
உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-20
அக்காலத்தில்
இயேசு, பிலிப்புச் செசாரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, “மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்” என்றார்கள்.
“ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார்.
அதற்கு இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார்.
பின்னர், தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————
நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்”
பொதுக்காலம் இருபத்து ஒன்றாம் ஞாயிறு
I எசாயா 22: 19-23
II உரோமையர் 11: 33-36
III மத்தேயு 16: 13-20
“நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்”
நிகழ்வு
சில ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவிலிருந்த ஒரு கத்தோலிக்கத் திருக்கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் யூதப் பெண்மணி ஒருவர் கலந்துகொண்டுவிட்டு வெளியே வந்தார். தற்செயலாக அவரைப் பார்த்த அவருக்கு அறிமுகமான ஒருவர் அவரிடம், “பொதுவாக யூதர்கள் இயேசுவை இறைமகன் என்று ஏற்றுக்கொள்வதில்லையே! அப்படியிருக்கும்போது நீங்கள், எங்களுடைய வழிபாட்டில் கலந்துகொள்வது மிகவும் வியப்பாக இருக்கின்றது! ஒருவேளை நீங்கள் கத்தோலிக்கராக மாறிவிட்டீர்களா…?” என்றார்.
அதற்கு அந்த யூதப் பெண், “நான் யூத மறையில்தான் இன்னும் இருக்கிறேன்; கத்தோலிக்கராக மாறவில்லை” என்றார். இப்படிச் சொல்லிவிட்டுத் அவர் தொடர்ந்து பேசினார்: “யூதர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொன்றபோதும், அவர் மூன்றாம் நாள் வெற்றிவீரராய் உயிர்த்தெழுந்தார்! இயேசு இறைமகன் இல்லையென்றால் அவரால் உயிர்த்தெழுந்திருக்க முடியுமா…? அவருடைய உயிர்த்தெழுதல் மட்டுமல்ல, அவருடைய வாழ்வும் பணிகளும்கூட அவர் இறைமகன் என்பதற்குச் சான்றுகள். இதனாலேயே நான் அவரை இறைமகன் என்று ஏற்றுக்கொண்டு, இந்த வழிபாட்டில் கலந்துகொண்டேன்.”
அந்த யூதப் பெண் இவ்வாறு விளக்கமளித்ததைக் கேட்ட, கிறிஸ்துவப் பெண் இயேசுவின்மீது இன்னும் ஆழமாக நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்.
ஆம், இயேசு இறைமகன்; மெசியா. அதைத்தான் இந்த நிகழ்வும், பொதுக்காலம் இருபத்து ஒன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகமும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. இயேசு இறைமகன், மெசியா என்றால், அவர் எப்படிப்பட்ட மெசியா என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?
ஒரு நிறுவனமோ அல்லது இயக்கமோ… எதுவாக இருந்தாலும், அதை அவ்வப்பொழுது ஆய்வுக்கு உட்படுத்திப் பார்க்கவேண்டும். அப்பொழுதுதான் அந்த நிறுவனமும் இயக்கமும் கடந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, எதிர்காலத்தில் நல்ல முறையில் இயங்க முடியும்.
இறையாட்சிப் பணியைச் செய்யத் தொடங்கிய இயேசு, பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து, அவர்களோடு சேர்ந்து அப்பணியைச் செய்துவந்தார். இத்தகைய சூழ்நிலையில், அவர் தன்னோடு இருந்த சீடர்கள், தன்னைக் குறித்து என்ன தெரிந்து வைத்திருக்கின்றார்கள் என்பதை அறிய விரும்பினார். அதற்காக அவர் அவர்களிடம், இரண்டு கேள்விகளைக் கேட்கின்றார். இயேசு அவர்களிடம் கேட்கின்ற முதல் கேள்வி, “மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்பதாகும். இயேசு இப்படியொரு கேள்வியை தன் சீடர்களைப் பார்த்துக் கேட்டதும் அவர்கள், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும், வேறு சிலர் எலியா எனவும், மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்” என்கின்றார்கள்.
இயேசு செய்த பணிகளைப் பார்த்துவிட்டு ஏரோது, “இவர் திருமுழுக்கு யோவான்தான்” (மத் 14: 1-2) என்றான். இயேசுவை மக்கள் எலியா என்று சொன்னதற்குக் காரணம், சுழற்காற்றில் விண்ணகத்திற்குச் சென்ற எலியா (2அர 2: 11), ஆண்டவரின் நாள் வருமுன் வருவார் (மலா 4:5) என்ற நம்பிக்கை இருந்ததால் ஆகும். இயேசுவை மக்கள் எரேமியா என்று சொன்னதற்குக் காரணம், அவருடைய இறப்பைக் குறித்து திருவிவிலியத்தில் எங்கும் பதிவுசெய்யவில்லை. அதனால் இயேசுவை, இறைவாக்கினர் எரேமியா என்றும் சொன்னார்கள். இப்படி மக்கள் தன்னைக் குறித்து எப்படியெல்லாம் சொல்கின்றார்கள் என்பதை அறிந்த இயேசு, அவர்களிடம் அடுத்த கேள்வியைக் கேட்கின்றார்.
நீங்கள், நான் யாரெனச் சொல்கிறீர்கள்?
இயேசு தன்னுடைய சீடர்களிடம் கேட்கின்ற இரண்டாவது கேள்வி, “நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்பதாகும். இயேசு முதல் கேள்வியோடு நிறுத்திருக்கலாம். காரணம் மக்கள் எண்ண ஓட்டத்தையே சீடர்களும் வெளிப்படுத்தினார்கள்; ஆனால், அவர் தன்னோடு இருந்தவர்கள் தன்னைக் குறித்து அறியாமல் இருந்தால், அது அவ்வளவு நல்லதல்ல என்பதால், அவர்களிடம் இரண்டாவது கேள்வியைக் கேட்கின்றார்.
இயேசு கேட்ட இரண்டாவது கேள்விக்கு, எப்பொழுதும் சீடர்களின் சார்பாக அல்லது எல்லாரையும் விட முந்திக்கொண்டு பேசும் பேதுரு, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைக்கின்றார். பேதுரு இவ்வாறு உரைத்ததும் இயேசு அவரிடம், நீ பேறுபெற்றவன்… இதை உனக்கு விண்ணகத்திலுள்ள தந்தையே வெளிப்படுத்தியுள்ளார் என்கின்றார். ஆம். மறையுண்மையை இறைவன் ஒருவருக்கு வெளிப்படுத்தாவிட்டால், அவரால் அதைப் புரிந்துகொள்ள முடியாது. மேலும் மறையுண்மைகள் குழந்தைகளுக்கும் குழந்தை உள்ளம் கொண்டவர்களுக்கு மட்டுமே வெளிப்படுத்தப்படும் (மத் 11: 25) பேதுரு குழந்தை உள்ளம் கொண்டவராக இருந்திருக்கவேண்டும். அதனாலேயே அவர் இயேசுவை, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைக்கின்றார். இதற்காகவே இயேசு பேதுருவை நீர் பேறுபெற்றவன் என்கின்றார். மட்டுமல்லாமல், “உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருஅவையைக் கட்டுவேன்…..” என்கின்றார்.
தான் மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம் என்று கூறும் இயேசு
மக்கள், தன்னை யாரென்று சொல்கின்றார்கள் என்பதைக் கேட்டறிந்த பின், தன்னுடைய சீடர்கள், தன்னை யாரெனச் சொல்கிறார்கள் என்பதைக் கேட்டறிந்த பின், இயேசு அவர்களிடம், “தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம் என்று கண்டிப்பாய்க் கூறுகின்றார்.
பேதுரு இயேசுவைப் பற்றி, “மெசியா” என்று சரியாய்த்தானே சொன்னார்…? பிறகு எதற்கு இயேசு, தாம் மெசியா என்பதை எவரிடம் சொல்லவேண்டாம் என்று சொன்னார் என்ற கேள்வி எழலாம். இதற்கு முக்கியமான காரணம், சீடர்களும் சரி, யூதர்களும் சரி, ‘மெசியா’வைப் பற்றிக்கொண்டிருந்த தவறான புரிதல் ஆகும். சீடர்கள் உட்பட யூதர்கள் மெசியா என்பவர், உரோமையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் தங்களை விடுவித்து, ஆட்சியை நிலைநிறுத்துவார் என்றுதான் நினைத்தார்கள். உண்மையில் இயேசு யூதர்கள் நினைத்ததுபோன்று அரசியல் மெசியா கிடையாது; அவர் துன்புறும் மெசியா. மேலும் அவர் பகைவர்களிடமிருந்து விடுதலையைப் பெற்றுத்தரும் மெசியா கிடையாது; பாவத்திலிருந்து மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தரும் மெசியா. அதனால்தான் இயேசு தன்னுடைய சீடர்களிடம் தாம் மெசியா என்பதை எவரிடம் சொல்லவேண்டாம் என்கின்றார்.
நாம் இயேசுவைத் துன்புறும் மெசியாவாகவோ அல்லது அரசியல் மெசியாவாகவோ பார்ப்பதற்கும் நம்முடைய வாழ்விற்கும் நெருங்கிய தொடர்பிருக்கின்றது. எப்படியெல்லாம் இயேசுவை அரசியல் மெசியாவாகப் பார்க்கின்றபொழுது, நாம் இன்றைய அரசுகளைப் போன்று மக்களை அடக்கியாளத் துடிப்பவர்களாக இருப்போம். மாறாக, இயேசுவை நாம் துன்புறும் மெசியாவாகப் பார்த்தோமெனில், பிறருக்காக நாமும் துன்பங்களை ஏற்கத் துணிபவர்களாக இருப்போம். ஏனெனில், நம்முடைய எண்ணம் எப்படியோ, அப்படியே நம்முடைய வாழ்வும் இருக்கும்.
ஆகையால், நாம் இயேசுவை துன்புறும் மெசியாப் பார்த்து, பிறருடைய துன்பங்களில் நாமும் பங்குகொண்டு, அவர்களுடைய துன்பத்தைப் போக்கி, இன்பமாக மாற்ற, நம்மையே நாம் கையளிப்ப முன்வருவோம்.
சிந்தனை
‘இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்?’ (1 யோவா 5: 5) என்பார் யோவான். ஆகையால், நாம் இயேசுவை இறைமகன் என நம்பி ஏற்றுக்கொண்டு, அவரைப் போன்று மானிட மீட்புக்காகப் பணிபுரிந்து, பலியாகத் தயாராவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed