லியோன்சின் புனித வளனார் சபை அருட்சகோதரிகள் தமது பணியினை ஆற்றுவதற்காக வவுனியா மறைக்கோட்டம் வேப்பங்குளம் பங்கில்

மன்னார் மறைமாவட்டத்தின் வவுனியா மறைக் கோட்டதில் முதல் முறையாக லியோன்சின் புனித வளனார் சபை அருட்சகோதரிகள் தமது பணியினை ஆற்றுவதற்காக வவுனியா மறைக்கோட்டம் வேப்பங்குளம் பங்கின் உக்குளாங்குளத்தில் தமது பணித்தள இல்லத்தில் குடியேறினர்.
வவுனியா மறைக்கோட்டத்தில் இறை பணியினை மேற்கொள்ள அடியெடுத்து வைத்துள்ள பதினாறாவது அருட்சகோதரிகள் துறவற சபையாகவும் வேப்பங்குளம் பங்கில் பணிபுரியவுள்ள மூன்றாவது துறவற சபையாகவும் லியோன்சின் புனித வளனார் சபை அருட்சகோதரிகள் இருக்கின்றார்கள்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேன்மைமிகு பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்கள் தலைமையில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி. P. கிறிஸ்துநாயகம் அடிகளார், மன்னார் மறைமாவட்ட ஆயரின் சிறப்புப் பணி முதல்வர் அருட்பணி கொடுதோர் அடிகளார், வவுனியா மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி அலெக்சாண்டர் ஆரோக்கியம் அடிகளார், மன்னார் கரிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்பணி அன்ரன் அடிகளார், மன்னார் மறைமாவட்ட ஆயரின் செயலாளர் அருட்பணி ஜோர்ஜ்கரன் அடிகளார் மற்றும் வேப்பங்குளம் பங்கு உதவி பங்குத்தந்தை அருட்பணி ஜெஸ்மன்ராஜ் அடிகளார், இறம்பைக்குளம் உதவி பங்குத்தந்தை அருட்பணி கிளின்டன் அடிகளார் ஆகியோரோடு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புதிய பணித்தள சிற்றாலயத்தில் நற்கருணை ஆண்டவர் பேழை நிறுவப்பட்டது. தொடர்ந்து வவுனியா மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி அலெக்சாண்டர் ஆரோக்கியம் அடிகளார் அவர்கள் தலைமையேற்று அனைவரையும் வரவேற்றதுடன் வரவேற்பு நடனமும் இடம்பெற்றது. அதன் பிற்பாடு புதிதாக வவுனியா மறைக்கோட்டத்திற்கு வருகை தந்திருக்கும் லியோன்சின் புனித வளனார் சபை அருட்சகோதரிகளின் மாகாண தலைவி அருட்சகோதரி செசிலி சவேரியார் அவர்கள் சபை பற்றிய விளக்கத்தையும் வழங்கி வைத்தார்.
தொடர்ந்து ஆயர் தந்தை அவர்கள் அருட்சகோதரிகளை வாழ்த்தி உரையாற்றினார். அத்தோடு இம்மாதம் 6ம் திகதி தனது 50வது குருத்துவ வாழ்வின் பொன் விழாவை கொண்டாடும் எம் மன்னார் மறைமாவட்ட ஆயர் தந்தை பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களின் குருத்துவ பொன்விழாவின் மகிழ்வு வவுனியா மறைக்கோட்டம் மற்றும் வேப்பங்குளம் பங்கு ரீதியாக கேக் வெட்டி சிறப்பிக்கப்பட்டது.

Source: New feed