
கடவுளோடும், தங்களின் சகோதரர் ஆயர்கள், அருள்பணியாளர்கள், மற்றும், கத்தோலிக்கரோடும் உடனிருக்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரேசில் ஆயர்களிடம் இவ்வெள்ளியன்று கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆயர்கள் ஐந்தாண்டுக்கொருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் அத் லிமினா சந்திப்பையொட்டி, பிரேசில் நாட்டின் São Paulo, Aparecida, மற்றும், Sorocaba மாநிலங்களின் 25 ஆயர்களை செப்டம்பர் 23, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து ஏறத்தாழ இரண்டு மணி நேரம் கலந்துரையாடிய திருத்தந்தை, இக்காலம் முன்வைக்கின்ற சவால்களுக்கு அஞ்சவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரேசில் தலத்திருஅவை குறித்த அக்கறை, அந்நாட்டு அரசியல், கலாச்சாரச் சுழல்கள், மக்களின் வாழ்வு, என பல்வேறு தலைப்புக்களில் பிரேசில் ஆயர்களோடு கலந்துரையாடிய திருத்தந்தை, அத்தலத்திருஅவைக்கு தன் பரிந்துரைகளையும் எடுத்துரைத்துள்ளார்.
இச்சந்திப்பு குறித்து வத்திக்கான் வானொலியில் பகிர்ந்துகொண்ட கர்தினால் Odilio Pedro Scherer அவர்கள், இவ்வுரையாடல், உடன்பிறந்த உணர்வில் இடம்பெற்றது என்றும், ஆயர்கள் ஒவ்வொருவரும் கேட்ட கேள்விகளுக்கு திருத்தந்தை பதிலளித்தார் மற்றும், ஆயர்கள் பகிர்ந்துகொண்ட சாட்சியங்கள் மற்றும், பரிந்துரைகளைக் கவனமுடன் கேட்டார் என்றும் கூறியுள்ளார்.
மேலும், இவ்வுரையாடல், திருத்தந்தையோடு ஆயர்கள் கொண்டிருக்கும் உறவு, திருஅவையில் ஒருங்கிணைந்த பயணம், அருள்பணியாளர்கள் மீது அக்கறை, மக்களுக்கு அருகிலிருப்பது, அவர்களின் பிரச்சனைகள், மற்றும், ஆயுதமோதல்களைக் களைவது போன்ற தலைப்புகள், இந்த 2 மணி நேர கலந்துரையாடலில் இடம்பெற்றன என்று, அச்சந்திப்பு குறித்து மற்ற ஆயர்களும் தெரிவித்துள்ளனர்.
Source: New feed