கிறிஸ்தவர்களாகிய நாம், ஒரு பொருளை விற்பதில்லை. ஒரு வாழ்வு முறையை எடுத்துரைக்கிறோம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் ஆகஸ்ட் 30 இவ்வியாழனன்று பதிவாகியிருந்தன.
இதற்கிடையே, ஆகஸ்ட் 29, இப்புதனன்று, புனித திருமுழுக்கு யோவானின் மறைசாட்சிய மரணத்தைக் கொண்டாடிய வேளையில், பெரு நாட்டு ஆயர்கள், திருத்தந்தையின் தலைமைப் பணிக்கு தங்கள் ஒருங்கிணைப்பையும், நெருக்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில் மடல் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
“உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா” (மத்தேயு 16:18) என்ற சொற்களுடன், புனித பேதுருவை திருஅவையின் தலைவராக உருவாக்கிய இயேசுவின் சொற்களை, தாங்கி நிற்கும் பேதுருவின் வழித்தோன்றலான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, தங்கள் பிரமாணிக்கத்தை வழங்குவதாக ஆயர்கள் இம்மடலில் குறிப்பிட்டுள்ளனர்.
திருத்தந்தையின் தலைமைப்பணியையும், திருஅவையையும் தடுமாறச் செய்யும் நோக்கத்துடன் அண்மையில் எழுந்த முயற்சிகளைக் கண்டு அஞ்சாமல், “உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்” (யோவான் 16:33) என்று, உயிர்த்த கிறிஸ்து கூறிய சொற்களை, பெரு ஆயர்கள் தங்கள் மடலில் நினைவு கூர்ந்துள்ளனர்.
திருஅவையை வழிநடத்தும் திறமை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு உள்ளது என்பது, அவரது ஐந்தாண்டு பணியிலும், குறிப்பாக, அண்மையில் அவர் ஆகஸ்ட் 20ம் தேதி ‘இறைமக்களுக்கு வெளியிட்ட மடல்” வழியாகவும் தெளிவாகின்றது என்று, ஆயர்கள் தங்கள் மடலில் சுட்டிக்காட்டியுள்ளனர்.