
பொதுக்காலத்தின் முதல் வாரம்
புதன்கிழமை
I 1சாமுவேல் 3:1-10, 19-20
II மாற்கு 1:29-39
“அழைக்கும் இறைவன்”
ஆண்டவரின் அழைப்பை எப்படி உணர்ந்தாய்?
பிற சமயத்தைச் சார்ந்த இளைஞன் ஒருவன், தற்செயலாக ஒரு நற்செய்திக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு கிறிஸ்தவனாக மாறியிருந்தான். இதை அறிந்த அவனுடைய நெருங்கிய நண்பர்கள் அவனிடம், “திடீரெனக் கிறிஸ்தவனாக மாறிவிட்டாயே! இயேசு உனக்குக் காட்சி தந்தாரா?” என்று கேட்டார்கள். அவன், “இல்லை” என்றதும், “அவரது குரல் கேட்டாயா?” என்றார்கள். அதற்கும் அவன், “இல்லை” என்றதும், “பின்னர் எப்படித்தான் அவர் உன்னை அழைத்தார்?” என்று அவர்கள் அவனைக் கேள்வி கேட்டார்கள்.
அவன் மிகவும் நிதானமாக, “குளத்தில் மீன் பிடிக்கின்றபோது மீனை நம்மால் பார்க்க முடியாது; அதன் குரலைக் கேட்கவும் முடியாது. ஆனாலும் தூண்டிலில் மீன் மாட்டிக்கொண்டுவிட்டது என்று நமக்குத் தெரியுமல்லவா! அதுபோன்றுதான் இயேசு என்னை அழைப்பதை என் உள்ளத்தில் உணர்ந்தேன். அதனால்தான் நான் கிறிஸ்தவனாகிவிட்டேன்” என்றான்.
ஆம், ஆண்டவர் நம்மை எப்படியும் அழைக்கலாம். அந்த அடிப்படையில் இந்த நிகழ்வில் வரும் இளைஞனை இயேசு அழைத்தது நமது கவனத்திற்குரியது. இன்றைய முதல் வாசகத்தில் சாமுவேலின் அழைப்பைப் பற்றி வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
ஆண்டவராகிய கடவுள் தனது வேண்டுதலைக் கேட்டு, தனக்கு ஓர் ஆண் குழந்தையைத் தந்ததைத் தொடர்ந்து, அன்னா அந்த ஆண் குழந்தையை – சாமுவேலை – ஆண்டவருக்கு அர்ப்பணிக்கின்றார். இதனால் சாமுவேல், குரு ஏலியோடு ஆண்டவரின் இல்லத்தில் இருக்கின்றார். அப்பொழுதுதான் ஆண்டவர் சாமுவேலை அழைக்கின்றார். ஆண்டவர்தான் சிறுவன் சாமுவேலை அழைக்கின்றார் என்பது ஏலிக்கு முதலில் தெரியாமல் போனதற்குக் காரணம், அவர் ஆண்டவரை விட்டுத் ‘தொலைவில்’ இருந்ததால்தான். பின்னர்தான் அவர், சிறுவன் சாமுவேலை ஆண்டவர் அழைக்கிறார் என்பது உணர்ந்து, “ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்” என்று சொல்லச் சொல்கின்றார்.
நற்செய்தியில் இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து, தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று, அங்கு இறைவனிடம் வேண்டுகின்றார். இயேசு இவ்வாறு இறைவனிடம் வேண்டியதாலேயே அவரால் பற்பல பணிகளைச் செய்ய முடிந்தது; ஆண்டவரோடு ஒன்றித்திருக்கவும் முடிந்தது. ஆகவே, நாம் இயேசுவைப் போன்று, சாமுவேலைப் போன்று ஆண்டவரோடு ஒன்றித்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர் நம்மை அழைப்பார். அவரது பணியைச் செய்ய, அவர் நமக்கு ஆற்றலைத் தருவார்.
சிந்தனைக்கு:
இறைவேண்டல் மூலம் இறைவனுக்கும் நமக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கின்றோம்.
இறைவேண்டல்தான் எல்லாப் பணிகளையும் செய்வதற்கான ஆற்றலை நமக்குத் தருகின்றது.
ஆண்டவர் நம்மை அழைக்கின்றார். அவரது குரல் கேட்கத்தான் பல நேரங்களில் நாம் தயாராக இல்லை.
இறைவாக்கு:
‘என்னை விட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய முடியாது’ (யோவா 15:5) என்பார் இயேசு. எனவே, நாம் இறைவனோடு ஒன்றித்திருந்து, அவரது பணியைச் செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed