இரவு முழுவதும் வலை வீசியும் மீன்கள் அகப்படாமல் சோர்வுடனும் ஏமாற்றத்திலும் இருந்த சீமோனை நோக்கி இயேசு வலை வீசக் கூறியதும், முதலில் மறுப்பை வெளியிட்டாலும், அவர் வார்த்தைகளை நம்பி வலை வீசியது, இயேசுவை பின்பற்றுவோர் ஒவ்வொருவருக்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டு என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 10 இஞ்ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, சீமோனுக்கும் இயேசுவுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பில் நிகழ்த்தப்பட்ட புதுமையை மையப்படுத்தி தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
விசுவாசத்தில் இறைவனுக்கு பதிலுரைத்து, அவர் கட்டளைக்கு நம்பிக்கையுடன் கீழ்ப்படியும்போது, அதிக பலன்களை இறைவன் வழங்குவார் என்பது இந்த புதுமை நமக்கு கற்றுத் தரும் பாடம் என்று திருத்தந்தை தன் உரையில் கூறினார்.
இறைப்பணியில் தாராளமனதுடன் நாம் ஈடுபடும்போது, இறைவனும் நமக்கென வல்ல செயல்களை ஆற்றுகின்றார் என்பது, அனைவரும், குறிப்பாக, திருஅவையில் பொறுப்புணைர்வுகளை கொண்டிருப்போர் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என மேலும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவனை நம் வாழ்க்கைப் படகில் ஏற்றி பயணம் செய்யும்போது, பல்வேறு ஆச்சரியங்களை இறைவன் நமக்கு நிகழ்த்துவார் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித குலம் எனும் கடலுக்குள் புகுந்து, நன்மைத்தனம் மற்றும் இரக்கத்தின் சாட்சிகளாக விளங்கி, நம் இவ்வுலக வாழ்வுக்கு ஒரு புது அர்த்தத்தைக் கொடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை எனவும் எடுத்துரைத்தார்.
இயேசு நிகழ்த்திய புதுமையைக் கண்டு திகைத்த சீமோன் பேதுரு, இயேசுவை நோக்கி, ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும் என கூறியதையும், அதற்கு இயேசு பதில்மொழியாக, அஞ்சாதே; இது முதல் நீ மனிதனைப் பிடிப்பவன் ஆவாய், என கூறியதையும் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இங்கு இயேசு நிகழ்த்திய புதுமையில் முக்கியத்துவம் பெறுவது, பெரிய அளவில் மீன்கள் கிடைக்கச் செய்தது அல்ல, மாறாக, பேதுருவையும் அவர் நண்பர்களையும் ஏமாற்றத்திற்கு இரையாகாமல் காப்பற்றியது என்று கூறினார்.
Source: New feed