நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா!
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 15-26
அக்காலத்தில்
மக்களுள் சிலர் இயேசுவைக் குறித்து, “பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றனர். வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து ஏதேனும் ஓர் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர்.
இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களிடம் கூறியது: “தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்துவிடும். சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போனால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்? பெயல்செபூலைக் கொண்டு நான் பேய்களை ஓட்டுகிறேன் என்கிறீர்களே. நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? ஆகவே அவர்களே உங்கள் கூற்று தவறு என்பதற்குச் சாட்சிகள். நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா! வலியவர் ஆயுதம் தாங்கித் தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும். அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை வென்றால் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக்கலங்களையும் பறித்துக் கொண்டு, கொள்ளைப் பொருளையும் பங்கிடுவார்.
என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார்.
ஒருவரை விட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம் தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல், ‘நான் விட்டுவந்த எனது வீட்டுக்குத் திரும்பிப் போவேன்’ எனச் சொல்லும். திரும்பி வந்து அவ்வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டிருப்பதைக் காணும். மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளை அழைத்து வந்து அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும்.
அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையை விடக் கேடுள்ளதாகும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————-
“நம்மை அவமானப்படுத்துபவர்களை எப்படி எதிர்கொள்வது?”
நிகழ்வு
தாத்தாவும் பேரனும் மனம்விட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது பேரன் தாத்தாவிடம், “தாத்தா! ஒருவர் என்னை அவமானப்படுத்தினால் நான் என்ன செய்வது?” என்றான். “உன்னை ஒருவர் அவமானப்படுத்தினால், அவரை நிராகரித்து விடு; அப்படியில்லை என்றால், அப்படியே சிரித்துவிட்டுக் கடந்துவிடு. ஒருவேளை அவர் அவமானப்படுத்தியதில் ஏதாவது நல்ல செய்தி இருப்பின், அந்தப் பாடத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, பாரத்தை விட்டுவிடு” என்று அறிவுப்பூர்வமாகப் பதிலளித்தார்.
தன்னுடைய தாத்தாவிடமிருந்து இப்படியொரு பதில் வந்ததைக் கேட்டுப் பேரன் பெரிதும் மகிழ்ந்தான்.
நம்மை அவமானப்படுத்துபவர்களை அல்லது நம்மைத் தேவையில்லாமல் விமர்சிப்பவர்களை நாம் எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்ற உண்மையை விளக்கிச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தியில் இயேசு பேய்பிடித்துப் பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டியதும், பரிசேயக் கூட்டம் அவரைத் தேவையில்லாமல் விமர்சிக்கின்றது. இந்த விமர்சனத்தை இயேசு எப்படி எதிர்கொண்டார் என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தூய ஆவியாரால், தீய ஆவியை விரட்டும் இயேசு
திருத்தூதர் பணிகள் நூல் 10: 38 இல் இவ்வாறு நாம் வாசிக்கின்றோம்: “கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால், அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்.” இவ்வார்த்தைகள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த மண்ணுலகத்தில் வாழ்ந்தபொழுது, தூய ஆவியாரின் வல்லமையால், தீய ஆவியை விரட்டியடித்தார் என்ற உண்மையை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றன. இப்படி இருக்கையில், இன்றைய நற்செய்தியில், இயேசு பேய்பிடித்துப் பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டியதும், ஒருசிலர் அதாவது பரிசேயர்கள், இயேசு பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுவதாகச் சொல்வது மிகவும் வியப்பாக இருக்கின்றது.
ஒருவரை எதிர்த்து நிற்க முடியாமல் அல்லது ஒருவரோடு போட்டி போட முடியாமல் போனால், அவரைப் பற்றித் தவறாகப் பரப்புரை செய்வது ஒருசிலர் செய்யக்கூடிய மிக மலினமான செயல். பரிசேயர்களால் இயேசுவை எதிர்த்து நிற்க முடியவில்லை; அவர் அடைந்த பெயரையும் புகழையும், மக்கள் நடுவில் அவர் கொண்டிருந்த செல்வாக்கையும் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் அவர்கள், இயேசுவைப் பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகின்றார் என்று விமர்சிக்கின்றார்கள். பரிசேயர்களின் இந்தத் தேவையற்ற விமர்சனத்தை இயேசு எப்படி எதிர்கொண்டார் என்பதைப் பற்றித் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.
தனக்கு எதிராகப் பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்காது
‘பரிசேயர்கள் தன்னைத் தேவையின்றி விமர்சிக்கின்றார்களே!’ என்று நினைத்து இயேசு முடங்கிப் போய்விடவில்லை. மாறாக, அவர் அவர்களுக்குத் தக்க பதில்கூறுகின்றார். இயேசு அவர்களுக்குக் கூறும் முதலாவது பதில், “தனக்கு எதிராகப் பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது” என்பதாகும். பரிசேயர்கள் சொல்வதுபோல், இயேசு பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகின்றார் எனில், அது பேய்களின் ஆட்சிக்கு எதிரான செயலாகிவிடும். அப்படி யாரும் தான் கெட்டுப்போக வேண்டும் என்று நினைப்பதில்லை. அதனால் பரிசேயர்களின் கூற்று பெய் என்று நிரூபிக்கின்றார் இயேசு.
இயேசு பரிசேயர்களுக்கு அளிக்கும் இரண்டாது பதில், நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஒட்டுகிறேன் என்றால், நீங்கள் யாரைக் கொண்டு பேய்களை ஒட்டுகிறீர்கள் என்பதாகும். இயேசுவின் காலத்தில் பலர் பேய்களை ஓட்டிக்கொண்டிருந்தார்கள். நிச்சயமாக அவர்கள் இயேசுவைப் போன்று தூய ஆவியாரின் வல்லமையால் பேயை ஓட்டி இருக்கமாட்டார்கள். அதனால்தான் இயேசு நீங்கள் யாரைக் கொண்டு பேய்களை ஒட்டுகிறீர்கள் என்று அவர்களுக்குப் பதிலளிக்கின்றார்.
இயேசு பரிசேயர்களுக்கு அளிக்கும் மூன்றாவது பதில், ஒரு வலியவரை அவரை விட வலியவர்தான் வெல்ல முடியும் என்பதாகும். இயேசு பேயை விரட்டியடித்தார் எனில், அவர் அதைவிட வலிமையானர், அதன்மீது அதிகாரம் கொண்டிருப்பவர் என்பது உண்மையாகின்றது. இவ்வாறு இயேசு தன்னைத் தேவையின்றி விமர்சித்தவர்களுக்குத் தக்க பதில் கொடுத்து, அவர்களுடைய வாயை அடிக்கின்றார்.
நம்முடைய வாழ்விலும் ஒருசிலர் நம்மைத் தேவையின்றி, எந்தவோர் ஆதாரமும் இன்றி விமர்சிக்கலாம். இத்தகையோரை நாம் இயேசுவைப் போன்று எதிர்கொள்வது அல்லது நிகாரித்துவிட்டுக் கடந்து போவது சிறந்தது.
சிந்தனை
‘மற்றவர்களை விமர்சிப்பவர்களாக அல்லாமல், ஊக்கப்படுத்துபவர்களாக இருங்கள். ஏனெனில் இந்த உலகத்த்தில் மற்றவர்களை விமர்சிப்பவர்கள் தேவைக்கு மிகுதியாகவே இருக்கின்றார்கள்’ என்கிறது ஒரு முதுமொழி. ஆகையால், நாம் மற்றவர்களைத் தேவையில்லாமல் விமர்சிப்பவர்களாக இல்லாமல், ஊக்கப்படுத்துபவர்களாக இருப்போம். இயேசுவின் வழியில் எப்பொழுதும் நாம் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed