இயேசுவின் வளர்ப்புத் தந்தையான புனித யோசேப்பு அவர்களின் நற்பண்புகள் பற்றி, இச்செவ்வாய் காலை மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலி பீடத்தை அழகுபடுத்தியிருந்த, சில கிறிஸ்மஸ் அலங்காரப் பொருள்களைத் தயாரித்த, சுலோவாக்கியா நாட்டு மாற்றுத்திறனாளிச் சிறாரை, தன் செபத்தில் நினைவுகூர்ந்தார்.
யோசேப்பு, ஒரு நீதிமான், சட்டத்தைக் கடைப்பிடிப்பவர், தொழிலாளர், தாழ்மையுள்ளவர், மரியாவுக்கு மணஒப்பந்தமானவர் என்று, அவர் பற்றி திருவிவிலியம் வழியாக அறியவருகிறோம் எனவும், அவரின் பணியை கடவுள் வெளிப்படுத்திய பின்னர், மறுபேச்சுக்கு இடம்தராமல், அமைதியாக, இறைமகனின் வளர்ச்சியில் துணையிருந்தார் என்றும், திருத்தந்தை கூறினார்.
ஒரு வார்த்தையும் சொல்லாமல், அமைதியில் எவ்வாறு உடன்பயணிப்பது என்பது பற்றி அறிந்திருந்த புனித யோசேப்பு அவர்கள், கனவுகளின் மனிதர் என்றுரைத்த திருத்தந்தை, கனவு காண்பதற்கும், இன்னல்கள் எதிர்வந்தாலும், நம்பிக்கையோடு வருங்காலத்திற்குத் திறந்த மனதாய் இருப்பதற்கும் உள்ள சக்தியை இழக்காதிருப்போம் என்று கேட்டுக்கொண்டார்.
நாம் ஒவ்வொருவரும், நம் குடும்பம், நம் பிள்ளைகள், நம் பெற்றோர் போன்றோரின் வாழ்வு எவ்வாறு அமைய வேண்டும் என்று கனவு காண்கிறோம், அருள்பணியாளர்களும் தங்களின் இறைமக்கள் பற்றி கனவு காண்கின்றனர், இவ்வாறு கனவு காண்பதில், இளையோரைப் போன்று, வெட்கப்படாமல் கனவு காணுமாறு கூறினார் திருத்தந்தை.
நல்ல பெற்றோரின் ஞானம் பற்றியும் விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தவறுகள் இழைக்கும்போதுகூட, உடனடியாகச் சத்தம் போடாமல் காத்திருக்கும் ஞானமுள்ள பல பெற்றோர் உள்ளனர் என்றும், காத்திருப்பது எவ்வாறு என்பது பற்றி நாம் அறிந்திருப்பது முக்கியம் என்றும், மறையுரையில் கூறினார்.
Source: New feed