அரசியல் என்பது அதிகாரமல்ல, மாறாக, சேவை

மூகத்திலும் அரசியல் நிலைகளிலும் போராடும்போது, ஒரு சீடத்துவ சமூகத்தின் அங்கத்தினர் என்ற உணர்வின்றியும், இறைவனின் அன்பை அனுபவிக்காமலும் இருந்தால், நல்ல அரசியல் பதவிகளைப் பெற்றாலும், தனிமையும் சோகமுமே அங்கே தங்கியிருக்கும் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

‘அரசியலில் இலத்தீன் அமெரிக்க புதிய தலைமுறைக்கென திருஅவையின் கோட்பாடுகளும், அர்ப்பணமும்’ என்ற தலைப்பில் 26 இளையோருக்கு பயிற்சி வழங்கும் வண்ணம், பிப்ரவரி மாதம் 24ம் தேதி முதல் மார்ச் 4ம் தேதி வரை வத்திக்கானில் நடத்தப்பட்ட பயிற்சிக் கருத்தரங்கில் பங்குபெற்றோர் உட்பட, ஏறத்தாழ 35 பேரை, இத்திங்கள் காலை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலத்தீன் அமெரிக்காவின் பொது நலனை மனதில்கொண்டு, இளையோருக்கு வழங்கப்படும் பயிற்சி குறித்து தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.

உண்மை நிலைகளை, புதிய வழிகளில் நோக்கவும், மாற்றங்களை கொணரும் முயற்சியில் உண்மை மதிப்பீடுகளை இழந்துவிடாதிருக்கவும் தன் உரையில் வலியுறுத்திய திருத்தந்தை, பேராயரான, புனித ஆஸ்கர் அர்னுல்ஃபோ ரொமேரோ அவர்கள், திருஅவை, மற்றும், அரசியல் குறித்து எடுத்துரைத்துள்ளவற்றை மேற்கோள் காட்டினார்.

அரசியல் என்பது அதிகாரத்தை நிர்வகிப்பதல்ல, மாறாக, சேவைக்கானது என்ற அப்புனிதரின் வார்த்தைகளைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள், நற்செய்தியின் மதிப்பீடுகளுடன், திருஅவை மேய்ப்பர்களுடன் இணைந்து பணியாற்றுவது குறித்தும் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.