு துயர்களை அனுபவித்துவருகிறது என்று எடுத்துரைத்தார்.
இவ்வாறு துயர்களை அனுபவிக்கும்போது, இறைவன் நம்மை கைவிட்டுவிட்டாரோ என்ற சந்தேகம் திருஅவைக்கு எழலாம், ஆனால், இத்தகைய நேரங்களில்தான் நம் விசுவாசம், நம்பிக்கை, மற்றும், அன்பின் சான்றுகள் அதிகம் அதிகமாக ஒளிர்விடவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
உயிர்த்தெழுந்து, திருஅவையின் அருகிலேயே இருக்கும் இயேசு, மறைசாட்சிய வாழ்வுக்குச் செல்லும் அளவுக்கு, சான்று பகரும் அருளை திருஅவைக்கு வழங்குகிறார், ஏனெனில், இதிலிருந்தே, புதிய கிறிஸ்தவர்களும், ஒப்புரவு, மற்றும், அமைதியின் கனிகளும் அனைத்துலகிற்கும் பிறப்பெடுக்கின்றன என மேலும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
Source: New feed