அம்மா! தாயே! தயாபரியே! அமல உற்பவமே! எங்கள் அன்பான சதா சகாய மாதாவே! இதோ உமது பாத சந்நிதானம் பணிந்து நிற்கும் பாவிகளைத் திருக்கண்ணோக்கிப் பாரும்; பஞ்சத்தால் வாடி வந்தோம்; பசிப்பிணியால் ஓடி வந்தோம்; படுந்துயரம் தாங்காமல் பதறிவந்தோம்; தாயே எங்களுக்கு சகாயம் புரியும் சகாரி நீயல்லவா? உபகாரம் பண்ணும் உத்தமி நீயல்லவோ? உம்மையல்லாது எங்களுக்கு உதவி புரிவார் யாருண்டு? துணை செய்வார் யாருண்டு? இரங்குவார் யாருண்டு? ஏந்தி அணைப்பார் யாருண்டு?
அம்மா! தாயே! ஆண்டவளே! உம்மையல்லோ உலகம் சகாயத்தின் நாயகி என்று அழைக்கிறது; இரக்கத்தின் இராக்கினி என்று கூப்பிடுகிறது; இதனாலல்லோ உமது சந்நிதானம் கோடானு கோடி பக்தர்களால் நிரம்பி வழிகிறது. லட்சாதி லட்சம் பிற சமதிகளால் நிறைகிறது. நாளாந்தம் ஆயிரமாயிரம் புதுமைகளால் பொலிந்து விளங்குகிறது.
இதையறிந்தே பாவிகளாயிருக்கிற நாங்கள் உம்மேல் நம்பிக்கை வைத்து உமது சந்நிதானத்தில் சரணடைந்து நிற்கிறோம். உமது பாதார விந்தத்தைக் கட்டிப்பிடித்துக் கண்ணீரால் கழுவுகிறோம். இருகை நீட்டி இரந்து கேட்கிறோம். விண்ணப்பம் பண்ணி விடையை எதிர் பார்க்கிறோம். இந்த உலகத்தில் உம்மையல்லாது எங்களை ஆதரிப்பார் யாருமில்லை. இந்நேரம் எண்கள் பேரில் மனமிரங்கி ஒருமுறையாவது உமது கருணையின் வழியில் கடைக்கண் பார்வையை எங்கள் பக்கம் திருப்பியருளும். மதுரவாய் திறந்து மறுமொழி சொல்லியருளும். திருக்கரத்தால் வெகுமதியை தந்தருளும்.
இதோ உமது படத்தினருகே எங்களுடன் கூடியிருந்து உமது சகாயத்தை கேட்கும் பிற சமயவாதிகள் பேரிலும் இரக்கமாயிரும். அவர்கள் கேட்கும் ஒவ்வொரு வரத்தையும் இல்லை என்று சொல்லாமல் ஈந்தருளும். அவர்களும் உமது நேசப் பிள்ளைகள் என்பதை மறவாதேயும். விசேஷமாய் அவர்கள் மனந்திரும்பப் பண்ணியரும். கடைசியாக ஆண்டவளே எங்கள் பாப்பனவரையும் ஞான மேய்ப்பர்களையும் எங்கள் நாட்டையும் எங்கள் தொழில் துறைகளையும் எங்களுக்குள்ள யாவற்றையும் உமக்கு பாத காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறோம். அதை நீர் ஏற்று ஆசீர்வதித்தருளும்.
செபிப்போமாக……………….
சர்வேசுரா சுவாமி பரிசுத்த சதா சகாய மாதாவை வணங்கி அவளுடைய சலுகையை இரந்து அழுது மன்றாடிக் கிடக்கும் அடியர்கள் மேலே கிருபை வைத்தருளவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். – ஆமென்.
என்றும் உங்களுடன் சேர்ந்து செபிக்கும்
Source: New feed