இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 45-51
பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, “இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டு கொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்” என்றார்.
அதற்கு நத்தனியேல், “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?” என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், “வந்து பாரும்” என்று கூறினார்.
நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று அவரைக் குறித்துக் கூறினார்.
நத்தனியேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று அவரிடம் கேட்டார். இயேசு, “பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்தி மரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்” என்று பதிலளித்தார்.
நத்தனியேல் அவரைப் பார்த்து, “ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.
அதற்கு இயேசு, “உம்மை அத்திமரத்தின் கீழ்க் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார். மேலும், “வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அவரிடம் கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————————–
மறையுரைச் சிந்தனை
புனித பர்த்தலமேயு – திருத்தூதர்
இன்று திருச்சபையானது திருத்தூதரான தூய பார்த்தலமேயுவினுடைய விழாவைப் பெருமகிழ்வுடன் கொண்டாடி மகிழ்கின்றது. விவிலியத்தில் இவரைப் பற்றிய செய்தி மத்தேயு, மாற்கு, லூக்கா நற்செய்தி நூல்களில் திருத்தூதர்களுடைய அட்டவணைப் பகுதியிலும், யோவான் நற்செய்தி முதல் அதிகாரத்திலும் (யோவா 1:43-51) திருத்தூதர் பணிகள் நூல் முதல் அதிகாரத்தில் ஆண்டவர் இயேசு விண்ணேற்றம் அடைகிறபோதும் வாசிக்கின்றோம்.
உழுதநிலத்தின் மகன்’, ‘நத்தனியேல்’ என்று அழைக்கப்படக்கூடிய இவரைக் குறித்துத்தான் ஆண்டவர் இயேசு, “இவரே உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர் (யோவா 1:47) என்று குறிப்பிடுகிறார். கி.பி. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த தூய ஜெரோம் குறிப்பிடும்போது, “ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு இவர் இந்தியாவிலுள்ள கொங்கணம் கடற்கரைப் பகுதியிலும், மும்பை கடற்கரைப் பகுதியிலும் நற்செய்தி அறிவித்துவிட்டு, அங்கிருந்து அர்மேனியா சென்று, அங்கே நற்செய்தி அறிவிக்கும்போது மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார்” என்று கூறுவார். மைக்கேல் ஆஞ்சலோ ரோம் நகரில் இருக்கக்கூடிய சிஸ்டைன் பேராலயத்தில் வரைந்த ஓவியத்தில் தூய பார்த்தலமேயு உடலிலிருந்து உரிக்கப்பட்ட தன்னுடைய சதையைத் தாங்கி நிற்பது போன்ற படம் வரையப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
இவருடைய விழாவைக் கொண்டாடுகிற வேளையில் இவர் நமக்கு என்ன பாடத்தைக் கற்றுத் தருகிறார் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
முதலாவதாக தூய பார்த்தலமேயு இயேசுவின் மீது கொண்ட அளவுகடந்த அன்பால், நற்செய்தி அறிவிப்பிற்காக தன்னுடைய உயிரையும் கொடுக்க முன்வருகிறார். “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்” என்ற ஆண்டவர் இயேசுவின் அழைப்பை ஏற்று அர்மேனியாவில் நற்செய்தி அறிவித்தார். அப்படி நற்செய்தி அறிவிக்கும்போது அர்மேனியா நாட்டு மன்னன் பொலிமியுஸ் நற்செய்தியால் தொடப்பட்டு, தூய பார்த்தலமேயுவிடமிருந்து திருமுழுக்குப் பெற்றார். ஆனால் இது பிடிக்காத மன்னனின் சகோதரன் அஸ்தியாஜெஸ் என்பவர் இவரை உயிரோடு தோலுரித்து, சிலுவையில் தலைகீழாக அறைந்து கொன்று போட்டான்.
நற்செய்தி அறிவிக்கின்றபோது புனிதர் அனுபவித்த துன்பத்தைப் போன்று நாமும் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கலாம். ஆனால் கிறிஸ்துவின் அன்பு நம்மை எந்நாளும் காத்துக்கொள்ளும் என்பதில் நாம் நம்பிக்கை வைத்து வாழ வேண்டும்.
பவுலடியார் உரோமையருக்கு எழுதிய மடல் 8:35 ல் கூறுவார், “கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்ககூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்கமுடியும் என்பார். ஆம் கிறிஸ்துவின் அன்பு நம்மையெல்லாம் காத்து வழிநடத்துகிறது என்பதை உணர்ந்தால் எவ்வகை சவாலையும் நாம் துணிவோடு எதிர்கொள்ளலாம்.
தூய பார்த்தலமேயுவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளகூடிய இரண்டாவது பாடம் கள்ளம், கபடற்றவர்களாய் வாழ்வதுதான். ஆண்டவர் இயேசு இவரைக் குறித்து கள்ளம் கபடற்றவர் என்று சொன்னார் என்றால் நிச்சயம் இவர் குழந்தையைப் போன்று தூயவராக, தூய மனத்தினராக வாழ்ந்திருக்கவேண்டும். மத் 5:8 ல் வாசிக்கின்றோம், “தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பார்கள்” என்று. ஆம் தூய மனத்தோரால்தான் கடவுளை முழுமையாகக் காண முடியும்.