உலகில் அணு ஆயுதங்கள் பரவத் தொடங்கிய காலத்திலிருந்து, இந்த ஆயுதங்கள் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டுமென, திருப்பீடம் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. தலைமையகத்தில் நிகழ்ந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றினார்.
ஐ.நா. அவை கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாக பங்கேற்றுவரும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், அணு ஆய்வுக்கு எதிரான உலக நாளான, செப்டம்பர் 06, இவ்வியாழனன்று நியூ யார்க் நகர், ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றியவேளையில், இவ்வாறு கூறினார்.
அணு ஆயுதப் போர் அச்சுறுத்தலற்ற ஓர் உலகிற்காக, மனித சமுதாயம் ஏங்குவதை, எப்போதும் சுட்டிக்காட்டி வருகின்ற திருப்பீடம், அணு ஆய்வு தடை புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் அமல்படுத்தப்படுமாறு, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது என்றும், பேராயர் அவுசா அவர்கள் கூறினார்.
இந்த ஒப்பந்தம் குறித்து, 2003ம் ஆண்டில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கிற்குப்பின், 168 நாடுகள் இதில் கையெழுத்திட்டன மற்றும், 104 நாடுகள் இதை அமல்படுத்தின என்றும், கூறினார் பேராயர் அவுசா.
ஆயினும், தற்போது இந்நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, பெருமளவான நாடுகள் அணு ஆய்வு தடை ஒப்பந்தம் அமல்படுத்தப்படவே விரும்புகின்றன என்பதைக் காட்டுகின்றது என்று கூறிய பேராயர் அவுசா அவர்கள், ஆயுதக் களைவு ஒப்பந்தங்கள், சட்டமுறையானவை என்பதைவிட, நன்னெறி சார்ந்தவை என்பதையும் சுட்டிக்காட்டினார்.