செப்டம்பர் 21, இத்திங்களன்று, அனைத்துலக அமைதி நாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியின் தேவையை வலியுறுத்தி, இரு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டிருந்தார்.
“இறைவனிடமிருந்து வரும் நம் பொதுவான துவக்கத்தின் அடிப்படையில், உண்மையான உடன்பிறந்த தன்மையை முனைப்புடன் தொடர்வது நமது தேவை. அமைதியை விரும்புவது, அனைத்து மனித இதயங்களின் ஆழமான விருப்பம். இதைவிடக் குறைவான எதையும் தேடி திருப்தியடைய நம்மையே விட்டுவிடக் கூடாது” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.
“ஒப்புரவை நோக்கியப் பயணத்திற்கு, பொறுமையும், நம்பிக்கையும் அவசியம். அமைதியின் மீது நம்பிக்கை கொள்ளாமல், அமைதியை உருவாக்க இயலாது” என்ற சொற்களை, திருத்தந்தை தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியில் வெளியிட்டார்.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, 1981ம் ஆண்டு, அனைத்துலக அமைதி நாளை உருவாக்கியது.
இந்த உலக நாளையொட்டி, உலகெங்கும் போர்நிறுத்தம் நடைபெறவேண்டும் என்றும், இந்நாள், வன்முறை ஏதுமற்ற உலக நாளாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்றும் 2001ம் ஆண்டு, ஐ.நா.வின் பொது அவையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
2020ம் ஆண்டு சிறப்பிக்கப்பட்ட அனைத்துல அமைதி நாளுக்கென, “அனைவரும் ஒன்றாக அமைதியை வடிவமைக்க” (Shaping Peace Together) என்பது, மையக்கருத்தாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
Source: New feed