கர்தினால்கள் அணியும் தொப்பியின் நிறம் சிகப்பாக இருப்பது, இவ்வுலகின் மதிப்புமிக்க தன்மையைக் குறிப்பிட அல்ல, மாறாக, அது இரத்தத்தின் நிறம், ஆகவே, இயேசுவின் பாதையில் தொடர்ந்து நடக்குமாறு புதிய கர்தினால்களுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எட்டு நாடுகளைச் சேர்ந்த 13 பேரை கர்தினால்களாக உயர்த்தி, அவர்களுக்கு கர்தினால்களுக்குரிய தொப்பியையும் மோதிரத்தையும் வழங்கிய திருவழிபாட்டுச் சடங்கில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எருசலேம் செல்லும் வழியில் தன் பாடுகள், மற்றும், மரணம் குறித்து இயேசு விவரித்ததையும், சகோதரர்களான யாக்கோபுவும், யோவானும், இயேசு மகிமையில் வரும்போது தங்களுக்கு சிறப்பிடம் வழங்க வேண்டும் என கேட்டதையும் மையமாக வைத்து தன் சிந்தனைகளை வழங்கினார்.
நவம்பர் 28, இச்சனிக்கிழமையன்று மாலை, புனித பேதுரு பெருங்கோவிலில், இடம்பெற்ற இத்திருவழிபாட்டுச் சடங்கில், நம் வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்கும் சிலுவையும் உயிர்ப்பும், நமது இன்றைய நிலை மட்டுமல்ல, நம் பயணத்தின் இறுதி நோக்கமுமாகும், என உரைத்தார் திருத்தந்தை.
நாம் அனைவரும் கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்பினாலும், நம் உள்ளங்கள் கிறிஸ்துவின் பாதையைவிட்டு விலகிச்செல்லும் ஆபத்து உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, திருஅவை அதிகாரிகள், இறைவனுக்கும் மக்களுக்கும் நெருக்கமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
சரியான பாதையை விட்டு விலகி, காணாமல்போகும் ஆபத்திலிருக்கும் தன் நண்பர்களை, இயேசு, சிலுவை, மற்றும் உயிர்ப்பின் வழியாக தன்னிடம் கொண்டுவந்து சேர்க்கிறார் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்த, 13 புதிய கர்தினால்களுள், புருனே, மற்றும், பிலிப்பீன்ஸ் நாடுகளைச் சேர்ந்த இருவர், கோவிட்-19 அரசு தடைகள் காரணமாக உரோம் நகர் வரமுடியாததால், இச்சனிக்கிழமையன்று நடைபெற்ற வழிபாட்டில் 11 கர்தினால்களே பங்குபெற்றிருந்தனர்.
Source: New feed