மனம் மாறாவிட்டால், நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-9
அக்காலத்தில்
சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழியாக, “இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.
சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும் விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்” என்றார்.
மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: “ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், ‘பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்திமரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?’ என்றார்.
தொழிலாளர் மறுமொழியாக, ‘ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டு வையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எரு போடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்’ என்று அவரிடம் கூறினார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————
லூக்கா 13: 1-9
அவர்(கள்) மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளி(கள்) என நினைக்கிறீரா?
நிகழ்வு
பற்பசை (Toothpaste) உலகில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்திருக்கும் ஒரு நிறுவனம், கோல்கேட் நிறுவனம். இதன் நிறுவனர் சாமுவேல் கோல்கேட் என்பவர் ஆவார்.
இறைவன்மீது மிகுந்த பற்றுக்கொண்ட இவர், ஒருநாள் ஒரு நற்செய்திக் கூட்டத்தில் கலந்துகொண்டார். நற்செய்திக்கூட்டத்திற்கு பலதரப்பட்ட மக்கள் வந்திருந்தார்கள். நற்செய்திக் கூட்டத்தின் நிறைவில் திருப்பலி நடைபெற்றது. அந்தத் திருப்பலியில் மறையுரைக்குப் பின்னர், அருள்பணியாளர், “இப்பொழுது யாரெல்லாம் பாவ மன்னிப்புப் பெற விரும்புகின்றீர்களோ, அவர்கள் பீடத்திற்கு முன்பு வரலாம். நான் அவர்களுக்குப் பாவ மன்னிப்பு வழங்குவேன்” என்றார்.
அருள்பணியாளர் இவ்வாறு சொன்னதும், அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த பிற சமயத்தைச் சார்ந்த விலைமகள் ஒருத்தி, பீடத்திற்கு முன்பாக வந்து, முழந்தாள் படியிட்டாள். அவள் பீடத்திற்கு முன்பாக வந்து முழந்தாள்படியிட்டதுவோ ஒருசிலர், “இவள் மிகப்பெரிய பாவியாற்றே! கடவுள் இவளுடைய பாவத்தை எல்லாம் மன்னிப்பாரா?” என்று முணுமுணுக்கத் தொடங்கினார்கள். இது சாமுவேல் கோல்கேட்டின் செவிகளில் நன்றாகவே விழுந்தது. இருந்தாலும் அவர் எதுவும் பேசாது அமைதியாக இருந்தார்.
இதற்குப் பின்னர் அருள்பணியாளர் பீடத்திற்கு முன்பாக முழந்தாள்படியிட்டிருந்த விலைமகளுக்கு பாவமன்னிப்பு வழங்கினார். அவர் அந்தப் பெண்ணுக்குப் பாவ மன்னிப்பு வழங்கியதும், அவள் புதிய பெண்ணாக உணர்ந்தாள். அதனால் அவள், “ஆண்டவர் எனக்குப் பாவ மன்னிப்பு வழங்கிவிட்டார் என்பதை என்னுடைய உள்ளத்தில் நன்றாகவே உணர்கிறேன். ஆகவே, பிற சமயத்தைச் சார்ந்த நான் இப்பொழுதே திருமுழுக்குப் பெற்று, கிறிஸ்தவளாக வாழ விரும்புகின்றேன்” என்று உரக்கச் சொன்னாள்.
அந்தப் பெண்மணி இவ்வாறு சொன்னதைக் கேட்டுவிட்டு, ‘இவள் மிகப்பெரிய பாவியாற்றியே…! இவளுடைய பாவத்தையெல்லாம் கடவுள் மன்னிப்பாரா?’ என்று முன்பு முணுமுணுத்த அதே மனிதர்கள், இப்பொழுதும் அதே வார்த்தைகளைச் சொல்லி முணுமுணுத்தார்கள். அதுவரை பொறுமையாக இருந்த சாமுவேல் கோல்கேட், முணுமுணுத்துவர்களை நோக்கி, “கடவுளால் மன்னிக்க முடியாத குற்றம் எதுவும் இருக்கின்றதா?. ஒருவேளை கடவுளால் இந்தப் பெண்மணி செய்த குற்றத்தை மன்னிக்க முடியாது என நீங்கள் நினைத்தீர்கள் எனில், நீங்கள் கடவுளை முழுமையாக நம்பவில்லை என்பது பொருள். மேலும் அந்தப் பெண்மணியை மிகப்பெரிய பாவி எனக் குற்றஞ்சாட்டும் நீங்கள், இதுவரை பாவமே செய்யவில்லையா?” என்றார். சாமுவேல் கோல்கேட் இப்படிச் சொன்னதும் அவர்களால் எதுவும் பேச முடியவில்லை.
ஆம், பலருக்கு மற்றவர்கள் செய்த தவறுதான் பெரிதெனத் தெரிகின்றதே ஒழிய, தாங்கள் செய்த தவறு பெரிதெனத் தெரிவதில்லை. இத்தையோர் தங்களுடைய வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்திப்பார்த்து, கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வது நல்லது. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, மற்றவர்களைப் பாவிகள் என்றும் குற்றவாளிகள் என்றும் கூற விழைந்தவர்களிடம், நீங்கள் முதலில் மனம்மாறுங்கள் என்கின்றார். இது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மற்றவர்களைத் குற்றவாளிகள் எனத் தீர்ப்பிடும் முன், நாம் மனம்மாறுவது நல்லது
இன்றைய நற்செய்தி வாசகம், பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரை பிலாத்து கொன்றான் என்று ஒருசிலர் இயேசுவிடம் சொல்வதோடு தொடங்குகின்றது. இவர்கள் இயேசுவிடம் இச்செய்தியை சொல்வதன்மூலம், பிலாத்துவால் கொல்லப்பட்டவர்கள் பாவிகள் என்று கூற விழைகின்றார்கள். அப்பொழுதுதான் இயேசு அவர்களிடம், “சீலோவாமிலே கோபுரம் விழுந்து, பதினெட்டுப் பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும் விடக் குற்றவாளிகள் என நினைகிறீர்களா…? மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்” என்கின்றார்.
பொதுவாக, ஒருவருக்கு விபத்தோ அல்லது தீராத நோயோ ஏற்பட்டுவிட்டால், அவர் மிகப்பெரிய குற்றம் செய்திருக்கவேண்டும், அதனால்தான் அவருக்கு அப்படியெல்லாம் ஏற்பட்டிருக்கின்றது என்று மனிதர்கள் குறைசொல்வது வழக்கம். நற்செய்தியில் இயேசுவின் சீடர்கள்கூட பிறவியிலேயே பார்வையற்ற மனிதரைப் பார்த்துவிட்டு இதையேதான் கூறுவார்கள் (யோவா 9: 2); ஆனால், ஆண்டவர் இயேசு, மற்றவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பிட்டுக் கொண்டிருப்பதற்குப் பதில், நீங்கள் முதலில் மனம்மாறுங்கள், இல்லையென்றால் அழிவு உறுதி என்று கூறுகின்றார்.
ஆகையால், நாம் பிறரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பிட்டுக் கொண்டிருக்காமல், மனம்மாறுவதற்கான வழிகளை நாடுவோம்.
சிந்தனை
‘உங்கள் பாவங்கள் போக்கப்படும் பொருட்டு மனம்மாறி அவரிடம் திரும்பி வாருங்கள்’ (திப 3: 19) என்கிறது திருத்தூதர் பணிகள் நூல். எனவே, நாம் மற்றவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பிட்டுக் கொண்டிருக்காமல், மனம்மாற்றம் அடைந்து, ஆண்டவருக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed