இயேசுவின் தூய்மைமிகு இதயத்திடம் உலகை அர்ப்பணிப்போம்

இயேசுவின் தூய்மைமிகு இதயம் போன்றதோர் எல்லையில்லா இரக்கம், இன்றைய நம் உலகிற்குத் தேவைப்படுகிறது என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 24, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட இயேசுவின் தூய்மைமிகு இதயம் பெருவிழாவை மையப்படுத்தி தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தியில் கூறியுள்ளார்.

தூய்மைமிகு இதயம் என்ற ஹாஷ்டாக்குடன் (#SacredHeart) திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மனித வாழ்வில் நாம் பார்க்கின்ற அளவில்லாத் தீமைகள், மற்றும், துன்பங்களை அகற்றுவதற்கு, இயேசுவின் தூய்மைமிகு இதயத்திடம் இருக்கின்ற வரம்பில்லா இரக்கம் போன்றதோர் இரக்கம் தேவைப்படுகிறது, எனவே நம்மையும், உலகத்தையும் அவ்விதயத்திடம் அர்ப்பணிப்போம் என்ற சொற்கள் பதிவாகியிருந்தன.

இயேசுவின் தூய்மைமிகு இதயம் பெருவிழா

1856ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டு ஆயர்கள் திருத்தந்தை 9ம் பயஸ் அவர்களைக் கேட்டுக்கொண்டதன்பேரில், அத்திருத்தந்தை, இயேசுவின் தூய்மைமிகு இதயம் பெருவிழாவை உருவாக்கினார். அத்திருத்தந்தையின் அறிவுரையின்படி, அப்பெருவிழா கத்தோலிக்கத் திருஅவை முழுவதும் நவம்பர் 20ம்தேதி கொண்டாடப்பட்டது. பின்னர், இயேசுவின் தூய்மைமிகு இதயம், புனிதர் மார்கிரேட் மரி அலக்கோக் அவர்களுக்கு திருக்காட்சியில் கூறியபடி, இயேசுவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவைத் தொடர்ந்துவரும் வெள்ளிக்கிழமையன்று இப்பெருவிழா சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

சந்திப்புகள்

மேலும், ஐ.நா.வின் வேளாண் வளர்ச்சிக்கான பன்னாட்டு நிதி அமைப்பின் (IFAD) தலைவர் Gilbert F. Houngbo, அர்ஜென்டீனாவின் புவனோஸ் அய்ரஸ் யூதமத ரபி Isaac Sacca அவர்கள் தலைமையில் 8 பேர், ஐரோப்பிய பாராளுமன்றத்தின் சோசலிச மற்றும், மக்களாட்சிக் குழுவின் தலைவர் Iratxe García Pérez அவர்கள் தலைமையில் 5 பேர், இவ்வெள்ளிக்கிழமை காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்துள்ளனர்.