
கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 12-19
அந்நாள்களில் இயேசு வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். விடிந்ததும் அவர் தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார். அவர்கள் முறையே பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், அவருடைய சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதி எனப்பட்ட சீமோன், யாக்கோபின் மகன் யூதா, துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து என்பவர்களே.
இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். அவர் சொல்வதைக் கேட்கவும் தங்கள் பிணிகள் நீங்கி நலமடையவும் அவர்கள் வந்திருந்தார்கள். தீய ஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்கள் குணமானார்கள். அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால், அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
மறையுரைச் சிந்தனை.
‘வேண்டுவதற்காக மலைக்குச் சென்ற இயேசு’
ஒருசமயம் குருவானவர் ஒருவர் தன்னைப் பார்க்க வந்த பெரியவரிடம் கேட்டார், “நீங்கள் எப்போதெல்லாம் இறைவனிடம் மன்றாடுவீர்கள்?” பெரியவர் ஒரு கணம் அமைதியாக இருந்துவிட்டு மிகவும் தீர்க்கமான குரலில் சொன்னார், “என்னுடைய வாழ்க்கையில் எப்போதெல்லாம் துன்பங்களும் கஷ்டங்களும் வருகின்றனோ, அப்போதெல்லாம் நான் இறைவனிடம் மன்றாடுவேன்.”
இப்படிச் சொல்லிவிட்டு பெரியவர் தொடர்ந்து பேசினார், “என்னுடைய வாழ்க்கையில் துன்பங்களும் கஷ்டங்களும் இல்லாத நாள் இல்லை அதனால் நான் இறைவனிடம் ஒவ்வொருநாளும் மன்றாடுவேன்.” இதைக் கேட்டுவிட்டு குருவானவர் மிகவும் வியந்துபோய், “இதைத் தொடர்ந்து பின்பற்றி வாருங்கள்” என்று அவரை மனதார வாழ்த்தினார்.
மனிதருடைய வாழ்வில் துன்பங்களும் கஷ்டங்களும் இல்லாத நாளில்லை. அதனால் ஒவ்வொருநாளும் இறைவனிடம் மன்றாடவேண்டும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தி வாசகத்தில் இயேசு வேண்டுவதற்காக மலைக்குச் சென்றார் என்று வாசிக்கின்றோம். அவர் எதற்காக வேண்டச் சென்றார்? இயேசுவின் பணிவாழ்வில் இறைவேண்டல் எத்தகைய பங்காற்றியது? இவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின் வாழ்வில் இறைவேண்டல்.
இயேசு தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்கி, மக்கட்கு ஆண்டவருடைய நற்செய்தியை எடுத்துரைத்தும் அவர்களிடமிருந்த பிணியாளர்களை நலப்படுத்தியும் அவர்களில் ஒருவராக வலம்வந்தார். இப்படிப்பட்ட சமயத்தில் அவர்க்கு பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்தன. எனவே, இத்தகைய எதிர்ப்புகளை எல்லாம் துணிவோடு எதிர்கொள்ளவும், தன்னுடைய பணியைத் தொடர்ந்து செய்வதற்கு வேண்டிய திருத்தூதர்களை தேர்ந்தெடுப்பதற்கான வல்லமை வேண்டியும் இயேசு மலைக்குச் சென்று இறைவனிடம் வேண்டுகின்றார். இயேசு இறைவேண்டலுடைய ஆற்றலையும் வல்லமையையும் மிக நன்றாகவே உணர்ந்திருந்தார். அதனால்தான் அவர் இறைவனிடம் அதிகாலையிலும் இரவிலும், ஏன் தனக்கு நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் வேண்டி வந்தார்.
இறைவேண்டலுக்குப்பின் திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்த இயேசு.
பணிவாழ்வில் வந்த எதிர்ப்புகளையும் சவால்களையும் எதிர்கொள்வதற்கான ஆற்றல் வேண்டி இயேசு இறைவனிடம் வேண்டியது ஒரு பக்கம் இருந்தாலும், அவர் ஒவ்வொரு பணியையும் தொடங்குவதற்கு முன்னமும் இறைவனிடம் வேண்டிவந்தார். இன்றைய நற்செய்தியில் இயேசு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கும் முன்னம் இறைவனிடம் இரவு முழுவதும் வேண்டுகின்றார்.
திருத்தூதர்களைத் தேர்ந்தெடுப்பது எத்துணை முக்கியமானதொரு பணி என்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. அதனால்தான் அவர் இறைவனிடம் இரவுமுழுவதும் வேண்டுகின்றார். இன்னும் ஒருசில முக்கியமான தருணங்களில் அவர் இறைவனிடம் வேண்டுவதாக நற்செய்தியில் நாம் வாசிக்கின்றோம். தன் நண்பர் இலாசரை உயிர்ப்பிக்கின்றபோதும் தன்னுடைய சிலுவைச் சாவை எதிர்கொள்வதற்கு முன்னம் கெத்சமணித் தோட்டத்திலும் அவர் இறைவனிடம் மன்றாடியதாக நற்செய்தி நூல்களில் நாம் வாசிக்கின்றோம். அப்படியானால் இயேசு இறைவேண்டலின் வல்லமையை எந்தளவுக்கு உணர்ந்திருப்பார் என்பதை நாம் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம்
கலவையான திருத்தூதர்கள் குலாம்.
இயேசு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கின்றபோது, இஸ்ரயேலில் உள்ள பன்னிரு குலங்களை அடையாளப்படுத்துகின்ற விதமாகப் பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கின்றார். இந்தப் பன்னிருவரும் ஒரே மாதிரி இல்லாமலும் ஒரே வகையான தொழிலைச் செய்கிறவர்களாகவும் இல்லாமல், ஒரு கலவையாக இருப்பதுதான் இதிலுள்ள சிறம்பம்சமாக இருக்கின்றது.
இயேசுவின் திருத்தூதர்கள் குலாமில் ஏழு பேர் மீனவர்கள் (யோவா 21: -3), ஒருவர் வரிதண்டுபவர், இன்னொருவர் இனத்துக்காகப் போராடியர், மற்ற மூன்று பேர் என்ன வேலை செய்து வந்தார்கள் என்பது பற்றிய சரியான குறிப்பு இல்லை. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கின்றபோது, திருஅவை எல்லா மக்கட்குமானது; எல்லாரும் இதில் உறுப்பினராகலாம் என்ற செய்தியை மிக அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்கின்றது. இயேசுவின் திருத்தூதர்கள் குலாமில் முதலில் யூதர்கள்தான் இருந்தார்கள் (திப 13: 44) திருஅவை படிப்படியாக வளர்ந்துவந்தபோது எல்லா மக்களையும் உள்ளடக்கியதாக மாறியது. அதனால்தான் புனித பவுல் கலாத்தியர்க்கு எழுதிய மடலில், “இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும் ஆண் என்றும் பெண் என்றும் அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் வேறுபாடு இல்லை. கிறிஸ்து இயேசுவில் நீங்கள் ஒன்றாய் இருக்கிறீர்கள் என்கின்றார் (கலா 3: 28).
ஆதலால், இயேசுவின் சீடர்கள் குலாமில் எல்லார்க்கும் இடமுண்டு; எல்லார்க்கும் சிறப்பான அழைப்பு உண்டு என்பதை உணர்ந்து, அவருடைய பணியைச் செய்ய ஒநாம் ஒவ்வொருவரும் முன்வருவது காலத்தின் கட்டாயமாகும்.
சிந்தனை
‘இறைவனிடம் முழந்தாளிட்டு மன்றாடுகின்ற எவரும், வாழ்க்கையில் இடறி விழுவதில்லை’ என்கிறது ஒரு பழமொழி. ஆகையால், நாம் இயேசுவைப் போன்று இறைவனிடம் மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed