
ஓர் ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையேயுள்ள திருமணஉறவு, சமுதாயம் முழுவதற்கும், ஓர் அடிப்படை ஆதாரமாக உள்ளது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
திருப்பீட வாழ்வுக் கழகத்தின் தலைவரும், திருமணம் மற்றும், குடும்ப அறிவியல் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் பாப்பிறை இறையியல் நிறுவனத்தின் புரவலருமான பேராயர் வின்சென்சோ பாலியா (Vincenzo Paglia) அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள, “Amoris laetitia” திருத்தூது மடலுக்கு, அர்ப்பணிக்கும் ஓராண்டு பற்றி, வத்திக்கான் செய்தித் துறைக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
Amoris Laetitia அதாவது “அன்பின் மகிழ்வு” எனப்படும் திருத்தந்தையின் திருத்தூது மடல் வெளியிடப்பட்டதன் ஐந்தாம் ஆண்டை முன்னிட்டு, திருத்தந்தை அறிவித்துள்ள, “அன்பின் மகிழ்வு குடும்பம்” என்ற ஆண்டு, குடும்ப மறைப்பணியில், பொதுநிலையினர், தங்களை ஈடுபடுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது என்று, பேராயர் பாலியா அவர்கள் கூறியுள்ளார்.
உறுதியாக அமைகின்ற குடும்பம், சமுதாயத்தின் கட்டமைப்புக்கு மிகவும் அவசியம் என்றும், குடும்பம் பற்றி சிந்திப்பது என்பது, மனித சமுதாயத்தின் முக்கியமான இறுதிநிலை பற்றி சிந்திப்பதாகும் என்றும் கூறிய பேராயர் பாலியா அவர்கள், இந்த குடும்ப ஆண்டில், குடும்ப மேய்ப்புப் பணிக்கு ஊக்கம் தரப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த குடும்ப ஆண்டில், பொதுநிலையினர் மற்றும், குடும்ப திருப்பீட அவை, மறைமாவட்டங்கள், பங்குத்தளங்கள், பல்கலைக்கழகங்கள், குடும்பத்தை மையப்படுத்திய கழகங்கள் போன்றவை, பயிலரங்கங்கள் நடத்துவதற்கு வழிகாட்டிகளை வழங்கும் என்றும், பேராயர் பாலியா அவர்கள் கூறினார்.
கோவிட்-19 பெருந்தொற்று முடிவுற்றபின், துன்புறும் மக்களை வரவேற்று உதவுவதில் கத்தோலிக்க குழுமங்கள் முன்னணியில் நின்று செயல்படவேண்டும் என்றும், பேராயர் பாலியா அவர்கள் கேட்டுக்கொண்டார்.
வரும் மார்ச் மாதம் 19ம் தேதி, புனித யோசேப்பு திருவிழாவின்போது, Amoris laetitia குடும்பம் என்ற ஆண்டு துவக்கப்பட்டு, 2022ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி நிறைவுக்கு வரும் என திருப்பீடம் அறிவித்துள்ளது. குடும்ப அன்பு, மற்றும், மகிழ்வை மையப்படுத்திய இந்த ஓராண்டு கொண்டாட்டம், 2022ம் ஆண்டு ஜூன் மாதம் உரோம் நகரில் இடம்பெறவிருக்கும் 10வது உலக குடும்ப மாநாட்டுடன் நிறைவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Source: New feed