அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன்.
அக்டோபர் 26 : நற்செய்தி வாசகம்
அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 49-53
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் நான் பெறவேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறேன்.
மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன். இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————————————-
“பாவத்திற்குக் கிடைக்கும் கூலி சாவு”
பொதுக்காலம் இருபத்து ஒன்பதாம் வாரம் வியாழக்கிழமை
I உரோமையர் 6: 19-23
II லூக்கா 12: 49-53
“பாவத்திற்குக் கிடைக்கும் கூலி சாவு”
மெசினா நகருக்குக் கிடைத்த தண்டனை:
ஜான் இலாரன்ஸ் எழுதிய, “Down to Earth” என்ற நூலில் இடம்பெறும் உண்மை நிகழ்வு இது.
சிசிலியில் உள்ளது மெசினா (Messina) என்ற நகர். இந்த நகரில் உள்ள பலருக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. தவிர, ஒழுக்கக்கேடான வாழ்விற்கும் இங்குள்ளவர்கள் பெயர் போனவர்கள்.
1908 ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 25 ஆம் நாள், இந்த நகரிலிருந்து வெளிவந்த பத்திரிகைகளில் ‘கடவுளே! உம்மால் முடிந்தால் மெசினா நகர்மீது நில நடுக்கும் வர வையும்’ என்பது மாதிரியான கேலிச் சித்திரங்கள் வந்திருந்தன. இந்த மாதிரியான கேலிச் சித்திரங்கள் வந்த மூன்றாம் நாள், அதாவது டிசம்பர் 28 ஆம் நாள், மெசினாவில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் எண்பத்து நான்காயிரம் பேர் உயிரிழந்தனர்.
பாவம் செய்தது மட்டுமல்லாமல், கடவுளையே கேலி செய்வோர் எத்தகைய தண்டனை பெறுவர் என்பதற்கு மெசினா நகர் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இன்றைய இறைவார்த்தை, பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு என்கிறது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
பாவத்திற்கு அடிமையாய் இருப்பது பற்றியும், கடவுளுக்கு அடிமையாய் இருப்பது பற்றியும் பேசுகின்ற புனித பவுல், பாவத்திற்கு அடிமையாய் இருந்தால் சாவே தண்டனையாகக் கிடைக்கும் என்கிறார். அதே நேரத்தில் ஒருவர் கடவுளுக்கு அடிமையாய் இருக்கின்றபோது, அவர் நிலைவாழ்வைப் பரிசாகப் பெறுவார் என்கின்றார்.
இன்றைய நற்செய்தியில் இயேசு, “மண்ணுலகில் தீமூட்ட வந்தேன்” என்கிறார். ‘தீமூட்ட வந்தேன்’ என்று இயேசு சொல்வதை ‘தீர்ப்பளிக்க வந்தேன்’ என்று இயேசு சொல்வதாக நாம் புரிந்துகொள்ளலாம். ஏனெனில், திருவிவிலியத்தில் தீயானது நீதித் தீர்ப்போடு நெருங்கிய தொடர்புடையதாக இருக்கின்றது (மத் 3:11, எசா 66:15, யோவே 2:30, 1 கொரி 3:13). ஆகையால், ஆண்டவராகிய இயேசு மண்ணுலகில் தீமூட்ட இருப்பதால் அல்லது நீதித் தீர்ப்பு வழங்க இருப்பதால், முதல் வாசகத்தில் புனித பவுல் சொல்வது போல், நாம் பாவத்திற்கு அல்ல, கடவுளுக்கு அடிமையாய் வாழ்ந்து, நிலைவாழ்வைப் பரிசாகப் பெறுவோம்.
சிந்தனைக்கு:
நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார் (திபா 1:6).
ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கடவுள் கைம்மாறு செய்வார் (உரோ 2: 16).
ஆண்டவரைத் தேடுங்கள்; நீங்கள் வாழ்வீர்கள் (ஆமோ 5:6).