
உன் கடவுள் மீது அன்பு செலுத்து. உன்மீது நீ அன்புகூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 34-40
அக்காலத்தில்
இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர். அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், “போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்டார்.
அவர், “ ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’ இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன” என்று பதிலளித்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————
மத்தேயு 22: 34-40
“…இதற்கு இணையான இரண்டாவது கட்டளை”
நிகழ்வு
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டுவந்தபொழுது, அவர்களிடமிருந்து நாட்டிற்கு விடுதலையைப் பெற்றுத் தர அகிம்சை வழியைத் தேர்ந்தெடுத்து, அந்த வழியில் நடந்தவர் காந்தியடிகள். அதற்காக அவர் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். ஒருமுறை அவர் சிறையில் அடைக்கப்பட்டபொழுது, ஓர் ஆப்பிரிக்கா நாட்டவர் அங்கு சிறை அதிகாரியாக இருந்தார். அவர் காந்தியடிகளிடம் கொஞ்சம்கூட ஈவு இரக்கமில்லாமல், மிகக் கடுமையாக நடந்துகொண்டார். இதற்காகக் காந்தியடிகள் வருத்தப்படவில்லை; மாறாக, அவர் அந்தச் சிறைக் காவலரிடம் அன்போடு நடந்துகொண்டார்.
ஒருநாள் இரவில், சிறைச்சாலையில் யாரோ ஒருவர் கடுமையாக அலறுகின்ற சத்தம் கேட்டுக் காந்தியடிகள் திடுக்கிட்டார். ‘யாராக இருக்கும்…?’ என்று காந்தியடிகள் சத்தம் கேட்ட திசையை நோக்கி ஓடிவந்து பார்த்தபொழுது, அங்கு அவரை ஈவு இரக்கமின்றி நடத்தி வந்த சிறை அதிகாரி வலியால் துடித்துக்கொண்டிருப்பதைக் கண்டார். காந்தியடிகள் அவரிடம், “என்ன ஆயிற்று?” என்று காரணத்தைக் கேட்டபொழுது, அவர், “என்னைத் தேள் கொட்டிவிட்டது” என்று சொல்ல, காந்தியடிகள் அந்தக் சிறை அதிகாரியின் உடலில், தேள் கொட்டிய இடத்தில் பல்லால் கீறி, தேளின் நஞ்சு முழுவதையும் உறிஞ்சி வெளியே எடுத்தார். இதனால் அந்தச் சிறை அதிகாரி இயல்பு நிலைக்குத் திரும்பினார். இதற்குப் பிறந்த அவர் காந்தியடிகளிடம் மிகுந்த அன்போடும் மதிப்போடும் நடந்துகொண்டார்.
ஆம், சிறையில் இருந்த அதிகாரி காந்தியடிகளின்மீது வெறுப்பை உமிழ்ந்து, அவரை ஈவு இரக்கமின்றி நடத்தியபொழுது, காந்தியடிகளோ அவர்மீது அன்பைப் பொழிந்து, அவரைத் தன்னைப் போல அன்புசெய்தார். இதனால் அந்தச் சிறை அதிகாரி காந்தியடிகளை அன்போடும் மதிப்போடும் நடத்தும் நிலை ஏற்பட்டது. இன்றைய நற்செய்தி வாசககத்தில் இயேசு, இறையன்புக்கு இணையான கட்டளை, பிறரன்பு என்று எடுத்துச் சொல்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த இறையன்பு, பிறரன்புக் கட்டளைகளை நம்முடைய வாழ்வில் நாம் எப்படிக் கடைப்பிடித்து வாழ்வது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவைச் சோதிக்க வந்த பரிசேயர்
ஆண்டவர் இயேசு, உயிர்த்தெழுதல் தொடர்பாக சதுசேயர்களுக்குச் சரியான முறையில் பதிலளித்ததைத் தொடர்ந்து, பரிசேயர் அவரைச் சோதிக்க அவரிடம் வருகின்றனர். அதை முன்னிட்டுப் பரிசேயரில் இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் இயேசுவிடம், “திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்கின்றார். பரிசேயர் இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன் அவரிடம் வந்தாலும், அவர்கள் நடுவில், தங்களிடம் உள்ள அறநூறு கட்டளைகளில், ‘எது தலைசிறந்த கட்டளை…?’ ‘எது சிறிய கட்டளை…?’ என்ற வாக்குவாதம் நடந்துகொண்டே இருந்தது. இதனால் அவர்கள், மக்களால், ‘போதகர்’ என்றும், ‘இறைவாக்கினர்’ என்றும் அழைக்கப்பட்ட இயேசு இதற்கு என்ன பதில் சொல்கின்றார் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக அவரிடம் வருகின்றார்கள். திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது என்பதற்கு இயேசு சொல்லக்கூடிய பதில் நமது கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது. அது குறித்துத் தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இறையன்பும் பிறரன்புமே எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அமைகின்றன
திருச்சட்ட அறிஞர் இயேசுவிடம் கேட்ட கேள்விக்கு, இயேசு இணைச்சட்ட நூல் 6: 5, லேவியர் 19: 18 ஆகிய இரண்டு இறைவார்த்தைப் பகுதிகளை ஒன்றாக இணைத்துப் பதில் தருகின்றார். ஆம் இறையன்பு முதன்மையான கட்டளை, இதற்கு இணையான கட்டளை பிறரன்பு என்று சொல்லிவிட்டு, திருச்சட்ட நூல் முழுமைக்கும், இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன என்கின்றார்.
இறையன்பு முதன்மையான கட்டளை. அதற்கு இணையான கட்டளை பிறரன்பு என்றால், நாம் இறைவனை எந்தளவுக்கு முழுமையாக அன்பு செய்கின்றோமா அந்தளவுக்கு நமக்கு அடுத்திருப்பவரையும் அன்பு செய்யவேண்டும். இன்றைக்கு இருக்கின்ற ஒருசிலரைப் போன்று, அன்றைக்கு இருந்த யூதர்கள் இறைவனை அன்புசெய்த அளவுக்குத் தங்களுக்கு அடுத்திருப்பவரை அன்பு செய்யவில்லை இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசு, தலைசிறந்த கட்டளை எது என்பதற்குக் கொடுத்த விளக்கம் பரிசேயர்களைச் சிந்திக்க வந்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
நாம் இறைவனை அன்புசெய்யும் அளவுக்கு நமக்கு அடுத்திருப்பவரை அன்பு செய்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக!’ (எபே 3: 17) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் நம்முடைய வாழ்வில் இறையன்பையும் பிறரன்பையும் ஆணிவேரும் அடித்தளமுமாய்க் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed