பிப்ரவரி 4 : நற்செய்தி வாசகம்

கோதுமை மணி மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 24-26
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————————
தூய அருளானந்தர் (பிப்ரவரி 04)
நிகழ்வு
1693 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் அருளானந்தர் கொலை களமாகிய ஒரியூரை நோக்கி குதிரைவண்டியில் கட்டி இழுத்துச் செல்லப்பட்டார். அவருடைய உடலெங்கும் காயங்கள் ஏற்பட்டு, இரத்தம் வழிந்தோடிக்கொண்டிருந்தது. அப்போது அவர் புல்லூர் என்ற இடத்திற்கு அருகே சென்றபோது, அருளானந்தரின் நிலைகண்டு அவர்மீது பரிதாபப்பட்ட ஓர் இந்துப் பெண்மணி தன்னுடைய வீட்டிலிருந்து கொஞ்சம் மோர் கொண்டு வந்து, அவருக்குக் குடிக்கக் கொடுத்தார். அதை அன்போடு பருகிய அருளானந்தர் அந்தப் பெண்மணியிடம், “இந்த ஊரின் பெயர் என்ன?” என்று கேட்டார். அதற்கு அவர், “புல்லூர்” என்றார். அருளானந்தர் அவரிடம், “இனிமேல் இந்த புல்லூர் என அழைக்கப்படாது, மாறாக நெல்லூர் என அழைக்கப்படும்” என்று ஆசிர்வதித்து சென்றார்.
அவர் ஆசிர்வதித்தனால், இன்றைக்கு அந்த ஊர் நெல் விளையும் ஊராக விளங்கிக் கொண்டிருக்கிறது. அவ்வூரைச் சுற்றியுள்ள ஊர்கள் அனைத்தும் வறண்டு கிடக்கும்போது இந்த ஊர்மட்டும் வளம்கொழிக்கும் ஊராக இருப்பதைப் பார்க்கும்போது அது அருளானந்தரின் ஆசிர்வாதமன்றி வேறு என்னவாக இருக்க முடியும்? என்று எண்ணத் தோன்றுகிறது.
வாழ்க்கை வரலாறு
அருளானந்தர் என அன்போடு அழைக்கப்படும் ஜான் தே பிரிட்டோ 1647 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் நாள் போர்ச்சுகல் நாட்டில் பிறந்தார். இவருடைய குடும்பம் போர்ச்சுகல் நாட்டு மன்னர் இரண்டாம் பெட்ரோ என்பவருக்கு மிக நெருக்கமான குடும்பம். இம்மன்னரும் ஜான் தே பிரிட்டோவும் மிக நெருக்கமான நண்பர்கள். ஜான் தே பிரிட்டோ சிறுவயதில் அடிக்கடி நோய்வாய்ப்பட்டுக்கொண்டே இருந்தார். இதனால் இவருடைய அன்னை இவரை தூய சவேரியாரிடம் ஒப்புக்கொடுத்து ஜெபித்தார். “சவேரியாரே! என்னுடைய மகன் உயிர் பிழைத்தால், உம்மைப் போன்று என்னுடைய மகனையும் அருட்பணிக்காக அனுப்பி வைப்பேன்” என்றார். அவர் ஜெபித்தது போன்று ஜான் தே பிரிட்டோ உயிர்பிழைத்தார். அதனால் அவருடைய அன்னை அவருடைய இறைப்பணிக்காக அர்பணித்தார்.
கி.பி. 1663 ஆம் ஆண்டு, ஜான் தே பிரிட்டோ சேசு சபையில் சேர்ந்து 1673 ஆம் ஆண்டு குருவாக அருட்பொழிவு செய்யப்பட்டார். படிக்கின்றபோதே அறிவோடும் ஞானத்தோடும் இருந்ததால் குருமடத்தில் இவரை பேராசிரியராக பொறுப்பில் அமர்த்த நினைத்தார்கள். ஆனால், இவரோ, “நான் தூய சவேரியாரைப் போன்று இந்தியாவிற்குச் சென்று மறைபோதகப் பணியாற்றவேண்டும்” என்ற தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினார். இது அவருடைய தாய்க்குப் பிடிக்கவே இல்லை. அவர், தன்னுடைய மகன் அருகே இருந்து இறைப்பணி ஆற்றினால் நன்றாக இருக்குமே என்று நினைத்தார். ஆனால் தன் மகன் இப்படி தொலைதூர நாட்டிற்குச் சென்று இறைப்பணி ஆற்றப்போவதாகச் சொல்கிறானே என்று சொல்லி, மேலிடத்திற்கு எல்லாம் சென்று, அவனைத் தடுக்கப் பார்த்தார். அதற்கு ஜான் தே பிரிட்டோ, “இந்தியாவிற்குச் சென்று திருமறையைப் போதிப்பதுதான் தன்னுடைய இலட்சியம்” என மிக உறுதியாக இருந்தார். அதனால் அவருடைய தாயார் மறுப்பேதும் சொல்லாமல் அனுப்பி வைத்தார்.
1678 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள கோவாவில் வந்திறங்கிய ஜான் தே பிரிட்டோ இங்கே இருந்த சூழ்நிலைகளைப் பார்த்துவிட்டு, ஓர் இந்து சந்நியாசியை போன்று உடை தரித்து, தமிழ்மொழியைக் கற்றுக்கொண்டார். அதன்பின்னர் ஜான் தே பிரிட்டோ என்ற தன்னுடைய பெயரை அருளானந்தர் என மாற்றிக்கொண்டு ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவித்தார். அப்போது மதுரையை தலைமைப்பீடமாகக் கொண்டு மதுரை மிஷன் செயல்பட்டுக்கொண்டிருந்தது. சில காலத்திலேயே அதன் தலைமைப் பெறுப்பை ஏற்றுக்கொண்டு ஜான் தே பிரிட்டோ என்ற அருளானந்தர் தொடக்கத்தில் தட்டுவாச்சேரி என்ற பகுதியில் மறைபோதகப் பணியைச் செய்தார். இப்போது அவ்வூர் தஞ்சாவூருக்கு அருகே உள்ளது.
அருளானந்தர், ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதைக் கேட்ட மக்களில் நிறையப்பேர் மனமாற்றினார்கள், கிறிஸ்தவ மதத்தைத் தழுவிக்கொண்டார். அப்போது அங்கே இருந்த குறுநில மன்னர் அருளானந்தரையும் அவரைச் சேர்ந்த மக்கள் சிலரையும் சிறையில் அடைத்து சித்ரவதை செய்தான். இதற்கிடையில் அந்த குறுநில மன்னனின் அரண்மனையில் இருந்த குதிரைகள், யானைகள் அனைத்தும் நோய்வாய்ப்பட்டு கீழே விழுந்தன. இதனால் பயந்துபோன அந்த குறுநில மன்னன், அருளானந்தர் சாதாரண மனிதர் கிடையாது, அவர் இறைமனிதர். அதனால்தான் அவரைத் துன்புறுத்த, அரண்மனையில் இருக்கு உயிரினங்கள் நோயில் விழுகின்றன என்பதை உணர்ந்து, அவரையும் அவரோடு இருந்தவரை விடுதலை செய்து அனுப்பி வைத்தான். அத்தோடு அப்பகுதியில் நற்செய்தியை அறிவிக்கவேண்டாம் என்று சொல்லி எச்சரித்து அனுப்பி வைத்தான்.
அதன்பிறகு அருளானந்தர் தஞ்சாவூர் பகுதியிலிருந்து இராமநாதபுரம் பகுதிக்குச் சென்று நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார். அப்பகுதியில் இருந்த சாதாரண மக்கள் அருளானந்தர் போதித்த நற்செய்தியைக் கேட்டு மனம்மாறினார்கள், கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார்கள். இந்த நேரத்தில்தான் அருளானந்தருக்கு அவருடைய சொந்த மண்ணிலிருந்த, அவருடைய நெருங்கிய நண்பரான இரண்டாம் பெட்ரோ என்பவரிடமிருந்து அழைப்பு வந்தது. அதனால் 1687 ஆம் ஆண்டு அவர் போர்ச்சுகல் நாட்டிற்குச் சென்றார். அங்கே மன்னன் இரண்டாம் பெட்ரோ அருளானந்தரை தன்னுடைய அரசபையில் ஆலோசகராக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் அருளானந்தரோ, இந்தியாவில் மறைபோதகப் பணியைச் செய்து, அங்கே தன்னுடைய உயிரைத் துறப்பதற்கு தனது கனவு, இலட்சியம்” என்று சொல்லி மறுத்துவிட்டார். சில நாட்கள் போர்ச்சுகலில் இருந்த அருளானந்தர் மீண்டுமாக 1690 ஆண்டு இந்தியாவிற்குத் திரும்பினார்.
இந்தியாவிற்கு வந்த அருளானந்தர் மீண்டுமாக இராமநாதபுரம் பகுதியில் தன்னுடைய மறைபோதகப் பணியை இன்னும் சிறப்பாக செய்யத் தொடங்கினார். அப்போது தடியத் தேவா என்னும் குறுநில மன்னன் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தான். அவனுக்கு எத்தனையோ வைத்தியர்கள் வந்து சிகிச்சை அளித்தும் அவனுடைய நோய் நீங்கவில்லை. இந்த நேரத்தில் அவன் அருளானந்தரைக் குறித்தும் அவரால் நடக்கும் புதுமைகளைக் குறித்தும் கேள்விப்பட்டான். எனவே, அவன் அருளானந்தரை தன்னுடைய அரண்மனைக்கு வரவழைத்து ஜெபிக்கக் சொன்னான். அருளானந்தர் அவனுக்காக இறைவனிடம் ஜெபிக்கத் தொடங்கினார். அற்புதமாக அவனிடமிருந்த நோய் அவனைவிட்டு விலகியது. இதனால் அவன் அருளானந்தரிடமிருந்து திருமுழுக்குப் பெற்றான், அவன் திருமுழுக்குப் பெற்றபிறகு கிறிஸ்துவின் போதனைகளைக் குறித்து இன்னும் அறியத் தொடங்கினான். அவன் ஐந்து மனைவிகளோடு வாழ்ந்துகொண்டிருந்தான். இயேசுவின் போதனைகளைக் கேட்டபிறகு, அவன் தன்னுடைய முதல் மனைவியை மட்டும் தன்னோடு வைத்துக்கொண்டு, மற்ற நான்கு பேரையும் அவர்களுடைய வீட்டிற்கு அனுப்பி வைத்தான். தடியத் தேவாவால் வீட்டிற்கு அனுப்பப்பட்ட நான்கு மனைவியருள் ஒருவர் மன்னர் சேதுபதியின் சகோதரி. இச்செய்திக் கேட்டு மன்னன் சேதுபதி சீற்றம் கொண்டான். அவன் கூலியாட்களை வைத்து இப்பிரச்சனைக்குக் காரணமாகிய அருளானந்தரை கொலைசெய்யத் திட்டம் தீட்டினான்.
1693 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மன்னன் சேதுபதி அருளானந்தரைக் கைது செய்து பலவாறாக சித்ரவதை செய்தான். பாழுங்கிணற்றில் தலைகீழாக இறக்கினான், பாறையில் உருட்டிவிட்டான். இப்படியாக அருளானந்தரை பல்வேறு விதங்களில் சித்ரவதை செய்தான். பிப்ரவரி மாதம் நான்காம் தேதி அருளானந்தரை ஒரியூருக்கு இழுத்துச் சென்றவன், அங்கே ஒரு கழுமரத்தில் ஏற்றி, தலையையும் கைகளையும் கால்களையும் துண்டித்தான். இதனால் அருளானந்தர் ஓரியூர் மண்ணிலே ஆண்டவர் இயேசுவுக்காக மறைசாட்சியாக உயிர் துறந்தார். அருளானந்தர் இறந்தபிறகு ஏழு நாட்கள் தொடர்ந்து அவ்வூரில் மழை பெய்தது. இத்தனைக்கும் அது கோடைகாலம்.
அருளானந்தர் மறைசாட்சியாக உயிர்நீத்த செய்தியைக் கேள்விப்பட்ட போர்ச்சுகலில் இருந்த அவருடைய அன்னை மிகவும் வருந்தி, துக்கம் கொண்டாவோருக்கான ஆடையை உடுத்தினார். ஆனால் அருளானந்தரின் நெருங்கிய நண்பரான இரண்டாம் பெட்ரோ, “இது துக்கப்பட வேண்டிய காரியம் கிடையாது, மகிழ்ந்திருக்கவேண்டிய காரியம்” என்று சொல்லி அந்த அன்னைக்கு அரசிக்கு உரிய ஆடை அணிவித்து, அவரை சிறப்பு செய்தான்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

Source: New feed