
கத்தோலிக்கத் திருஅவையில் இறைஇரக்க ஞாயிறு சிறப்பிக்கப்படும்வேளை, ஆண்டவர், தம் இரக்கத்தையும், பேரன்பையும் நாம் எல்லாரும், உணர வேண்டுமென்று விரும்புகின்றார் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
“ஆண்டவர் நம் ஒவ்வொருவரையும் தேடுகிறார், அவர் தம் இரக்கம் மற்றும், பேரன்பின் வெம்மையை நாம் எல்லாரும், உணர வேண்டுமென்று விரும்புகின்றார்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில், ஏப்ரல் 27, இச்சனிக்கிழமையன்று பதிவாகியிருந்தன.
இறைஇரக்க ஞாயிறு
இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்கு அடுத்துவரும் ஞாயிறு, இறைஇரக்க ஞாயிறாகச் சிறப்பிக்கப்படுகின்றது. இறைஇரக்க பக்தியை அதிகாரப்பூர்வமாக ஊக்குவித்த, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 2000மாம் ஆண்டு, ஏப்ரல் 30ம் தேதி, பாஸ்கா கால 2வது ஞாயிறன்று, Faustyna Kowalska அவர்களைப் புனிதராக அறிவித்து, இவ்விழா பாஸ்கா கால 2வது ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் என அறிவித்தார்.
2001ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி, பாஸ்கா கால 2வது ஞாயிறன்று, இறைஇரக்க ஞாயிறு முதன்முறையாகச் சிறப்பிக்கப்பட்டது.
5 ஆண்டுகளுக்குமுன் புனிதர்களாக…
ஐந்து ஆண்டுகளுக்குமுன், 2014ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதியன்று சிறப்பிக்கப்பட்ட இறைஇரக்க ஞாயிறன்று, திருத்தந்தை 23ம் ஜான் அவர்களும், திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.
Source: New feed