நினைவுகூர்தல் என்பது, மனிதாபிமானத்தின் வெளிப்பாடு

மறைக்கல்வி உரையின் இறுதியில், இரண்டாம் உலகப் போரின் போது, Auschwitz வதைமுகாமில் துன்புற்றோர் விடுதலை செய்யப்பட்டது மற்றும், யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட நாளையும் நினைவுகூர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். சனவரி 27, இப்புதனன்று கடைப்பிடிக்கப்பட்ட இந்த நாள் பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, நாத்சி சர்வாதிகார அரசின் யூதஇன ஒழிப்புக் கொள்கைக்குப் பலியானவர்கள், அந்த அரசால் சித்ரவதைக்கு உள்ளானவர்கள் மற்றும், நாடுகடத்தப்பட்டவர்கள் ஆகிய அனைவரையும் இன்று நினைவுகூர்கிறோம். நினைவுகூர்தல் என்பது, மனிதாபிமானத்தின் வெளிப்பாடு. அது, பண்பாட்டின் ஓர் அடையாளம். அது, அமைதி மற்றும், உடன்பிறந்த உணர்வின் ஒரு நிபந்தனை. இத்தகைய செயல்கள், மக்களைக் காப்பாற்ற விரும்பும் கருத்தியல் பரிந்துரைகளில் தொடங்கி, இறுதியில், மக்களையும், மனித சமுதாயத்தையும் அழிப்பதில் கொண்டுபோய் நிறுத்துகின்றது. அதனால் அவை மீண்டும் நடைபெறலாம் என்பதால், நினைவுகூர்தல் என்பது, கவனமாக இருத்தல் ஆகும். மரணம், இன அழிப்பு, கொடூரங்கள் ஆகிய இவையனைத்தின் பாதை, எவ்வாறு துவங்கியது என்பதில் கவனமாக இருங்கள். இவ்வாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், யூத இனப் படுகொலை உலக நாளை நினைவுகூர்ந்தார்.