என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, என்னைப் பின்பற்றட்டும்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 21-27
அக்காலத்தில்
இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார்.
பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டு, “ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது” என்றார். ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, “என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவைபற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்றார்.
பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார். மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?
மானிட மகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப் போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
“துன்பங்கள் நம்மைச் சிதைப்பதில்லை; செதுக்கும்”
பொதுக்காலம் இருபத்து இரண்டாம் ஞாயிறு
I எரேமியா 20: 7-9
II உரோமையர் 12: 1-2
III மத்தேயு 16: 21-27
“துன்பங்கள் நம்மைச் சிதைப்பதில்லை; செதுக்கும்”
நிகழ்வு
ஓர் ஊரில் வயலின் இசைக்கலைஞர் ஒருவர் இருந்தார். இவர் வயலின் இசைப்பதற்கும் மற்றவர்கள் வயலின் இசைப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. குறிப்பாக இவர் வயலின் இசைக்கும்பொழுது, அதிலிருந்து வழிந்தோடிய இசை கேட்போரைக் கட்டிப்போடச் செய்தது. இதுகுறித்து அந்த வயலின் இசைக்கலைஞரிடம் அவருக்கு அறிமுகமான ஒருவர், “நீங்கள் வயலின் இசைக்குபோது மட்டும், அதிலிருந்து வழிந்து வரும் இசை மிகவும் ஆத்மார்த்தமாக இருக்கின்றதே…! அது எப்படி?” என்றார்.
அதற்கு அந்த வயலின் இசைக்கலைஞர், “நான் வயலினை இசைக்கின்றபொழுது அதிலிருந்து வழிந்துவரும் இசை மிகவும் ஆத்மார்த்தமாக இருக்கின்றது என்று நீங்கள் சொல்கிறீர்களே…! இது உடனடியாக வந்துவிடவில்லை. தொடக்கத்தில் நான் உருவாக்கிய வயலினை இசைக்கும்பொழுது, இவ்வுளவு ஆத்மார்த்தமான இசை பிறக்கவில்லை; ஏதோவொன்று குறைவுபடுவது போன்று எனக்குத் தோன்றியது. அப்பொழுதுதான் நான் காட்டில் மிக உயரமாகவும், அதேநேரத்தில் இடி, மின்னல், சூறாவளிக் காற்று ஆகியவற்றைத் தாங்கிக்கொண்டு மிகவும் உறுதியாகவும் இருக்கின்ற டிம்பர் மரத்திலிருந்து வயலினை உருவாக்கினால் என்ன என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. அதன்படி நான் இடி, மின்னல், சூறாவளிக் காற்று ஆகியவற்றைத் தாங்கிக்கொண்டு, காட்டில் மிக உயரமாக வளர்ந்து நிற்கும் டிப்பர் மரத்திலிருந்து வயலினை உருவாக்கினேன். அதனால்தான் நான் வைத்திருக்கும் இந்த வயலினிலிருந்து வழிந்து வரும் இசை அவ்வளவு ஆத்மார்த்தமாக இருக்கின்றது” என்றார்.
இப்படிச் சொல்லிவிட்டு அந்த வயலின் இசைக்கலைஞர் தன்னிடம் கேள்வி கேட்டவரிடம் தொடர்ந்து சொன்னார்: “எப்பொழுதும் துன்பங்களைக் கண்டு துவண்டுவிடாமல், அவற்றை மனவுறுதியோடு தாங்கிக்கொண்டு, இலட்சியத்தை நோக்கித் தொடர்ந்து நடப்பவருக்கு நிச்சயம் ஒருநாள் அதற்கான கைம்மாறு கிடைக்கும்.”
ஆம், துன்பங்கள் ஒருபோதும் நம்மைச் சிதைப்பதில்லை; அவை நம்மைச் செதுக்குபவையாக இருக்கின்றன. ஆகையால், அத்தகைய துன்பங்களை நாம் மனவுறுதியோடு தாங்கிக்கொண்டு, இறுதிவரை பயணித்தால் அதற்கான கைம்மாறு நிச்சயம் ஒருநாள் நமக்குக் கிடைக்கும் என்பதை இந்த நிகழ்வும், பொதுக்காலத்தின் இருபத்து இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் எடுத்துச் சொல்கின்றன. அது குறித்து இப்பொழுது நாம் சிந்திப்போம்.
துன்பமே வேண்டாம் என்று சொல்லும் பேதுரு
இன்றைய நற்செய்தி வாசகம், கடந்த ஞாயிறு நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகத்தின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இதில் இயேசு தன்னுடைய பாடுகளைப் பற்றியும், உயிர்ப்பைப் பற்றியும் தன்னுடைய சீடர்களிடம் முதன்முறையாக அறிவிக்கின்றார். இதைக் கேட்ட பேதுரு, இயேசு சொன்னதில் இருந்த முதற்பகுதியை மட்டும் பிடித்துக்கொண்டு, அதாவது இயேசு பாடுகள் படவேண்டும் என்பதை மட்டும் பிடித்துக்கொண்டு, அவரைத் தனியாக அழைத்துக் கடிந்துகொண்டு, “ஆண்டவரே, இது வேண்டாம்” என்கிறார்.
பேதுரு இயேசுவிடம் பேசிய வார்த்தைகளுக்கும், பாலைநிலத்தில் சாத்தான் இயேசுவிடம், “நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்” (மத் 4: 9) என்ற வார்த்தைகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், பேதுரு இயேசுவிடம் பாடுகளே வேண்டாம் என்கிறார். சாத்தானோ இயேசுவிடம் தன்னை வணங்கினால் பாடுகளே படாமல் உலக அரசுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்கிறது. இதனால்தான் இயேசு பேதுருவிடம், சாத்தானிடம் சொன்ன (ஏறக்குறைய) அதே வார்த்தைகளைச் சொல்லி, “என் கண்முன் நில்லாதே சாத்தானே!” என்கின்றார்.
பல நேரங்களில் நமக்குச் சோதனைகளும் தடைகளைகளும் நம்மீது அன்பு கொண்டிருப்பவர்களிடமிருந்தும், நமக்கு நெருக்கமாக இருப்பவர்களிடமிருந்துமே வரும். ஆகையால், நாம் இயேசுவைப் போன்று நமக்குச் சோதனைகளும் தடைகளும் வருகின்றபொழுது, மிகவும் கவனமாக இருப்பது நல்லது.
துன்பமே தூயகத்திற்கு இட்டுச்செல்லும் என்றுரைக்கும் இயேசு
தன்னுடைய இலட்சியப் பயணத்திற்குத் தடையாக இருந்த பேதுருவைக் கடிந்துகொள்ளும் இயேசு, பின்னர் தன்னுடைய சீடர் பக்கம் திரும்பித் தன்னைப் பின்பற்றி வரக்கூடியவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துரைக்கின்றார். இயேசு சீடர்களிடம் சொல்வதில், தன்னலம் துறத்தல், சிலுவையைத் தூக்கிக்கொள்ளுதல், பின்பற்றுதல் என்ற மூன்று கூறுகள் இருக்கின்றன. இவற்றைக் குறித்து இப்பொழுது பார்ப்போம்.
இயேசு தன்னுடைய சீடர்களிடம் தன்னலத்தைத் துறக்கவேண்டும் என்பது, அவரைப் பின்பற்றுகின்ற யாவரும் தன்னுடைய விரும்பு, வெறுப்பு, குடும்பம், சொந்த பந்தங்கள் யாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அவருக்கு முதன்மையான இடம் கொடுத்து வாழவேண்டும் என்ற செய்தியை எடுத்துரைகின்றது. இயேசுகூட தன்னுடைய குடும்பத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதற்கே முதன்மையான இடம் கொடுத்தார் (லூக் 2: 49). அடுத்ததாக, சிலுவையைத் தூக்கிக்கொள்ளவேண்டும் என்று இயேசு சொல்வது, அவமானங்களையும் துன்பங்களையும் சவால்களையும் தாங்கிக் கொள்ளவேண்டும் என்ற செய்தியை எடுத்துரைப்பதாக இருக்கின்றது. நிறைவாக, இயேசு கூறுகின்ற “பின்பற்றவேண்டும்” என்ற வார்த்தைகள் இயேசுவுக்கு முதன்மையான இடம் கொடுத்து, எல்லாவற்றையும் துறந்து, அவமானங்களையும் துன்பங்களையும் தாங்கிக்கொண்டு அவரைப் பின்தொடரவேண்டும் என்ற செய்தியை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றன.
ஆதலால், இயேசுவின் சீடர் துன்பங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். துன்பங்களை ஏற்றுக்கொள்ளாமல், அவருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பவர் ஒருபோதும் அவருடைய சீடராக இருக்க முடியாது.
நாம் துன்பத்தை வேண்டாம் என்கிறோமா? ஏற்றுக்கொள்கின்றோமா?
இன்றைய நற்செய்தி வாசகம், பேதுரு சொல்வது போல், துன்பமே வேண்டாம் என்றொரு வாய்ப்பினையும், இயேசு சொல்வதுபோல், துன்பங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றொரு வாய்ப்பினையும் நமக்கு முன்பாக வைக்கின்றது. இவற்றில் நாம் வாழ்வையா? அல்லது சாவையா? எதைத் தேர்ந்துகொள்ளப் போகிறோம் (இச 30: 15) என்பது நம் கையில்தான் உள்ளது.
இந்த இடத்தில் புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் இடம்பெறும் வார்த்தைகளை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. இப்பகுதியில் புனித பவுல், “இந்த உலகப் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மற்றம் அடைவதாக! அப்பொழுது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள்” என்பார். உலகப் போக்கு என்பது பேதுரு சொல்வது போல், துன்பமே வேண்டாம் என்று சொல்வது. இது நமக்கு நிலைவாழ்வை, விண்ணகத்தில் நிலையான இடத்தைத் தந்துவிடாது; ஆனால், இயேசு சொல்வது போல், நற்செய்தியின் பொருட்டுத் துன்பங்களை ஏற்றுக்கொண்டால், நாம் இயேசுவின் உண்மையான சீடராக இருப்போம். விண்ணகத்திலும் இடம் பெறுவோம்.
ஆகவே, நாம் இயேசு நமக்குச் சுட்டிக்காட்டும் பாடுகளும் துன்பங்களும் நிறைந்த பாதையில் பயணித்து, அவருடைய உண்மையான சீடர்களாய் வாழ்வோம்.
சிந்தனை
‘கரையில் நின்று உற்றுப்பார்த்தன் மூலம் நீ கடலைக் கடக்க முடியாது’ என்பார் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளராகிய ரவீந்தரநாத் தாகூர். நாம் கடலைக் கடக்கவேண்டுமெனில், அதில் பயணம் செய்யவேண்டும். அதுபோன்று நாம் நம்முடைய இலக்கான விண்ணகத்தை அடைவதற்குத் துன்பங்களை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். எனவே, நாம் நம்மைச் செதுக்குகின்ற துன்பங்களை மனவுறுதியோடு ஏற்றுக்கொண்டு இலக்கினை நோக்கித் தொடர்ந்து பயணிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Source: New feed