நற்செய்தி வாசக மறையுரை (செப்டம்பர் 19)

பொதுக்காலம் இருபத்து நான்காம் வாரம்
வியாழக்கிழமை
லூக்கா 7: 36-50

‘பாவங்களை மன்னிக்கும் இயேசு’

நிகழ்வு

ஓர் இரவுவேளையில் நண்பர்கள் இருவர் கடற்கரை மணலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். வானில் விண்மீன்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. அவற்றைப் பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அப்பொழுது ஒரு நண்பன் இன்னொருவனிடம், “நண்பா! வானில் பூத்துக்கிடக்கும் விண்மீன்களை எல்லாம் அகற்ற முடியுமா?” என்று கேட்டான். அதற்கு மற்றவன், “இன்னும் ஒருசில மணிநேரம் பொறுத்திரு. வானிலுள்ள விண்மீன்கள் எல்லாம் அகன்றுவிடும்” என்றான். “அப்படியா?” என்று அவனை ஆச்சரியமாகப் பார்த்தான் முதலாவது நண்பன்.

இதற்குப் பின்பு அவர்கள் இருவரும் பல விசயங்களைக் குறித்துப் பேசத் தொடங்கினார்கள். காலத்தை மறந்து அவர்கள் பேசிக்கொண்டிருந்தால் கிழக்கில் சூரியன் உதிக்கும் நேரம் வந்தது. சூரியன் உதிக்கத் தொடங்கியதும், வானில் பூத்துக்கிடந்த விண்மீன்கள் எல்லாம் மாயமாய் மறைந்தன. இதைப் பார்த்துவிட்டு இரண்டாவது நண்பன் முதலாவது நண்பனைப் பார்த்துச் சொன்னான், “வானில் உள்ள விண்மீன்களை அகற்ற முடியுமா என்று கேட்டாய் அல்லவா! இப்பொழுது வானத்தைப் பார், அங்கிருந்த விண்மீன்கள் எல்லாம் சூரியனால் அகற்றப்பட்டுவிட்டன.”

இப்படிச் சொல்லிவிட்டு, அந்த நண்பர் தொடர்ந்து பேசினார், “எப்படிச் சூரியன் வந்தபோது, வானிலிருந்த விண்மீன்கள் அகன்றுபோனதோ, அதுபோன்று நம்மிடம் வருகின்ற இயேசுவிடம், நம்முடைய குற்றங்களையெல்லாம் அறிக்கையிட்டு மன்னிப்புக் கேட்டால், அவை பனிபோல் மறைந்துவிடும்.”

ஆம், கடவுளிடம் நம்முடைய குற்றங்களையெல்லாம் அறிக்கையிட்டு மன்னிப்புக் கேட்கின்றபோது, அவர் நம்முடைய குற்றங்களையெல்லாம் மன்னித்து, நம்மை ஏற்றுக்கொள்கின்றார் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தியில் இயேசு, தன்னுடைய பாவங்களையெல்லாம் அறிக்கையிட்டு, மன்னிப்புக் கேட்ட ‘பாவிப்பெண்ணை’ மன்னிப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு அந்தப் பெண்ணுக்கு அளித்த மன்னிப்பு எத்தகையது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தன்னை நேர்மையாளராய்க் காட்டிக்கொண்ட பரிசேயர் சீமோன்

நற்செய்தியில் இயேசு, பரிசேயரான சீமோனின் அழைப்பினை ஏற்று அவருடைய வீட்டிற்கு உணவருந்தச் செல்கின்றார். முதலில் இந்தப் பரிசேயர் இயேசுவை விருந்துக்கு அழைத்தாரே… அவரை இவர் (யூத முறைப்படி) வரவேற்று, விருந்து உபசரித்தாரா…? என்று தெரிந்துகொள்வது நல்லது.

யூதர்கள் தங்களுடைய வீட்டிற்கு வருகின்ற விருந்தினர்க்கு கால்களைக் கழுவுவதற்குத் தண்ணீர் தரவேண்டும். ஏனென்றால், அவர்கள் தொலைதூரத்திலிருந்து கால்களில் புழுதியோடு வந்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்கட்கு கால்களைக் கழுவுவதற்குத் தண்ணீர் தருவதுதான் முறை. அதை இந்தப் பரிசேயர் செய்யவில்லை. அடுத்ததாக, அழைக்கப்பட்ட விருந்தினரை வீட்டார் முத்தம் கொடுத்து வரவேற்க வேண்டும். இதையும் இந்தப் பரிசேயர் இயேசுவுக்குச் செய்யவில்லை. மேலும் அழைக்கப்பட்ட விருந்தினரின் தலையில், விருந்துக்கு அழைத்த வீட்டார் எண்ணெய் பூசவேண்டும். அதையும் இவர் இயேசுவுக்குச் செய்யவில்லை. இப்படி எதையும் இயேசுவுக்குச் செய்யாத பரிசேயர் சீமோன், அவற்றைப் ‘பாவிப் பெண்’ இயேசுவுக்குச் செய்ததும், தன்னை நேர்மையாளர் போல் காட்டிக்கொண்டு இயேசுவைக் குறித்து விசனப்படுகின்றார். இவர் தன்னை ‘நல்லவர்’, நேர்மையாளர் என்பவர் போல் காட்டிக்கொள்கின்றார். அதனால் இவர் இயேசுவால் கண்டிக்கப்படுகின்றார்.

தன்னைப் பாவி என்று ஏற்றுக்கொண்ட பெண்

இயேசு, பரிசேயரான சீமோனின் வீட்டிற்கு வந்திருக்கின்றார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட அந்தப் பெண்ணானவள் இயேசுவிடம் வந்து, பரிசேயர் செய்யத் தவறியதை எல்லாம் இயேசுவுக்குச் செய்கின்றார். அதாவது அவள் இயேசுவின் கால்களில் நறுமணத் தைலம் பூசி, கூந்தலால் துடைத்து, முத்தி செய்கின்றார். இவ்வாறு அவள், இயேசுவுக்கு முன்னால் தான் ஒரு பாவி என்று அறிக்கையிடுகின்றார்.

யூத சமூகத்தில் ரபிக்கள் பெண்களோடு பேசுவதில்லை. அதுவும் இந்தப் பெண் ‘பாவிப் பெண்’ என்று தெரிந்தும், இயேசு தன்னுடைய கால்களைக் கழுவி, கூந்ததால் துடைத்து, முத்தி செய்ய அனுமதித்ததைத் தொடர்ந்து, ‘ஓர் இறைவாக்கினர் எப்படியெல்லாம் நடந்துகொள்வது முறையா?’ என்று மனதிற்குள் முணுமுணுத்துத் தொடங்குகின்றார்.

இங்கு நாம் ஒன்றை நம்முடைய சிந்தனைக்கு உட்படுத்திப் பார்க்கவேண்டும். பாவிப்பெண் தன்னுடைய தவற்றை வெளிப்படையாக அறிக்கையிட்டார், அதனால் மன்னிப்புப் பெற்றார். ஆனால், பரிசேயரான சீமோனோ ‘தன்னை நேர்மையாளர்’, ‘நல்லவர்’ என்று காட்டிக் கொள்வதால், தானும் ஒரு பாவி என்பதை அறியாதவராக, பாவத்தை இயேசுவிடம் அறிக்கையிடாதவராக இருக்கின்றார். இதனால் அவர் இயேசுவுக்கு ஏற்றவராக இல்லாது போகின்றார். சில சமயங்களில் நாமும் இந்தப் பரிசேயரைப் போன்று அடுத்தவரிடம் இருக்கின்ற தவறை பெரிதுபடுத்துகின்ற அளவுக்கு நம்மிடம் இருக்கின்ற தவறைப் பெரிது படுத்துவதில்லை, அதை களைவதற்கும் முன்வருவதில்லை. ஆகையால், நாம் ஒவ்வொருவரும் பாவி என்பதை உணர்ந்து, நம்முடைய தவறுகளை ஆண்டவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்புக் கேட்டு, அதன்மூலம் மன அமைதி பெற முன்வரவேண்டும்.

சிந்தனை

‘உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் நான் தீயது செய்தேன்’ (திபா 51: 4) என்று சொல்லும் திருப்பாடல் ஆசிரியரைப் போன்று, நாம் ஒவ்வொருவரும் இயேசுவிடம் நம்முடைய குற்றங்களை அறிக்கையிட்டு மன்னிப்புக் கேட்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Source: New feed