“திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு” என்ற தலைப்பில் வத்திக்கானில் நடைபெற்றுவரும் ஒரு முக்கிய கூட்டத்தின் மூன்றாவது அமர்வு, பிப்ரவரி 22, இவ்வெள்ளி காலை ஒன்பது மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரசன்னத்தில், செபத்துடன் துவங்கியது.
எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை திருஅவையின் அப்போஸ்தலிக்க நிர்வாகி பேராயர் Pierbattista Pizzaballa அவர்கள் வழிநடத்திய இச்செபத்தில், ஆண்டவரே, நாங்கள், விசுவாசத்தை, வெளிவேடமில்லாமல் வாழ்வதற்கு வரம் தாரும் என, தூய ஆவியாரிடம் செபித்தார்.
பின்னர், மெர்சதேரியன் பெண் துறவு சபை தலைவர் அருள்சகோதரி Aurora Calvo Ruiz அவர்கள், விசுவாசத்தை நேர்மையாக வாழ்வது குறித்து புனித பவுல், உரோமையருக்கு எழுதிய திருமடலில் கூறும் பகுதியை வாசித்து முடித்தவுடன், அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட ஒருவரின் கடிதம், வாசிக்கப்பட்டது.
இயேசு உயிர்துறந்தவேளையில், அவரின் அன்னை அவரோடு இருந்தார், ஆனால், நான் ஓர் அருள்பணியாளரால் பாலியல் முறைகேட்டால் பாதிக்கப்பட்டபோது, எனது அன்னையாம் திருஅவை எனக்குத் துணைவரவில்லை, இந்தப் பாதிப்பு பற்றி திருஅவையில் யாரிடமாவது பேச நினைத்தபோது, அனைவருமே மறைந்துகொண்டனர், யாரிடம் பேசுவது எனத் தெரியாமல் இருந்தேன் என, அந்த சாட்சியக் கடிதத்தில், அந்த நபர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சாட்சியத்தைக் கேட்டபின்னர் நீண்ட நேரம் அவையில் அமைதி நிலவியது. பின்னர் செபித்த பேராயர் Pierbattista Pizzaballa அவர்கள், வன்முறை மற்றும் ஒடுக்கப்படும் நிலைக்கு உள்ளாவோம் என்ற அச்சம், திருஅவையில், எவருக்கும் ஒருபோதும் இருக்கக் கூடாது எனச் செபித்தார்.
திருத்தந்தைக்கு நல்வாழ்த்து
திருத்தூதர் தூய பேதுருவின் தலைமைப்பீடம் திருவிழா பிப்ரவரி 22, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நல்வாழ்த்தும், இந்த அமர்வில் தெரிவிக்கப்பட்டது.
இந்த காலை அமர்வில் முதலில், மும்பை பேராயர், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், “ஒருங்கிணைந்த நிலை : அனுப்பப்படுதல்” என்ற தலைப்பிலும், அமெரிக்க கர்தினால் Blase Joseph Cupich அவர்கள், “அனைவரும் இணைந்து பொறுப்பேற்றல்” என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
கர்தினால்களின் உரைகளைத் தொடர்ந்து, கேள்வி அமர்வு இடம்பெற்றது. பின்னர், இத்தாலியம், பிரெஞ்ச், ஆங்கிலம், இஸ்பானியம் ஆகிய மொழிகளில், 11 குழுக்களாகப் பிரிந்து கருத்துப் பரிமாற்றம் செய்தனர். இத்துடன் இவ்வெள்ளி காலை அமர்வு முடிவுற்றது. பிற்பகல் நான்கு மணிக்கு மாலை அமர்வு ஆரம்பமானது.
Source: New feed