“நல்மனம் கொண்டோருக்கு அமைதி” கிறிஸ்மஸ் செய்தி

இறைமகன், மனித உடல் எடுத்து, எளிமையான தீவனத் தொட்டியில் பிறந்தபோது, நமக்கு வந்து சேர்ந்த கிறிஸ்மஸ் செய்தி மிக எளிமையான செய்தி, அதாவது, “நல்மனம் கொண்ட அனைத்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் அமைதி” என்பதே அச்செய்தி என்று, ஆசிய கர்தினால் ஒருவர், தன் கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார்.

ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரும், மியான்மாரின் யாங்கூன் பேராயருமான கர்தினால் Charles Bo அவர்கள், கிறிஸ்து பிறப்பு பெருவிழாவையொட்டி வழங்கியுள்ள செய்தியில், மியான்மார் வரலாற்றில் தற்போதைய மிக அவசியமான தேவை, அமைதியும், ஒப்புரவும் என்று கூறியுள்ளார்.

“மியான்மார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற முறையில், கரங்களை விரித்து, செபிக்கும் உதடுகளோடும், நம்பிக்கை தாங்கிய மனங்களோடும் நாம் எழுப்பும் செபம்: அமைதி மற்றும் ஒப்புரவின் கதிரவன், நமது பூமியில் உதயமாகட்டும்” என்று இச்செய்தியின் துவக்கத்தில் கர்தினால் போ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

யூத வரலாற்றில், சவால்கள் அதிகம் நிறைந்த ஒரு காலக்கட்டத்தில் இயேசு குழந்தையாகத் தோன்றி, அதிகாரத்தாலும், ஆக்ரமிப்பாலும் உருவான அச்சமுதாயத்தின் காயங்களை ஆற்றினார் என்று, கர்தினால் போ அவர்கள் இச்செய்தியில் கூறியுள்ளார்.

குடியரசை மிகக் குறைந்த காலமே அனுபவித்துள்ள மியான்மார் நாடு சந்தித்து வரும் பல சவால்களில், உடன் பயணிக்கவும், இங்கு உருவாகும் காயங்களை மீண்டும் ஆழப்படுத்தாமல், அவற்றை குணமாக்கவும், அனைத்துலக சமுதாயம் உதவி செய்யவேண்டும் என்று கர்தினால் போ அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

உலக வழக்கு மன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ள மியான்மார் மீது சுமத்தப்படும் பழிகள், தங்கள் நாட்டை மீண்டும் சர்வாதிகார நிலைக்கு இட்டுச் செல்லும் ஆபத்து உள்ளது என்று தன் செய்தியில் கவலையை வெளியிட்டுள்ள கர்தினால் போ அவர்கள், மியான்மார் நாட்டிற்கு அமைதியைக் கொணரும் முயற்சிகளை அனைத்துலக அரசுகள் மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

“அமைதி மட்டுமே ஒரே வழி, மனமிருந்தால் மியான்மார் நாட்டில் அமைதி உருவாகும், நல்மனம் கொண்ட ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் அமைதி” என்ற சொற்களுடன் கர்தினால் போ அவர்கள் தன் கிறிஸ்மஸ் செய்தியை நிறைவு செய்துள்ளார்.