திருத்தந்தையர் வரலாறு – திருத்தந்தை 6ம் இன்னசென்ட்

ஒரு தற்காலிக திருத்தந்தையாக நிறுத்தப்பட்டு, 70 வயதிற்கு மேல் தேர்ந்தெடுக்கப்பட்டு, மற்றவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக பத்தாண்டுகள் பதவி வகித்த திருத்தந்தை 6ம் இன்னசென்ட் குறித்து இன்றைய நம் நிகழ்ச்சியில் நோக்குவோம். 1282ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் Étienne Aubert என்ற இயற்பெயருடன் பிறந்த இவர், 1352ம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி அவிஞ்ஞோனில் கூடிய கர்தினால்களால் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, இத்தாலியின் ஓஸ்தியா நகரின் ஆயராக இருந்தார்.

திருத்தந்தை 6ம் இன்னசென்ட் தன் இளம் வயதில் பிரான்சின் Toulouseல் சட்டப் பேராசிரியராகப் பணியாற்றி சட்டத்துறையில் மிக உயர்ந்த பதவிகளையும் வகித்தார். திருஅவைப்பணியில் காலடி எடுத்துவைத்தபின் படிப்படியாக உயர்ந்தார். இவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1352ம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி பொறுப்பேற்றபோது, இவரின் வயது மற்றும் உடல்நிலை காரணமாக, இவர் சில காலம்தான் பதவியிலிருப்பார் என ஏனைய கர்தினால்கள் எண்ணினர். இவர் பொறுப்பேற்றவுடனேயே திருத்தந்தை 12-ஆம் பெனடிக்டைப் பின்பற்றி பல சீர்திருத்தங்களைப் புகுத்தினார். பாப்பிறை மாளிகையில் பணிபுரிந்த அதிகாரிகளின் எண்ணிக்கையைக் குறைத்தார். மற்றவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக திருஅவை அதிகாரிகள் எளிய வாழ்வை மேற்கொள்ளவேண்டும் என விண்ணப்பித்தார். துறவு சபையினர் தாங்கள் எடுத்த வாக்குறுதிகளைத் தீவிரமாக பின்பற்றவேண்டும் என பணித்தார். அவ்வாறு பின்பற்றாதவர்களுக்கு பெருந்தண்டனைகள் வழங்கப்பட்டன.

ஜெர்மன் மன்னர் 4ம் சார்லஸ் பேரரசராக முடிசூட்டப்பட ஆவல் கொண்டபோது, உரோமுக்கு அருகிலுள்ள ஓஸ்தியா நகர் கர்தினாலால் முடிசூட்டப்பட அனுமதி வழங்கிய திருத்தந்தை 6ம் இன்னசென்ட் அவர்கள், அம்மன்னரிடமிருந்து ஓர் உறுதிமொழியையும் பெற்றுக் கொண்டார். அதாவது, பேரரசராக முடிசூட்டப்பட்ட அந்த நாளே, அவர் உரோம் நகரை விட்டு வெளியேறிவிடவேண்டும் என்பதே அது. 1355-ஆம் ஆண்டு இயேசு உயிர்ப்பு விழா ஞாயிறன்று கர்தினாலால்  பேரரசராக முடிசூட்டப்பட்ட ஜெர்மன் மன்னர் 4ம் சார்லஸ், அன்றே உரோமைவிட்டு வெளியேறி தன் வாக்குறுதியை நிறைவேற்றினார். ஆனால் அடுத்த ஆண்டே ஓர் அரசாணையைப் பிறப்பித்து, பேரரசர்கள் மீதான திருத்தந்தையின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தினார். ஜெர்மன் மன்னர் பேரரசராக முடிசூட்டப்படுவதற்கு திருத்தந்தையின் அங்கீகாரம் தேவை, மற்றும், பேரரசர் இறந்தவுடன் அடுத்த பேரரசர் முடிசூட்டப்படும்வரை அப்பேரரசு திருத்தந்தையின் நிர்வாகத்தின் கீழ்வரும் என்ற சட்டங்களைச் செல்லாததாக்கினார் பேரரசர். அது மட்டுமல்ல, ஜெர்மன் தலத்திருஅவையின் அதிகாரிகள், திருத்தந்தையின்கீழ் இல்லாமல் தனியாகச் செயல்படவும் பேரரசரால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அதற்கு ஜெர்மன் திருஅவை அதிகாரிகள் இசைவு அளிக்காததால் அம்முயற்சி வெற்றியடையவில்லை.

அரசியல் விவகாரங்களிலும் தலையிட்டு அமைதிக்கான முயற்சிகளை மேற்கொண்டார் திருத்தந்தை 6ம் இன்னசென்ட். பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இவரின் முயற்சிகள் 1360ம் ஆண்டின் இடைக்கால அமைதி ஒப்பந்தம் வரை சென்றது. அக்காலத்தில், பிரான்சின் அரசியல் நிலையற்ற தன்மைகளால் கொள்ளையர்களின் அட்டூழியம் ஓங்கியது. ஆகவே, அவிஞ்ஞோன் பாப்பிறை மாளிகையின் பாதுகாப்புச் சுவர்களைப் பலப்படுத்த விரும்பினார் திருத்தந்தை 6ம் இன்னசென்ட். அதற்கு முன்னரே இக்கொள்ளையர்கள் அரண்மனையைத் தாக்கிச் சூறையாடியதால், தன் விடுதலைக்கே இவர் பிணையத் தொகை கொடுக்க வேண்டியதாகியது.

கிரேக்க கிறிஸ்தவ சபையை இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திருஅவையோடு இணைக்கும் இவரின் முயற்சிகளும் தோல்வி கண்டன. ஏனெனில், இவரால் துருக்கியர்களை எதிர்த்துப் போராடுவதற்கான படையைத் திரட்ட முடியவில்லை என்பதை உணர்ந்த கிரேக்க நாட்டவர்கள், திருத்தந்தையின் மீதான ஆர்வத்தை குறைத்துக் கொண்டனர். இத்திருத்தந்தை 1362ம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் நாள் காலமானார். அவிஞ்ஞோனில் இவர் எழுப்பிய மூவொரு இறைவன் கோவிலிலேயே இவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அவிஞ்ஞோனில் இருந்து ஆண்ட ஐந்தாவது திருத்தந்தையான இவர், அவர்களுள் மிகச் சிறந்தவராக நோக்கப்படுகிறார். கலைக்கும் மிகுந்த ஆதரவளித்த இவர், ஒழுக்க ரீதி வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். இவருக்குப்பின் வந்தவர் திருத்தந்தை 5ம் உர்பான். இவரின் பணி குறித்து வரும் வாரம் காண்போம்.