ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவராக பொறுப்பேற்றதும் நான் வழங்கும் முதல் செய்தியை, வருத்தத்துடனும், பணிவோடும் வெளியிடுகிறேன்; ஆசியாவின் தலை சிறந்த இறையியலாளர்களில் ஒருவரான அருள்பணி சாமுவேல் இராயன் அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று, மியான்மார் கர்தினால் சார்ல்ஸ் மாங் போ அவர்கள் தன் இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இயேசு சபை அருள்பணியாளர் சாமுவேல் இராயன் அவர்கள், கேரளாவின் கோழிக்கோடு நகரில், டிசம்பர் 2, இப்புதன் மதியம் 12.30 மணிக்கு இறையடி சேர்ந்ததையடுத்து, கர்தினால் போ அவர்கள் தன் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதரும் இறைவனின் சிறப்பான அன்புக்கு உகந்தவர் என்பதை, அருள்பணி இராயன் அவர்கள், தன் இறையியல் வகுப்புக்களில் வலியுறுத்தினார் என்றும், அத்துடன், விடுதலை வழங்கும் கிறிஸ்து என்ற எண்ணம் அவரது உரைகளிலும், கட்டுரைகளிலும் தொடர்ந்து வெளிவந்தன என்றும், கர்தினால் போ அவர்கள், தன் இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
பூமியைப் பாதுகாப்பது, வாழ்வுக்கு ஆதரவளிப்பது மற்றும் நீதி மறுக்கப்பட்டோருக்காகப் போராடுவது ஆகிய எண்ணங்கள், அருள்பணி சாமுவேல் இராயன் அவர்களின் தனித்துவமிக்க கருத்துக்களாக விளங்கின என்பதையும் கர்தினால் போ அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
1920ம் ஆண்டு கேரளாவில் பிறந்த சாமுவேல் இராயன் அவர்கள், தன் 19வது வயதில் இயேசு சபையில் இணைந்து, 35வது வயதில் அருள்பணியாளராக திருப்பொழிவு பெற்றார். இறையியல் பேராசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றிய அருள்பணி இராயன் அவர்கள், ஆசியாவின் தலைசிறந்த இறையியலாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
Source: New feed