அர்ஜென்டினா நாட்டின் Neuquén மாநிலத்தில் அமைந்துள்ள Lujan அன்னை மரியா திருத்தலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட 40வது திருப்பயணத்தில் தானும் ஆன்மீக முறையில் கலந்துகொண்டதாக, அந்நாட்டிற்கு அனுப்பியுள்ள காணொளி செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
‘அன்னையே எங்களை அரவணைத்தருளும், நாங்கள் தொடர்ந்து நடக்க விரும்புகிறோம்’ என்ற தலைப்பில் இம்மாதம் 23 முதல் 26 வரை இணையம் வழி செபத்துடன் அவரவர் வீட்டிலிருந்தே மேற்கொள்ளப்பட்ட இந்த ஆன்மீகத் திருப்பயணத்தில், தானும் கலந்துகொண்டதாக தன் காணொளிச் செய்தியில் கூறும் திருத்தந்தை, இந்த கொள்ளைநோய்க் காலத்தில் அன்னையின் அரவணைப்பு நமக்கு அதிகம் அதிகமாகத் தேவைப்படுகின்றது என கூறியுள்ளார்.
அன்னை மரியா குறித்த திருப்பயணிகள் சிலரின் சான்றுகளை தன் செய்தியில் மேற்கோள் காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் ஒவ்வொருவரும், ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள் எனினும், நம் அனைவருக்கும் அன்னை ஒருவரே, அவரே அன்னை மரியா எனவும், தன் காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.
இணையம் வழியாக நடத்தப்பட்ட இந்த நான்கு நாள் ஆன்மீகத் திருப்பயணம், இஞ்ஞாயிறன்று, Neuquén ஆயர் Fernando Croxatto அவர்கள் நிறைவேற்றியத் திருப்பலியுடன் நிறைவுக்கு வந்தது.
Source: New feed