
செவ்வாய் பிற்பகலில், வியன்னா (#Vienna) என்ற ஹாஷ்டாக்குடன், திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “இந்த பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்கள் மற்றும், அவர்களின் குடும்பங்களுக்காகச் செபிக்கின்றேன். போதும் வன்முறை. நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து, அமைதி மற்றும், உடன்பிறந்த உணர்வை வலுப்படுத்துவோம். அன்பு ஒன்றே, காழ்ப்புணர்வை அகற்ற முடியும்” என்ற சொற்களைப் பதிவுசெய்திருந்தார்
மேலும், ஆஸ்ட்ரியத் தலைநகர் வியன்னாவில் நவம்பர் 02, இத்திங்கள் இரவில் நடத்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோர், அவர்களின் குடும்பத்தினர் மற்றும், அந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருடனும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது அருகாமையையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
வியன்னா நகரில் இத்திங்கள் இரவில், இனம்தெரியாத மனிதர் ஒருவர், கண்மூடித்தனமாக, ஆறு இடங்களில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் இறந்துள்ளனர் மற்றும், 15க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலையொட்டி, திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், வியன்னா பேராயர் கர்தினால் Christoph Schönborn அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரில் தந்திச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கும், வேதனைக்கும் காரணமான, இந்த வன்முறை தாக்குதல் பற்றி அறிந்த திருத்தந்தை, இதில் காயமுற்றுள்ள அனைவரும் விரைவில் நலம்பெற செபிக்கின்றார் என்றும், பாதிக்கப்பட்டுள்ள எல்லாரோடும் திருத்தந்தை ஒருமைப்பாட்டுணர்வு கொண்டுள்ளார் என்றும், அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஐ.எஸ். இஸ்லாம் அமைப்பைச் சார்ந்த ஒருவரால் வியன்னாவில் நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதலில் பலியானோர் மற்றும், காயமுற்றோருடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் விதமாக, ஆஸ்ட்ரியாவில் மூன்று நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.
Source: New feed