பிறருக்குச் சேவைச் செய்வதன் வழி நாம் உயரவேண்டும்

இயேசு மகிமையில் வரும்போது அவருக்கு இருபுறமும் அமரும் வாய்ப்பு தங்களுக்கு வேண்டும் என, திருத்தூதர்கள் யாக்கோபும், யோவானும், கேட்கும் பகுதியினை விவரிக்கும் இஞ்ஞாயிறு வாசகத்தை மையமாக வைத்து, ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியில் கோவிட் பெருந்தொற்று கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் பெருமெண்ணிக்கையில் மக்கள் குழுமியிருக்க, கடவுளின் மகிமை என்பது, சேவையாக மாறும் அன்பு என்பதை மையமாக வைத்து, தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.

“உண்மையான மகிமை” என்பது, மற்றவர்களை விட மேல்நிலைக்கு உயர்ந்து செல்ல முயல்வதல்ல, மாறாக, இயேசு, எருசலேமில் பெறவிருக்கும் திருமுழுக்கில் நாம் மூழ்குவதாகும், ஏனெனில், அவரைப்போல் நாமும் பிறருக்காக நம்மைக் கையளிக்க முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கடவுளின் மகிமை என்பது, ஆதிக்கம் செலுத்த முயலும்  சக்தி அல்ல, மாறாக, சேவையாக மாறும் அன்பு என எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதர்கள் மேல்நிலைக்கு உயர விரும்பிய அதேவேளை, இயேசுவோ, கீழ்நோக்கி மூழ்குதலைப் பற்றிக் கூறுகிறார் என்றார்.

மேல்நிலைக்கு உயர நினைப்பது என்பது, ஒரு கவர்ச்சியான உலக மனநிலையை பிரதிபலிக்கிறது, அங்கு, எல்லாவற்றையும் பெற்று அனுபவிக்க எண்ணி, வெற்றி எனும் ஏணியில் ஏற விரும்பும்போது, நம் நல்நோக்கங்கள் மறைந்துவிடும் ஆபத்து உள்ளது என்பதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, நாம் மற்றவர்களுக்கு சேவைச் செய்ய விரும்புகிறோமா அல்லது, அங்கீகாரம், மற்றும் பாராட்டுக்களைத் தேடுக்கிறோமா என்ற நம் உள்நோக்கங்கள் குறித்து நமக்குள்ளேயே கேள்வி எழுப்பவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கவர்ச்சிகரமான இவ்வுலகப் போக்குகளுக்குப்பின் செல்வதைத் தவிர்த்து, பிறருக்குச் சேவை செய்வதில் நாம் உயரவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் காயமுற்ற வரலாற்றில் தன்னையே மூழ்கடித்த, சிலுவையிலறையுண்ட இயேசு, அவர் செய்ததுபோல், நம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொருவர் மீதான இரக்கத்தில் நம்மையே மூழ்கடிக்கவேண்டும் என நம்மிடம் கேட்கிறார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வானிலிருந்து இறங்கிவரும் மழை, வாழ்வைக் கொணர்வதுபோல், மேலிருந்து இறங்கிவந்த இறைவன் பணிவுடன் நம் கால்கலைக் கழுவினார், ஏனெனில், கடவுளே அன்பு, அந்த அன்பு பணிவுடையது, அது தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள முயலாது என மேலும் கூறினார்.

உலக நிலையில் மேலும் மேலும் உயரவேண்டும் என்ற மனநிலையிலிருந்து, மூழ்கப்படும் மனநிலைக்கு நாம் எவ்வாறு செல்வது, அல்லது, ‘நம் கௌரவம்’ என்ற அணுகுமுறையிலிருந்து, சேவை என்ற மனநிலைக்கு எவ்வாறு கடந்து செல்வது என்ற கேள்விகளை முன்வைத்து, இயேசுவில் நாம் மூழ்கடிக்கப்பட்ட திருமுழுக்கிலிருந்து பெறும் பலம் வழியாக அது இயலும் என எடுத்துரைத்தார்.

நம் சுயநலன்களை நோக்காமல், இயேசுவைப் பின்பற்றவும், மற்றவர்களுக்கு சேவை புரியவும் நமக்கு உதவும் திருமுழுக்கின் அருளை புதுப்பிக்கும்படி, தூய ஆவியாரை இறைஞ்சுவோம் என்ற விண்ணப்பத்துடனும், அன்னை மரியாவின் தாழ்மையான, மற்றும் அன்புநிறைந்த எடுத்துக்காட்டைப் பின்பற்றுவோம் என்ற அழைப்புடனும் தன் மூவேளை செபஉரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.