#வாசக_மறையுரை (மே 03)

பாஸ்கா காலம் ஐந்தாம் வாரம்
திங்கட்கிழமை
I திருத்தூதர் பணிகள் 14: 5-18
II யோவான் 14: 21-26
“என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார்”
அனாதையை அன்புசெய்த தெரசா:
கொல்கொத்தா நகர்ப் புனித தெரசா ஒருநாள் கொல்கொத்தாவின் தெருக்களில் நடந்து சென்றுகொண்டிருக்கும்பொழுது ஆதரவற்ற நிலையில் கிடந்த ஒரு முதியவரை அள்ளியெடுத்து, முதியோர் இல்லத்திற்குக் கொண்டுவந்தார். அங்கு அவரைக் குளிப்பாட்டி, புத்தாடை உடுத்தி, விலையுயர்ந்த சிகிச்சையை அவருக்கு அளித்தார். இதையெல்லாம் பார்த்துவிட்டு அந்த முதியவர், “இத்தனை ஆண்டுகளும் குரோதம், வெறுப்பு, பகைமை என்று வாழ்ந்து, பழகிப்போன எனக்கு, நீங்கள் என்மீது காட்டும் அன்பு புதிதாய் இருக்கின்றது” என்றார்.
நாள்கள் மெல்ல நகர்ந்தன. முதியவர் உடல்நலம் குன்றிக்கொண்டே போனார். ஆனாலும் தெரசா அவருக்கு விலையுயர்ந்த சிகிச்சை அளிக்கத் தவறவில்லை. ஒருநாள் சகோதரி ஒருவர் தெரசாவிடம், “இந்த முதியவர்தான் விரைவில் சாகப் போகிறாரே! பிறகு எதற்கு இவருக்கு விலையுயர்ந்த சிகிச்சை அளிக்கின்றீர்கள்?” என்று கேட்டதற்குத் தெரசா அவரிடம், “வாழ்நாள் முழுவதும் உண்மையான அன்பை அனுபவித்திராத இவர் இப்பொழுதாவது அனுபவிக்கட்டுமே!” என்றார்.
ஆம், தெரசா மிகச்சிறிய சகோதரர் சகோதரிகளை அன்பு செய்ததன் மூலம் இயேசுவை அன்பு செய்தார்; அவரது கட்டளைகளைக் கடைப்பிடித்தார். இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியில் இயேசு, “என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
மகன் தன் தந்தையை அன்புசெய்கின்றார் எனில், அவன் தன் தந்தைக்குக் கீழ்ப்படிந்து, அவர் சொல்வதைக் கடைப்பிடித்து வாழவேண்டும். தந்தைக்குக் கீழ்ப்படிந்து நடக்காமல், மகனால் தன் தந்தையை அன்பு செய்ய முடியாது. அதுபோல, இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து அவரது கட்டளைகளைக் கடைப்பிடிக்காமல், அவரை அன்பு செய்ய முடியாது. இதைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியில், “என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார்” என்றார்.
இயேசுவை அன்பு செய்வோருக்கு என்ன கைம்மாறு கிடைக்கும் என்பதை இயேசு சுட்டிக்காட்டத் தவறியதில்லை. தன்மீது அன்பு கொள்பவர்மீது தந்தைக் கடவுள் அன்பு கொள்கின்றார் என்று சொல்லும் இயேசு, அவருக்குத் தன்னை வெளிப்படுத்துவேன் என்கிறார். முதல் வாசகத்தில் திருத்தூதர் புனித பவுல், லிஸ்திராவைச் சார்ந்த கால் ஊனமுற்ற ஒருவரை நலப்படுத்துகின்றார். பவுலிடம் அம்மனிதர்மீது உண்மையான அன்பு கொண்டிருந்திருக்க வேண்டும். அதனால்தான் பவுல் அவரை எழுந்து நடக்கச் செய்கின்றார். நாமும் புனித பவுலைப் போன்று நமக்கு அடுத்திருப்பவரை அன்புசெய்து, இயேசுவின் கட்டளைகளை நிறைவேற்றுவோம்.
சிந்தனைக்கு:
 ஆண்டவரே ஆண்டவரே எனச் சொல்பவரல்ல, தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே விண்ணரசுக்குள் செல்வர் (மத் 7: 21)
 செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம் (1 யோவா 3: 18)
 கடவுளிடமும் பிறரிடமும் நமது அன்பை எப்படி வெளிப்படுத்தப் போகிறோம்?
ஆன்றோர் வாக்கு:
‘பெறுவதை விடக் கொடுப்பதில் நமது அன்பு வெளிப்பட வேண்டும்’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே, நாம் நமது அன்பைச் செயலில் வெளிப்படுத்தி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Source: New feed